எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 15 நவம்பர், 2017

விநாயகர் துதி.

விநாயகன் பேர் கொண்டு வினைகள் பல தீர்த்திடுவான்
விண்ணிற்கும் மண்ணிற்கும் முதலான பெருமானே !
ஆனை முகத்தானே ! யார்க்கும் நலம் புரிந்திடுவான் !
அன்னை பார்வதிபோல் அழகுப்பெண் தேடுகிறான். !

உன்னையே கதி என்று உய்யுமுன் அடியார்க்கு
உதவினேன் எனக்கூறி ஐந்துகரம் நீட்டிடுவான்.
பெருமை பல கொண்டிருந்தும் பொறுமையினால் அமைதிகொண்டு
சிறுமை பல புரிவோர்க்கும் சிறப்புவரம் தந்திடுவான்.

உன்னையே கதியென்று உய்யும் முன்  ( உய்யும் உன் ) அடியார்க்கு
‘தந்தேன் அபயம்’ என ஐந்து கரம் நீட்டிடுவான்.

பெருமை பல கொண்டிருந்தும் சிறுமை பல புரிவோர்க்கு
பொறுமையினால் அமைதி கொண்டு பெரும் நலனே நல்கிடுவான்.

-- 8 . 4. 1981.

செவ்வாய், 14 நவம்பர், 2017

வள்ளியப்பன் நாமத்தான் எந்தன் தம்பி.


வள்ளியப்பன் நாமத்தான் எந்தன் தம்பி!
அள்ளி அள்ளிக் கொடுப்பான் எந்தன் தம்பி !
பள்ளி கொண்டி ருப்பான் எப்போதுமே
வள்ளி யைத்தான் மணப்பான் எந்தன் தம்பி !

ஓயாமல் சண்டை போடும் அன்புத்தம்பி!
ஆயாவீட்டு ஐயா பேருனக்கு அருமைத்தம்பி!
ஐயா போல் இருந்திடுவாய் அன்புத்தம்பி !
பொய்யே நானும் சொல்லமாட்டேன் ஆசைத்தம்பி !

பட்டப்படிப்பு படிப்பாயா எந்தன் தம்பி!
சட்டப்படிப்புப் படிப்பாயா எந்தன் தம்பி !
குடத்திலிட்ட விளக்குப் போல இருந்திடாமல் நீயும்
மடைதிறந்த வெள்ளம் போல துடிப்புக் கொள்வாயே!

டிஸ்கி :- இது என் சகோதரன் பாபு என்ற வள்ளியப்பன் என்ற சேவுகன் செட்டிக்காக அவன் பிறந்தநாளில் எழுதியது. . வருடம் நினைவில் இல்லை. 80, 81  இருக்கலாம். அவன் இப்போது இல்லை. 44 வருடங்கள் வாழ்ந்த அவன்  2013  ஏப்ரல் ஆறாம்தேதி இயற்கை எய்திவிட்டான்.

ஞாயிறு, 12 நவம்பர், 2017

சௌந்துவுக்காக..

நேரம் நகர மறுக்கிறது
நீ உப்புமூட்டை
விளையாடிய முதுகில்
அதுவும் இப்போது
கண்ணே
எங்கே சென்றாய் ?
கொல்லத்தின் சமையற்காரியக் கலக்கி
கிரைண்டரை நிறுத்தி
மிக்ஸியைத் தட்டிவிட்டு
குறுக்கே ஓடி
துணிகளைத் துழாவி
சோறு சிதறி
மழலை பேசி
யாரை மயக்கிக்
கொண்டிருக்கிறாய் நீ. ..

யாரிடம் அடம்பிடித்து
(கண்ணீர் இல்லாமல் )
அழுது கத்திக் கொண்டிருக்கிறாய் நீ

இங்கோ அமைதியின் அலறல்.
தண்ணீர்வாளிகள்
வெய்யிலின் கருக்கலில்,
வத்தல்கள் வசலில்,
பேனாக்களும் புத்தகங்களும்
அங்கங்கே..

எந்த ஸ்டேஷனில் இறங்கிய
பயணி நீ ?
வேறு ரயிலில்  ஏறிக்கொண்டாயோ ?
நானோ எதிர்வரும்
ரயில்களையும் ஸ்டேஷன்களையும்
துழாவிக்கொண்டு உனக்காய் !

வலை.

கரப்பான்
கூடு கட்டிப்
போடும்.
சிலந்தி
தன்னைப் பிடிக்கவே
வலை பின்னும்.
கைகளுக்குள்ளும்
பசையாய்
நிகழ்காலம்
வலை
தும்பட்டையாகும்
எங்கும் வெளிச்சம்
துரட்டிகள்
ஓரம் விலக்க
சிலந்தி பயணப்படும்
வேறிடத்தில் வலைபின்ன.

ஞாயிறு, 7 மே, 2017

சக்கைகளாய்..

சனம்
சுடும்
குளிர்பொழுதுகள்
இனமற்று வளையும்
இமைக்குள் கலையும்.

பாறைகள்
செருப்புப் பாதங்களால்
சில்லுகளாகும்.
திறந்திருக்கும்
கதவுகள்
எதிர்பாராமல்
மூடப்படும்.

பகல் ரொட்டிக்குள்
நட்சத்திரச் சீனிகள்
புதைந்து போகும்.

இரவுகளில்
நட்சத்திரக் கொலுசுகளின்
சிணுங்கல்கள்
லயமற்று லயமற்று..

மரங்கள்
பூதமாய் சுயம் விரிக்க
சுயம் விரிக்க..

பூமியின் ஆகாரப் பகுதிகள்
ஆதாயப் பகுதிகள்
ஆதாரப் பகுதிகள்
சிலசமயம் பிசிறடிக்கும்

கடலைத் தோலிகளாய்
மனிதம் எறியப்படும்
மனிதாபிமானம் உடைபட்டுச்
சக்கையாய்
சக்கைகளாய்..
Related Posts Plugin for WordPress, Blogger...