எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

விநாயகர் துதி :-



விநாயகர் துதி :-

விநாயகன் பேர் கொண்டு வினைகள் பல தீர்த்திடுவாய் !
விண்ணிற்கும் மண்ணிற்கும் முதலான பெருமானே !

ஆனை முகத்தோனே ! ஆ(யா)ர்க்கும் நலம் புரிந்திடுவாய் !
அன்னை பார்வதி போல் அழகுப் பெண் தேடுகின்றாய் !

உன்னையே கதியென் றுய்யுமுன்(உன்) அடியார்க்குத்
தந்தேன் அபயமெனத் தன் கரம்  நீட்டிடுவாய் !

பெருமை பல கொண்டிருந்தும் சிறுமைபல புரிவோர்க்கும்
பொறுமையினால் அமைதி கொண்டு பெரும் நலனே நல்கிடுவாய் !

-- 80 ஆம் வருட டைரி. 

இரவின் மடியில்



இரவின் மடியில்

முடிந்துபோன கதைக்கு
இரண்டாவது பாகம் அவசியமில்லை.
இருள் தேவன் சந்நிதிக்கு
இரட்டை விளக்கு தேவையில்லை.
அச்சாணி முறிந்த வண்டிக்கு
இரட்டை மாடு தேவையில்லை.
அஸ்திவாரமில்லா மனக்கோட்டைக்கு
அலங்காரங்கள் அவசியமில்லை.
பாம்பு நாக்கு மனிதனுக்கு
விஷம் வேண்டியதில்லை.
பவுர்ணமி நிலவுக்கு
வெளிச்சம் வேண்டியதில்லை.
மீண்டும்
மீண்டும்..
இருளின் ஆதிக்கத்தில்
தனிமை என்னை
மணம் செய்கின்றது.
கண்ணீர் என்னை
முத்தமிடுகின்றது.
கண நேரச் சலனங்கள்
என்னை அள்ளி
அணைக்கின்றன.
முடிவில் பயமென்னைப்
பூரணமாய் ஆட்கொண்டுவிட்டது.
உதய தீபமாய் உன்னை
எதிர்பார்த்து
அஸ்தமன இருளில்
அடிபணிந்தேனே
நானொரு முட்டாள். !
என் கண்கள் இன்றும்
உப்புமலர்களையே உதிர்க்கின்றன.
 -- 80 ஆம் வருட டைரி.

திங்கள், 18 ஏப்ரல், 2016

நட்சத்திரங்கள் :-



நட்சத்திரங்கள் :-

நிலவுத் தேர் அசைந்துவரும்
நிலாக்காலம்
கறுப்பு வெல்வெட்டில்
பதித்தெடுத்த
வைரக் கற்கள்.
சந்திரன் உரோகிணியை
மணக்கும்போது
தேவர்களால் தூவப்பட்ட
பூத்தூவல்கள்.
சிறுகுழந்தை
சிந்திய
சோற்றுப் பருக்கைகள்.
மகிழ்வுடன்
சொரியப் பெற்ற
மத்தாப்பூச் சிதறல்கள்.
நகரத்து நியான்
விளக்குகளின்
பிரதி பிம்பங்கள்.
மனமெல்லாம்
மகிழ்ச்சி பொங்க
மணமேடை பார்த்திருக்கும்
மணப்பெண்ணின்
கண் சிமிட்டல்கள்.
பாண்டியக் கடலில்
பதிந்துள்ள
முத்துக் குவியல்கள்.
தாயை இனங்கண்டு
கொண்ட சேய்களின்
பல்வரிசை மின்னல்கள்.
கவர்ச்சிக் கன்னியின்
ஆடை மினுக்கல்கள். 

-- 80 ஆம் வருட டைரி. 

ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

வீண் பிடிவாதம் :-



வீண் பிடிவாதம் :-
உன்னுடைய பிடிவாதமே
உனக்குக் கம்பீரத்தை அளிக்கின்றது.
உன்னுடைய பிடிவாதமே என்னை
உன்னிடம் நெருங்கவிடாமல் செய்கிறது.
உன் ஈர்ப்பு சக்தியே
உன்னுடைய பிடிவாதம்தான்.
உன் பிடிவாதத்தை நீ எப்போதும்
யாருக்காகவும் விட்டுக்
கொடுத்து விடாதே !
அது என்னை
உன்னிடமிருந்து
விலக்கி விடும்.
“பிடிவாதக்காரர்களே
எப்போதும் ஜெயிக்கிறார்கள்
விட்டுக் கொடுப்பவர்கள்
ஏமாளிகளாகி விடுகிறார்கள்.”
அது உண்மைதான்.
உன் பிடிவாதம் ஒரு
சிறிய
மிகச் சிறிய
காந்தத் துண்டுதான்
அதனால் மட்டுமே
ஈர்க்கப்படும்
இரும்புத் துண்டு நான்.
உன் பிடிவாதம் என்னும்
காந்தத்தில் ஒட்ட நினைத்த
இரும்பு நான்.

-- 82 ஆம் வருட டைரி. 

சனி, 16 ஏப்ரல், 2016

”அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் “



”அன்பிற்கும் உண்டோ
அடைக்கும் தாழ் “ என்பர்.
ஆனால் என் அன்பிற்கு , 
அன்பின் எல்லைக்கு
உன் வரையில்தான் தாழ் இல்லை !

ஆரம்பமும் உன்னிடம்,
அடங்குவதும் உன்னிடம்..
உன் உண்மை அன்பு
எனக்கு மட்டும் சொந்தமானது.

என் உள்ளத்தில் அன்றுமுதல்
இன்று வரை இந்த நிமிடம் வரை
என்னை நீதான் ஆட்கொண்டு இருக்கிறாய் !

என் சுயநலமான அன்பை
அன்பின் வெறித்தனத்தை
வெறுக்காதே !
என்னை வெறுக்கக் கற்றுக் கொள்ளாதே. !

இனியும்
இந்த உடல்
நெருப்பில் மூழ்கும்வரை
சுவைத்தறிந்த
உனதன்பை மறக்காது. !

எனக்கு இனியும்.
பரிசுத்தமான,
எனக்கே உரிய,
எனக்கு மட்டுமே உரிய
தூய அன்பைப்
பரிசாக வைத்திரு. !

-- 83 ஆம் வருட டைரி

Related Posts Plugin for WordPress, Blogger...