எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 13 ஏப்ரல், 2022

பாவனைப் பூனை

கால்மேல் கால் போட்டு
அமர்ந்திருந்தான் ஒருவன்
அவனுடைய பாவனைகளைக்
கவனிக்க தொடங்கினேன்.
கண்ணாடிப் பார்வைக்குள்
காகிதத்தை மேய்ந்து கொண்டிருந்தான்.
மோவாயில் கை வைத்திருந்தான்
இன்னொருவன்.
செல்போனைத் தேய்த்துக் கொண்டிருந்தாள்
ஒருத்தி.
கூரிய பார்வையில்
கூட்டத்தினரைப் பார்த்துக் கொண்டிருந்தான்
மற்றொருவன்.
மா மரத்தின் பக்கத்தில் உள்ள
மதிலில் அமர்ந்து
எங்கள் அனைவரின் பாவனைகளையும்
பார்த்துக் கொண்டிருந்தது
ஒரு பூனை.
 

வியாழன், 7 ஏப்ரல், 2022

ஊரும் மனிதர்கள்

மரவட்டையாய் ஓடும்
ரயிலுக்குள்
எறும்புகளாய் ஊரும் மனிதர்கள்.
ஒவ்வொரு புகைவண்டி நிலையமும்
எறும்புகளைச் சூல்கொண்ட
புற்றுக்களாய்
நகரத்தின் தெருக்களில்
வாழ்வுத் தேட்டையில் அலைந்து
சூலுக்குள் மறைகின்றன எறும்புகள்
சூலைச் சுற்றியுள்ள பொந்துகளில் சதாநேரமும்
தேனடைக்கான கனவுகளோடு வாழ்ந்து
மரிக்கின்றன எறும்புகள்

 

புதன், 12 ஜனவரி, 2022

இளந்துளிர்ப் பிறப்பு.

பழைய பைகளைப் போல் 
சுருங்கிக் கொண்டிருக்கிறது தோல். 
விரிந்திருக்கும் விழிகளில் 
கூம்பு இருளாய்ப் படிகிறது வானம். 
விரல்களின் தொடுகையில் 
முதிர்ந்த செல்கள் 
வெண்துகளாய்ச் சிதறுகின்றன. 
கடவுள் துகளோடு 
கலக்கத் துடிக்கிறது ஆவி. 
பின்னுமொரு பிறவியெடுத்தால் 
பக்கத்துத் தோட்டத்துப் பெரு மரத்தின் 
இளந்துளிராய் விரிய ஆசை
 

புதன், 22 டிசம்பர், 2021

உதிர்தல்


கற்களின் மேல் குவியலாய்
உதிர்கின்றன இலைகள்
மேலாக உதிர்ந்த பூவொன்றும்
தன் அஞ்சலியைச் செலுத்துகிறது.

 

ஞாயிறு, 14 நவம்பர், 2021

வளியும் ஒளியும்

சூரியனாய் அமர்ந்திருக்கிறாய்
உன் பக்கமிருக்கும் நிலவும்
சுற்றிலும் கிடக்கும் தாரகைகளும்
மறைந்து விடுகிறார்கள்.
யாருமறியாமல்
காந்தக் கண்களால்
என்னைக் கவ்வி எடுத்து
ஒளிப் பறவையாய்ப் பறக்கிறாய்
உன் பிரகாசத்தில்
தோய்ந்த என் விழிகளும்
இரட்டைச் சூரியனாய்
ஒளிரத் துவங்குகின்றன.
அன்பின் கதகதப்பும்
கனிவின் வெம்மையும் சூழ
எங்குமே இருளற்ற
இன்னொரு பிரபஞ்சத்தில்
எனைக் கொண்டு சேர்க்கிறாய்.
வளியும் ஒளியுமாய்
அலகுகள் கோதி
வண்ணச் சிதறல்களோடு
வாழத் துவங்குகிறோம்.
 
Related Posts Plugin for WordPress, Blogger...