ப்ரிய நண்பனே !
வெற்றுப் பார்வையை
உதறிவிட்டுக்
காற்றுடன் வாசகம் பேச
எப்படி முடிகிறது உன்னால் ?
சூன்யத்தில் பார்வைகுத்தி
சூன்யத்திலேயே மீண்டு
யாருக்காகச் செய்கிறாய் தவம் ?
எந்தச் சூன்யத்துள்
வரையப்பட்டுக்கொண்டு
இருக்கிறாள் உன்
ப்ரிய தேவதை. ?
நண்பனே’
விழித்துப் பார்
நம்மைச் சுற்றிலும்
மரங்கள் மரங்கள் மரங்கள்
சின்னக் கீற்றுகளாய்
வெளிச்சங்கள்
இலைகளும் பூக்களும்
போர்த்திய வெற்று மரங்கள்.
ஏனிந்த சோகம்பீடித்த
சிறுவன் பார்வை
ப்ரியங்களைப் புரிந்துகொள்ளாத
பார்வை பார்க்காதே
நண்பனே
கூட்டை உடைத்து வெளியே வா
ஸ்நேகிதம் புரிந்துகொள்.