எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

பொம்மை

அவருமில்லை
இவருமில்லை
எவருமில்லை
இங்கே நீயும் நானும்
நாமும் மட்டுமே ..
என்னிடம் மிச்சங்கள்
உறைந்திருக்கலாம்.
பில்லி சூன்யப் பொம்மை
மந்திரித்துப் போட்டதுபோல
நம்மிடையே ஒரு கண்கட்டு
துழாவிக் கொண்டிருக்கிறேன்
எங்கே நீ. எனதான நீ.
எதன் எச்சத்தையோ கண்டு
எரியூட்டும் நீ அதில்
என்னைப் புதைத்து விடுகிறாய்.
எத்துனை காலம்
எரியூட்டுவாய் எனவும்
அறுதியிட்டுவிடு
அதுவரை உனக்கான என்
இதயம் பொசுங்காமல் காக்க.

புதன், 5 ஆகஸ்ட், 2015

மதுவின் டைரி.



ஒவ்வொரு இலையையும் விரலிடுக்கில் தளிர்த்து பொன்னிறத் தளிரை பச்சையாய் மாற்றி செழுமையான செடியாய்க் காணவே கிளை நினைக்கும். ஒரே இரவில் விரலோடு சல்லாபித்து விட்டு மண்ணில் வீழ்ந்து போக இலை துடிப்பதைக் கிளை எப்படிச் சம்மதிக்கும். ?

இது மருதாணிச் செடிக்கு மட்டுமல்ல ஒவ்வொரு பெற்றோரின் எண்ணமாய் எனக்குப் படுகின்றது.

இழத்தல் ஒவ்வொரு இலையின் எதிர்பார்ப்பு, இதுதான் பெண்ணின் எதிர்பார்ப்பைப் போல. உன் எதிர்பார்ப்பு ஓரிரவில் உதிர்ந்து போகிற மருதாணி இலை போன்றதா ? அன்றி நகத்தோடே உறவாடி நகத்தோடே அழிந்து போகின்ற சிகப்பு வர்ணம் போன்றதா. ?

எனக்குப் பிடித்தது கவிதை – மதுவைப் போல.  

உருவம் :-

குண்டாய், குட்டையாய், ( லைக் பிந்துகோஷ் ) சோடா புட்டிக் கண்ணாடி போட்டுட்டு, கோணல் வகிடும், 50 பைசா அகலப் பொட்டும், ( ஜானகி மாதிரிப் பாடகி )  (சிரிப்பாய். )

பொய்முகங்கள் – பூபாளம்.. பூபாளம் பூவாகப் பூத்துப் பிஞ்சாகி, கனியாகிச் சுவை தரட்டும். தரமான இலக்கியப் படைப்புகள் தலை நிமிரட்டும். பொறுப்பு மிக்க இளைஞர்களின் புனித வேள்விக்கு என் அன்பான வாழ்த்துகள். – இப்படியாய் ( பலே.. ! ) . உன் நட்புக்காய் யாரேனும் ( ஆர்டர் ).

தொலைபேசி தொலைதூரத்தையும் அருகில் கொண்டு வரும் அபூர்வ சாதனம். அறிமுகமில்லா சிநேகத்தையும் ஆழப்படுத்தும் அழகு சாதனம்.


திங்கள், 3 ஆகஸ்ட், 2015

நட்பின் டைரி 1



கோவை குழல் விளக்கை ரசித்த குழந்தை மின் விளக்கைத் தொட்டது.  மதுவிலக்குக் கவிதை எழுத முடியாது . ஏனெனில்.

>>>>>>>>>>>>>> 

விரல்கள் பத்தும் தூரிகையாகுதே, உன் முன் நான் பூஜ்யம் கூட இல்லை. வெறும் புள்ளி.

நாளைய நம்பிக்கை நட்சத்திரத்தோடு கைகோர்த்துப் போகாவிடினும் கைதட்டி மகிழ இந்த ஸ்நேகம் தேவை.

பெயர் சிலேடை. கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி.

