எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 31 அக்டோபர், 2014

மிச்சமானவை.

**நாம் வாழ்வது ஒரு சொசைட்டி. அதனால் அதற்குப் பணிந்துதான் நடக்கவேண்டும். சமுதாயம் ஒரு சாக்கடையென்றால் அதில் நெளிந்து திரியும் புழுக்கள்தான் நாமும்.


**கண்ணுக்குக்கூட இப்போது தண்ணீர்த் தட்டுப்பாடு வந்துவிட்டது. ஏனெனில் வெளியிடும் நீரைத் தானே உறிஞ்சிக் குடித்து விடுகிறது.

**என் பிருந்தாவனத்தில் ஒரு நந்தகுமாரன் காதலை யாசித்துப் பிச்சைக்காரனாகிவிட்டான்.
**கலியுகக் கிருஷ்ணர்களிடத்தில் துரோபதைகளின் “ அரைத்”துணிகள் அபகரிப்பு. 


**சூரியன் இப்படிச் சுட்டுப் பொசுக்க எங்கிருந்து கற்றுக் கொண்டான். ஓ. இலங்கையரிடமிருந்து களவாடியதோ. 

**வருணன் ஏனிப்படி கண்ணில் படவே மாட்டேனென்கிறான். ஓ ஈழத்தில் தவமிருக்கும் இந்தியச் சீதைகளிடம் தஞ்சம் புகுந்துவிட்டானோ.

**மனக்குளத்தில் மண்ணெடுப்பு. 

**துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே. சோகம் பொல்லாதே. தோல்வி வெல்லாதே.

-- 82 ஆம் வருட டைரிக்கிறுக்கல்கள்.  

வியாழன், 30 அக்டோபர், 2014

வெய்யில் - 4



மரங்களுக்குள் புகுந்து
வெவ்வேறுவிதப் புள்ளிக்கோலமாய்ப்
பச்சைய வண்ணமிட்டு
உச்சிமோந்து பூப்பூத்துச் செல்கிறது.

ஆதிக்கக்காரர்கள் போல்
அடித்துச் செல்கிறது
வெங்காற்றையும்
தாகத்தில் சிக்கிய மனிதர்களையும்

தினம் கிடைக்கும்
ஒப்பற்ற தங்க வெள்ளம்
பூமியைப் புதுக்கவும்
புதுப் பயிர் கிளைக்கவும்
புது உயிர் களிக்கவும்

வெய்யில் - 3



பூமியெங்கும் உழுது செல்கிறது.
வயலானாலும் 
பழைய கோட்டையானாலும்
மலையானாலும் 
மூடிய இலைகளானாலும்
பாரபட்சமில்லாமல்
அச்(ட்)சரேகை தீர்க்கரேகை
பாகைகள் அறியாமல்
வெய்யில் கிடப்பவர் வர்ணமெல்லாம்
உறிஞ்சிக் கறுக்கி
ஒரு மஞ்சள் நிற ராஜாளியைப் போல்
தினம் பூமியின்மேல்
சிறகு விரித்துக் கவிழ்ந்து செல்கிறது.

புதன், 29 அக்டோபர், 2014

வெய்யில் - 2



வெய்யில் - 2

*மஞ்சள் அருவியைப் போல
வீழ்ந்துகொண்டே இருக்கிறது .
கருமேகங்கள் பாறைகளாய்
சூழ்நாள் தவிர.

செவ்வாய், 28 அக்டோபர், 2014

வெய்யில் - 1



வெய்யில்:-

விடியலில் ராஜகுமாரனின் அணைப்பாய்
நண்பகலில் ராட்சசப் பிடியாய்
மாலையில் வானப் ப்ரஸ்த விலகலாய்..

மதியத்தில் பருவப் பெண்ணாய் 
பொன்னிறக் கதகதத்து
வீர்யக் கதிர்பாய்ச்சி 

மாலையில் பருவம் தப்பும் பெண்ணாய்
குளிருக்குள் ஒடுங்கி
இரவுக்குள்  துயில்கிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...