எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 31 அக்டோபர், 2011

கொத்தடிமை..??

கொத்தடிமை..??
************************
யூனியன் இல்லை..
போனஸ் இல்லை..
கிம்பளம் இல்லை..

வரையறுக்கப்பட்ட
வேலை நேரம் இல்லை..
பொழுது போக்கவும்..

ஊருக்கு முன் விழித்து
உளைச்சலோடு உழைத்து
ஊரடங்கி உறங்கி.,

உலக நடப்பு தெரியா
இவர்கள் கொத்தடிமைகளோ
இல்லை வங்கி ஊழியர்களாம்..

வெள்ளி, 28 அக்டோபர், 2011

சிதறல்கள்..

இனிப்பு வியாதி வரும் என
சிரிக்கமாட்டேன் என்கிறாய்.
இரத்த அழுத்தம் துள்ளும் என
பேசமாட்டேன் என்கிறாய்.
இதயம் படபடக்கும் என
பார்க்கமாட்டேன் என்கிறாய்.
*************************************
நீர்க்குமிழி, பாய்மரக்கப்பல்,
காலறுந்தபட்டம்
இதெல்லாம் தட்டாமாலையாய்
சுற்றிச்சுற்றி..
உன்னைச் சுற்றி நான்
சுற்றுவது போல்.
**************************************
சேற்றையாவது வீசு
சேர்த்துக்கொள்ளாமல் வி்டாதே..
திட்டிவிட்டுப் போ
கொட்டிவிட்டுப் போ
அந்தத் தழும்புகள்
சுகமானதாய்..
**************************************
நீள் வெளியில் காற்றாகி
இழுத்துச் செல்.
முடிவில்லாத வெளியில்
இறக்கைகளில்லாமல் தவழ்வது.
யாதுமற்ற ஒன்றாகி
யாதுமாய் ஆவது.

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

தீலீபன் முஃபாரிஸ்

உன் சிரிப்பில் முத்துக்கள்

சிதறிக்கொண்டே இருக்கிறது.

கோர்க்க முடியாமல் தடுமாறும் நான்..
******************
உன் சிரிப்பில் இருந்து
அமுதம் வழிந்து கொண்டே
இருக்கின்றது

சாகாவரம் பெற்றுவாழும்
ஆசையில் நான் அதை
அருந்திக்கொண்டே
இருக்கின்றேன்
திலீபன்
உன் சிரிப்பு பெருகிக் கொண்டே போய்
என் முகத்திலும் புன்னகையைப்
பற்ற வைக்கின்றது...

நிமிர்ந்தபோது
ஒரு கோடிச் சூரியன்கள்...
நம்மைச் சுற்றிலும்...

ஆனந்தம் அலைஅலையாய்
உன்னிடம் இருந்து என்னிடம்
பெருகி வருகின்றது...

பிரபஞ்சத்தின் பெருவெளியில்
உன் சிரிப்பே தினமும்
என் சந்தோஷ உணவாக...

நீடூழி வாழ்க கண்மணி..!!!

சனி, 22 அக்டோபர், 2011

நிழல்

சாலை விளக்குகள்
மஞ்சள் மழை பொழிகின்றன.,
நண்பர்களைக் கடப்பதுபோல்
நனையாமல் கடக்கிறான் அவன்.,
என்னையும் இழுத்து.

இருட்டு மரங்களை
அலுவலக வேலைகளைப்போல
அங்குலம் அங்குலமாகக்
கடக்கிறான்.,
அவனுள் புதையுண்டு
நானும் கடக்கிறேன்.

உச்சியில் முத்தமிட்டு
நிலவு தழுவுகிறது அவனை
நெகிழ்ந்த காதலியைப் போல்.
பின்தொடரும் என்னைத் தழுவாததால்
கோரைப்பல்லும் கொம்பும்
முளைக்கிறது எனக்கு

வெள்ளி, 21 அக்டோபர், 2011

தங்கைகளுக்கு... அக்கா குயிலின் கீதம்.

அக்காக்களும் தங்கைகளும்
அவ்வப்போது செல்லமாய்
அடித்துக் கொள்வதற்கும்
அடித்துச் சொல்வதற்கும்.

அக்காக்கள் தவறுகளுக்கு
அப்பாற்பட்டவர்கள் அல்ல.
அக்கக்கோ குயிலின்கீதமாய்
ஏக்கமும் சோகமும்.

வலிமையாய் இருக்கிறாய்
வாளெடுப்பதில்லை நீ
இருந்தும் வாளாவிருக்கிறேன்.,
வலிமையற்று உன்முன்.

யாரும் இருந்தும் இல்லாமலும்
வாழ்ந்து பார்ப்பதே வாழ்க்கைதான்.
உனக்குப்பின்னும் உலகம் இருக்கிறது
உறைந்துபோய்விடாமல் உயிர்ப்போடு..
Related Posts Plugin for WordPress, Blogger...