போலி உறவுகளில் என்னது மட்டும் பொய்முகமில்லை என எப்படி உணர்ந்தாய்.

வெள்ளைப் புறாவைத் தேடும் மாடப் புறாவாய் நீ !. மனசெல்லாம் பனிமூட்டமாய் , வண்ண மேக ஊர்வலமாய், சின்னச் சிறகு விரித்து , மேலே, மேலே, உயரப் பறக்கிற சிட்டாய், எனக்கும் ஒரு வேட்கை.

பனித்துளிகள்:-



பனித்துளிகள்:-

வெய்யிலின் இதமான பொசுங்கல்களிலும்
இலைக்குள் பூக்களுக்குள்
இறுகிப்போய் இறுக்கிக்கொள்ளும்
பனித்துளிகள்.
ஓட்டுக்குள் பதுங்கி
மெல்லத் தலைநீட்டும்
சில மனங்கள்.

பூக்களுக்குப் பாவாடை
கட்டிவிடும் சாகஸமாய்
மனித முகங்களைப் போர்த்தும்
போலிப் போர்வைகள்.

திடீரென அறிமுகமாகி
மனதை உடலைச்
சிலீரெனெக் குளிர்வித்து
மறையும் சிநேகங்கள்.

நான் உறுதியில்லை
என்னை நம்பாதே நான்
சிலநொடிப் பரவஸங்களுக்காக
மட்டுமே எனத்
தொடத் தொட விலகி
மறுத்து
அடுத்த பூக்களை மட்டும்.
ஆதர்ஷிக்கும் அன்பான பனித்துளிகள்.

-- 83 ஆம் வருட டைரி.

சனி, 1 ஆகஸ்ட், 2015

நீர் தேங்கிக்கிடக்கிறது வாய்க்காலின் மையத்தில்..



நீர் தேங்கிக்கிடக்கிறது
வாய்க்காலின் மையத்தில்

இலைச்சருகுகளால்
வஸந்தகாலப் பூக்களால்
அர்ச்சிக்கப்பட்டுத்
தென்றலில் குளித்துக்
குளிர்ந்துபோன
நீர் தேங்கிக்கிடக்கிறது.

வழிப்போக்கருக்கென்ன தெரியும்
வேர்களுக்குத்தான் தெரியும்
வாய்க்கால் சுனையென்று.

சுரந்து சுரந்து சுமந்து
சலித்துப் போய்
வாய்மூடிக்கொண்ட
நீர் தேங்கிக்கிடக்கிறது.

அட அள்ளிப்பருகத்தான் வேண்டாம்
கொஞ்சம் கால நனைத்தாவது
கலக்கிச் சென்றாலென்ன

சருகுகளின் தடவல்களில்
பூக்களின் முத்தங்களில்
சமனப்பட்டுக்கிடந்த அது
சத்தங்களை விரும்புகிறது.

நீர் தேங்கிக்கிடக்கிறது
வாய்க்காலின் மையத்தில்

குதிரைகளின் குளம்படிகளுக்கு
மாடுகளின் கூர்வாய்களுக்கு
மான்களின் முகங்களுக்கு
முயல்களின் உறிஞ்சல்களுக்கு
ஏங்கிக்கொண்டே அந்த
நீர் தேங்கிக்கிடக்கிறது
வாய்க்காலின் மையத்தில்

வேர்களின் விசாரிப்புகளுக்கு
மானுடத்தின் இறைச்சலுக்கு
ஏங்கிப்போய்க் கிடக்கிறது

கரங்களின் வருடலுக்காய்க்
காத்து பசலை பூத்துபோய்க்கிடக்கிறது.
மயில்தோகையாய் விரிந்து
ஒரு தொடுதலுக்குக் காத்திருக்கிறது.

அந்த நீர் இன்னும் தேங்கிப் போய்க்கிடக்கிறது
வாய்க்காலின் மையத்தில்
செத்த இலைகளுடனும் பூக்களுடனும்
பாசிகளுடனும் உறவாடிக்கொண்டு.
-- 1984 ஆம் வருட டைரி
Related Posts Plugin for WordPress, Blogger...