எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 30 அக்டோபர், 2013

காடு வெட்டிப் போட்டு.

முந்திரிக்காடுவெட்டிப் போட்டு
வீடு கட்டினோம்.
கரம்பைக் கல் உடைத்து
மாளிகை அமைத்தோம்.

பர்மாவிலிருந்து தேக்கு
ஆத்தங்குடிக் கல்
பித்தளைத் தாழ்வாரம்
பெல்ஜியம் கண்ணாடிகள்
ரவிவர்மா ஓவியங்கள்.

மலேயாச் சாமான்கள்
வெள்ளி சுமந்த பெட்டகங்கள்
பட்டாலையிலிருந்து இரண்டாங்கட்டுவரை
ரத்தினக் கம்பளங்கள்

சிறு பிள்ளையில்
வளவைச் சுற்றிக்
கீழ்வாசலில் இறங்கிக்
கல்லா மண்ணா விளையாடி இருக்கிறோம்.

ஒரு நாள் செட்டிநாட்டுக் கோட்டைகளும்
கல்லாய் மண்ணாய் மூடிக் கிடக்குமென்றோ
ப்ளாட்டுவீடுகளாய் ஆகுமென்றோ
கிஞ்சித்தும் கவலையில்லாமல்.

செவ்வாய், 29 அக்டோபர், 2013

போர்

ஏதோ ஒன்றிடம் இருந்து
எதையோ மீட்கப்
போராடிக் கொண்டிருக்கிறோம்.
சமயத்தில்
நம்மிடமிருந்து நம்மையே.

திங்கள், 28 அக்டோபர், 2013

முகச் சொட்டு

ஞாபகங்களில் இருந்து
சொட்டுச் சொட்டாய்
இறங்குகிறது உன் முகம்.
கலங்கிக் கலங்கிச் செல்லும்
சேற்றின் வண்ணங்களின்பின்
முகம் தீட்டி அலைகிறது மனம்.

வெள்ளி, 25 அக்டோபர், 2013

தந்திக்காலம்



மோனத்தில் உறைந்து

மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறது வீணை

தந்திக்கால ஞாபகங்களை.

வியாழன், 24 அக்டோபர், 2013

தீந்தேன்..

தேன் முத்தம் கொடு என்றால்
தீ முத்தம் கொடுக்கிறாள்.
தேன் தீ..
தீந்தேன்...

செவ்வாய், 22 அக்டோபர், 2013

அவனின் அவள்.

ஊருக்குச் சென்றிருக்கலாம்.
கிராமத்துத் திருவிழாவுக்கு,
குழந்தைப் பேறுக்கு,
தாய் வீட்டில் சீராட,
குழந்தைகள் விடுமுறைக்கு,
உறவினர் திருமணத்துக்கு..

குடியும் கும்மாளமுமாகச்
சிரித்துக் கொண்டாடும்
அவனின் அவள்
ஒரு வேளை
மீளமுடியாத் துயிலில்
ஆழ்ந்திருக்கலாம்,
ஒரு கல்லறையில்..
காற்றில் கலந்து இருக்கலாம்
ஒரு பிடி சாம்பலாக..
என்ன செய்கிறோமென விளங்காத
அவன் சிரிப்பின்பின்னே
எங்கு செல்வது எனப் புரியாமல்
ஒளிந்து கிடக்கிறது
அவளுக்கான காதலும்
காமமும் பசலையும்..

பூரண இரவு.

இருள் ததும்புக் காடு
மேகம்வழி கசியும் நிலவு
மின்னி மறையும் மின்மினிகள்..
காதுக்குள் ரீங்காரமிடும் சில்வண்டுகள்
சுவாசக் காற்றோடு கலந்த பவளமல்லி..
இத்தனையோடும் இழைந்து கிடக்கிறது
தப்பித்தோடும் ஒரு கரப்பானும்
பொறிக்குத் தப்பிய எலியும்
கும்மாளமிடும் கூகையும்
கும்மிருட்டில் பறக்கும் வௌவாலும்
நிறைந்த ஒரு பூரண இரவு.

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

ஓரிரவு.

சிணுங்குகிறது மாலை..
செங்கதிராய்ச் சிவக்கிறது
முத்தமிடும் சூரியனோடு வானம்.
இருள் முக்காட்டில் ஒளிந்து
பால்நிலவைச் சுமந்து வருகிறது மேகம்.
புரண்டு துயின்று எழும்பி
நீலவெள்ளை ஆடையில்
மஞ்சள்பூசிக் குளித்தெழும்புகிறது காலை.

சனி, 19 அக்டோபர், 2013

சமன் குலைவு .



கண்ணாடி ஜன்னலின்

பந்தடித்த ஓட்டையில்

சீறிப் பாய்கிறது வெளிச்சம்.

சமன்குலைந்த மனதுள்

ஆறுதல் வார்க்கும்

சொற்றொடராய்.

புதன், 16 அக்டோபர், 2013

குட்டிப் பட்டாசு.

மத்தாப்பூச் சிரிப்பில்
சக்கரமாய்ச் சுற்றுகிறது உள்ளம்.


சாட்டையாய்ச் சுழலும் ஜடையில்
சரம் சரமாய்ப் பூத்து வெடிக்கிறது முல்லைச்சரம்.


பொட்டு வெடியா, புஸ்வாணமா,
பாம்பு மாத்திரையா , பென்சில் வெடியா
பொறிந்து பொறிந்து போகிறது காலம்.


ஓளிதீட்டும் வெளிச்சத்தில் ஓவியமாய்
பல்காட்டிச்சிரிக்கும் உன்னைப்பார்த்து
அதிர்வேட்டைப் போல அதிரும் மனம்.


சனி, 12 அக்டோபர், 2013

காத்திரம்

கருந்துளைக்குள்
விழுகிறது வெளிச்சம்.
கர்ப்பம் கொள்கிறது
அக்கினிக் குழம்பு.
நெருப்புத் தேன் சிதறப்
பொங்கி விரிகிறது லாவாப்பூ.
மடல் உதிரும் பூவைச்
சாம்பலாக்குகிறது மழை.
கரைந்து ஓடும் கருஞ்சாந்தில்
ஒளிவதற்கு இடமில்லை
சிவப்பும் கருப்பும் காத்திரமும்
தினம் பிரசவிக்கிறது மலை.

வெள்ளி, 11 அக்டோபர், 2013

ஐயறவு.



கதவிடுக்கில் மாட்டிய பல்லி

காலில் சிக்கிய நாய்வால்

துடைப்பத்தில் நசுங்கிய கரப்பான்

ஐயறவாக்குகிறது யதார்த்தத்தை.

தப்பித்தல்

தவிர்க்க முடியவில்லை
அதன் வலை விரிப்பை.
எட்டி எட்டி எட்டிய உயரம் வரை
தட்டித் தீர்த்தாயிற்று.
எச்சிலைத் துப்பித் துப்பி
மூலைகளைக் கைப்பற்றும்.
மையத்தில் முயங்கி
பிடிபட்டதைச் சருகாக்கும்.
எட்டக் கால் பதித்தோடி
விளையாடுகிறததன் உலகில்.
எத்தனை முறை பிடித்தாலும்
தப்பியோடுகிறது சிலந்தி.

வெள்ளி, 4 அக்டோபர், 2013

கனம்



கனம் தாளாமல்

அழுது கொண்டிருக்கிறாய்

நான் தானமளித்த என்

இதயத்தை சுமந்தபடி.

Related Posts Plugin for WordPress, Blogger...