எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 28 நவம்பர், 2012

ஈசான மின்னல்

எல்லைக் காளிகள் 
ஈசானத்து மின்னல் நடனக்காரனின் 
பூதகணங்களாய் உருப்பெறுவது .,
பாண்டிக்கரை முனிகளால்
திருவரங்கத்து மணி ஓசை 
திருமலைநாயக்கனுக்கு எட்டுவது.

தினச்சண்டை

கோட்டான்கள் ஒலிக்க
நிலவுக் கேடயத்தோடு
நகர்கிறது இரவு.

பொருதவரும்
சூரியனை
வழிமொழிகிறது சேவல்.

பாயும் ஒளிவாளை
நிலவில் ஏந்திப் பிடித்து
உள்மறைகிறது இரவு.

கூடடையும் பறவைகள்
இந்த தினச் சண்டையைப்
புதுப்பிக்கின்றன மாலையில்.

செவ்வாய், 27 நவம்பர், 2012

சொப்பன வாழ்வில் மகிழ்ந்து (” அவர் ”செல்வகுமார் கேட்டதற்காக எழுதியது)

அல்லும் பகலும் விரும்பு
ஆசையின் தூரம் கடந்து
புறப்படு உடனே விரைந்து
புவியின் ஈர்ப்பைக் கடந்து

சொல்லும் செயலும் தொடங்கு
செல்லும் திசையை அறிந்து
உழைப்பை உணர்வை வழங்கு
உயர்வாய் என்றும் உயர்ந்து.

விழுந்து கிடந்தாலும் முளைப்போம்
விழுப்புண் என்றே நினைப்போம்
வெட்டுக்காயமும் தழும்பும் சகஜம்
விடாமல் போராடுவதே நிஜம்  .

விண்ணும் கோளும் தாண்டி
வருவோம் உண்மை தோண்டி
எண்ணும் எண்ணம் வெற்றி
எங்கும் எதிலும் வெற்றி

அரும்பு இதழுக்காக சிகரங்களில் ஏறி விண்ணைத்தாண்டி.

சிகரங்களில் ஏறி விண்ணைத்தாண்டி
------------------------------

சிகரங்கள் தொட
மலைகளில் ஏறுவோம்..
வானமும் மேகமும்
தொட்டுவிடும் தூரம்தான்..

முயற்சி செய்வோம்..
நம்பிக்கை கொள்வோம்
தடைகளைத் தகர்த்தெறிவோம்...

தீவிரமாய் உழைப்போம்
குறிக்கோளோடு செயல்படுவோம்
நினைத்ததை அடைவோம்...

நம்மைப் படைத்து
உயிர் கொடுத்தது தெய்வம்...
ஊனுடம்பு கொடுத்தது தாய்தந்தை..
உருவாக்கியவர் ஆசான்கள்...

நம்மைச் செதுக்கியவர்களுக்கு
நாம் நன்மையைக் கையளிப்போம்...
நாளனத்தும் நமது...
நல்லோரனைவரும் நம்மவர்...
நல்ல எண்ணங்கள் அனைத்தும் நமதாம்...

வெற்றிப்  படிக்கட்டுக்கள்
நம் வாயிலிலிருந்தே
தொடங்குகின்றன...

நல் வினையாற்றுவோம்..
வெற்றியடைவோம் ..
விண்ணைத்தாண்டியும்..
வெற்றி படைப்போம்...!!!

அரும்பு இதழுக்காக 2010 இல் எழுதியது.

விசுவாசம்

அங்கிகளுக்குள்
எம்மை மறைத்து
செயலற்று இருந்தோம்..

உமது கண்கள் வழி
கருணை பொங்கி..
எமை அணைத்து..
அரவணைத்து..

எங்கள் துயரை எல்லாம்
எம்மால் சுமக்க
முடியாது என்று
எமக்காய் சிலுவையாக்கி
சுமந்த எம்பெருமானே...


மூன்றாம் நாளில்
முளைக்கும் விதைபோல்
கிளைத்தெழுந்த
எங்கள் பெருமகனே .,

வாழ்வின் நம்பிக்கையே..
எங்கள் நன்மை விளைந்தது..
உங்கள் உயிர்த்தலில்..

அன்பின் தேவே..
நல்லவற்றில்
விசுவாசம் பிறந்தது.
.
நோயுற்றிருந்தோம்..
வலிகளைச் சுமந்தீர்..
தெளிவற்று இருந்தோம்..
ஒளியாய் வந்தீர்..

தனிமையில் இருந்தோம்...
துணையாய் நின்றீர்...
நீதி நாளுக்காய் காத்திருக்கிறோம்...
இரட்சிக்க வருவீர்...

எல்லா நம்பிக்கைகளிலும்
நீவீர் பிறந்து கொண்டே இருக்கிறீர்..
எம்மை ஆறுதல் படுத்தவும்..
ஆற்றுப் படுத்தவும்..

நன்மையின்., அன்பின்.,
விசுவாசத்தின் வடிவே..
உமது வருகைக்காய்..
பூங்கொத்துக்களுடன் நாங்கள்...
வந்தெமை ஆட்கொள்க விரைவில்...!!!
Related Posts Plugin for WordPress, Blogger...