எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 8 பிப்ரவரி, 2023

புருஷாயணம்

இத்தோடு எல்லாம் முடிந்தது
என்று நினைக்கும்போது
புதிய கவிதைகள்
பிறக்கத் தொடங்கி விடுகின்றன
புதிய வருடங்கள் போல,
ஒன்றுமே நடக்காததுபோல்
என்மேல் நீ பொழியும் காதலைப் போல,
விட்ட இடத்திலிருந்தே தொடங்கும்
நம் வாக்குவாதங்களைப் போல 😉
-- புருஷாயணம் 😉
 

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023

பிரம்புப் பூதம்

அடிப்பதற்குப் பிரம்பெதற்கு?
ஒரு கடினப் பார்வை போதாதா.
அதிலேயே நடுங்கி
விழுந்தவர்கள் நாங்கள்.
வேர்வையூறிக் கண்ணீர் வடிய
இரத்தம் கட்டிய கைகளோடு
பைக்கட்டுக்களைத் தூக்கி
நடப்பதன் கடினத்தை
பக்கத்து வகுப்பின்
தாமரையிடம் பார்த்த அன்று
மேஜை டிராயருக்குள் போட்டு
அறைந்து மூடினார்
எங்கள் நாலாம் வகுப்பின் சண்முகம் சார்.
அந்தப் பிரம்புகளை ஏன்
அலாவுதீன் பூதம் போல் உயிர்ப்பிக்கிறீர்கள்.

செவ்வாய், 29 நவம்பர், 2022

உச்சம்

அவளைப் பார்க்கும்போதெல்லாம் தோன்றுகிறது.. 


என் இயலாமையின் உச்சமாக


என் கழிவிரக்கத்தின் உச்சமாக


என் கனவுகளின் உச்சமாக..


சிலசமயம் என் வாழ்நாள் வெற்றியின் உச்சமாகவும் கூட.. !
 

திங்கள், 31 அக்டோபர், 2022

பணமும் மனமும்..

பணம் பேசும் உலகில்
மனம் பேசுவதில்லை
மனம் பேசுவது
பணத்தின் காதுகளில் விழுவதில்லை
இரண்டிற்கும் உறவில்லையெனத்
தெரிந்தும் ஏங்குவது அறியாமை.
 

வியாழன், 29 செப்டம்பர், 2022

சுத்தம்

தட்டவரும் கழி தாண்டி
உயிரைக் கையில் பிடித்து
எட்டுக் கால் பாய்ச்சலாய்த் 
தப்பி ஓடிக் கொண்டிருக்கிறேன்.
திரும்பிப் பார்த்தால்
ஒட்டுமொத்தமாய் என் வீட்டை
ஒழித்தழித்துவிட்டு
ஒட்டடை அடித்தேன் 
சுத்தமாகிவிட்டது வீடு எனப்
பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்
பிறர் வாழப் பொறுக்காதவர்கள்.
 
Related Posts Plugin for WordPress, Blogger...