எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

ஏலாமை.



மனசு முழுக்கக் கஷ்டம் சங்கடம் ஆயாசம் பயம்.
கண்ணிமையை லேசாக அசைத்தாலே
கரகரவென வழியும் கண்ணீர்.
இப்படி நான் சோர்ந்துபோனால்
என்னை யார் உற்சாகப்படுத்துவார்கள் ?
மறைந்து மறைந்து வெடித்துச்சிதறும் உள்ளன்புகள்.
எனக்குக் கோபமில்லை. இது இயலாமை.
பிரியமானதைப் பெறமுடியவில்லையேயென்ற ஏக்கம்.
மனசு முழுக்கக் கஷ்டம் சங்கடம் ஆயாசம் பயம். 

-- 82 ஆம் வுடைரி

சனி, 19 டிசம்பர், 2015

புரியுதா சேதீ ..!



புரியுதா சேதீ ..!

அடி தோழீ..!
உனக்குத் தெரியுமா சேதி.!
”அமைதி காத்தான் ”
தெருவோரத்துப் பெட்டை
ஆங்காரமாய்க் கொத்திப்
பழிவாங்கிவிட்டதாம்
வெள்ளைச் சாவலை.!
“பொறுத்தார் பூமியாள்வார் “
என்பது பொய்ப் பழமொழி.
”கொத்தினார் கொண்டை( சேவலை )ஆள்வார்
என்பது புதுமொழி.
ஏனடி தோழி..!
புரியுதா சேதீ.. !

--83 ஆம் வுடைரி

நட்புத்தத்துவம்.

என்னை உனக்குப் பிடிக்கும்
உன்னை எனக்குப் பிடிக்கும்
நம் இருவரின் ஜாதிக்கும் நம்மைப் பிடிப்பதில்லை.
ஒருவரை வைத்து ஒருவரை எய்துகொண்டிருக்கிறது
தன் வெடிப்பொருளாய்.
வெடித்துச் சிதறும்போதும் உணர்கிறோம்
நீ வேறு நான் வேறு நட்பு வேறு அல்ல
திருத்தியமைக்கப்படாத யதார்த்தமும்
எண்ணப்போக்குகளும்தான்.

வெள்ளி, 18 டிசம்பர், 2015

சில மாறுதல்கள் அவசியம் தேவையோ ?



சில மாறுதல்கள் அவசியம் தேவையோ ?

இந்த அதீத சிந்தனைகள் எனக்கு ஏனிப்படி ? ( அவை என்னவென்று எனக்கே புரியல ) ஒரு சாதாரண வாழ்க்கை வாழவேண்டும். எல்லாவற்றைப் பற்றியும் கவலைப்பட்டுகொண்டு, சாதாரணமாய்.

எப்போதும் என்னுள் ஏனிப்படித் துடித்துக் கொண்டிருக்கின்றது. எதுவோ ஒன்று. அது ஆன்மத் துடிப்பா ? விளங்கவில்லையே. இந்த வயதில் ஆன்மத் துடிப்பு வருமா ? சாத்யமா ? எதிலும் ஒரு நிறைவு இல்லை. வாழ்ந்தது போதும் என்ற எண்ணம் இல்லை. நிறையிலும் குறையிருப்பதுபோல் எல்லாம் நிறைந்து நான் அதற்குத் தகுதியில்லை என்பது போலொரு எண்ணம்.

வாய்மட்டும் வறட்டுத்தனமாய், அசட்டுத்தனமாய் சொற்களையும், புன்னகைக் குவியல்களையும் நிறைத்துக் கொண்டிருக்க, மனசு மட்டும் குரங்காய் எட்டாத மரக்கிளையை எட்டிப் பிடிக்கத் தாவிக் கொண்டிருக்க, கிடைத்ததை எல்லாம் நழுவவிட்டு ஏதோ ஒரு தனிமைக்காக மன சூன்யத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து அனுபவிக்க ஆசைப்படுகின்றது

-- 85 ஆம் வுடைரி 

நான் யார் ?



நான் யார் ?

நான் ஒரு பெஸிமிஸ்டா ? இல்லை ஆப்டிமிஸ்டா ? அதுவும் இல்லை பின் நான் யார் ? சுயநலவாதியா ? சந்தர்ப்பவாதியா ? பொதுநலவாதியா ? எதுவுமே இல்லை. எல்லாம் கலந்த கலப்படமா ?

நான் கோபங்களின் குவியல். எனக்குப் புரிகின்றது. அகங்காரத்தின் பிறப்பிடம். உணர்கிறேன். எரிச்சல்படுவதில் முதலிடம். பொறுமையற்ற தன்மை. எதற்கெடுத்தாலும் ஒரு சின்னக் குண்டூசிக்காக அலட்டிக் கொள்ளும் குணம். இது மாறாதா. ? ஒரே சமயத்தில் எப்படி என்னால் இரு வேறு வேஷங்களைப் போட முடிகின்றது.

மனசுள் குமுறும் எரிமலையை மறைத்துக் குளிர்வார்த்தைகளாகவும், மனசுள் ஒன்றுமில்லாமல் வெளிக்குச் சுடுவார்த்தைகளைக் கொட்டக்கூடியவளாகவும்.

ஒன்றுமட்டும் நிச்சயம். நான் யதார்த்தவாதியல்ல.  BECAUSE I AM TAKING THINGS VERY SERIOUSLY.

ஆத்மார்த்தமாகவும் சிந்திக்கிறேன். ஆன்மத்தேடுதல் யக்ஞத்தை அலசிப் பார்க்கின்றேன். அடுத்த வினாடியே தலைகீழாய் மாறுகிறேன். நானொரு கொள்கைவாதியல்ல. ஏனெனில் ஒரு கொள்கையிலும் நிலைத்து நிற்க மாட்டேன். தனிக் கொள்கையும் கிடையாது. மற்றவர்களின் திருப்திக்காக நானும் நடிக்கின்றேன். திருப்தியாக இருப்பதாகக் காட்டிக் கொண்டு.

-- 85 ஆம் வுடைரி

Related Posts Plugin for WordPress, Blogger...