எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

மனிதனும் இயற்கையும் :-

மனிதனும் இயற்கையும் :-

“மனிதனைத் தேடுகிறேன் “ என்றாராம் ஒரு அறிஞர். மனிதனைத் தேடுகிறேன் என்றால் என்ன பொருள். அவர் கண்பட எதிர்ப்படுகிறவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா ? நிகழ்காலத்தில் இல்லாவிடினும் இறந்தகாலத்துள் ? அவர் மனிதர் இல்லையா ? அந்த அறிஞன் தேடி விழைந்திருப்பது மனிதனின் உருவத்தையல்ல. மனிதம் என்னும் கருணைய எனப் பொருள் கொள்ளலாம். தற்காலத்துள் மனிதத்துடன் இயற்கையின் வறுமையும் சேர்ந்து இயற்கைத் தேட வேண்டியதாகவுள்ளது.

வளமையைச் செழுமையாய் அளிக்கும் இயற்கைக்கும் வறுமையளிக்க மானுடத்துக்கே வல்லமையுண்டு. மேகக் குழந்தைகள் உறங்கும் மலையன்னையைச் சின்னாபின்னப்படுத்தி குகைப்பாதைகளாக மாற்றவும், மேகநீர் தேக்கி மாணிக்கச் சில்லறை சிந்தும் மரக்குழந்தைகளைக் கெல்லி எறிந்து கட்டடப் பிசாசுகளாய் உருமாற்றவும் தெரிந்த இந்த மனித மந்திரவாதிகளின் கைகளில் இயற்கை என்பது ‘ குரங்கு கையில் பூமாலை ‘.

{வனங்கள் விலங்குகளின் தாயகம்.வனங்களில் சந்தனம் தேக்கு மரங்கள் அதிகம். அவை மண்ணரிப்பைத் தடுக்கின்றன.}

மனிதம் அழிய இயற்கை அழிகிறது. அழிபடுகிறது. ‘நிலமென்னும் நல்லாள்’ என வள்ளுவன் குறிப்பிட்ட நிலமங்கை, ‘ சாது மிரண்டால் காடு கொள்ளாது ‘ என்பதாய் அங்கங்கே சீற்றமெடுத்ததன் விளைவு, பூகம்பமாய் வெடித்து மனிதனை உள்விழுங்கித் தன் சுயம் விரித்துள்ளது.

தற்காலத்தில் மலைகளை உடைத்துச் சில்லுகளாக்கிக் கருங்கற்களாக, ஜல்லிக் கற்களாக எடுத்துவிடுகிறார்கள். மலைகளை உடைக்க வெடி வைத்துத் தகர்க்கிறார்கள். விஞ்ஞானக்காரணங்களின்படி ஆராய்ந்தோமானால் அவை பூமியில் நடுக்கத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன. மலைகள் அரண்களாகவும், பல்வேறு மருத்துவப் பயனுள்ளவைகளாகவும் இருக்கும்போது தாதுப் பொருள்களுக்கு வேண்டியே மலைகள் சிதைக்கப்படுவது கொடூரமானதாகும்.

இயற்கையென்பது மனிதனுக்குப் பயன்தர வேண்டித்தான் படைக்கப்பட்டிருக்கிறது. இயற்கையென்பது மாறக்கூடியதுதான் என்றாலும் அதை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பவன் மனிதன். தானாய் மாறும் பொருளுக்கு வினையூக்கியாய் செயல்படுவது மானுடம்.

பசு நடந்த
பாலைகளில்
கிளைக்கும் புல்
மனிதன் நடக்கும்
சோலைகளில்
பட்டுப் போகின்றது.

இயற்கையின் பாதை மாற்றிய பயணத்தை நடத்திச் செல்வது கலியுகக் கண்ணன்கள். இவர்கள் இயற்கையை வெற்றிபெற அழைத்துச் செல்லவில்லை. போரிட்டு மடிய வேண்டியே அழைத்துச் செல்கிறார்கள்.

கலியுகக் குருக்ஷேத்திரத்தில் வெற்றிபெறப் போவது சகுனித்தனம்தான் – கௌரவர்களாய் விசுவரூபமெடுத்து நிற்கும் செயற்கைதான் – என்பது தெரிந்தும் விடாமல் போரிட்டுக் கொண்டிருக்கும் பாண்டவர்களாய் இயற்கை.

இயற்கை ஜானகி சுயம்வரத்துக்காய் முறிபடக்காத்து நிற்கும் தனுசு. அதை முறிக்க இத்தனை இராவணங்களா ?

“நகரம்
அது மானுடம் அடையும்
கல் மரங்கள்
முளைத்த காடு.”

“எங்கெங்கும்
கட்டிடங்கள்
முகம் மாட்டும்
மனிதர்களாய்”

“வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் “ இது இன்றைய அரசியல்வாதப் பச்சோந்தியின் வார்த்தைகள். பச்சோந்தியின் மூலம் வெளிப்பட்ட வார்த்தைகளானாலும் இதனால் கிடைக்கும் நன்மை மறுக்க முடியாதது. ஒரு காலகட்டத்தில் காடுகளையும் மலைகளையும் விலங்குகளையும் அழித்துக் கொண்டிருந்த மனிதர் குலம் இப்போது சோலைகளையும் சாலை ஓரப் பூங்காக்களையும், மிருகக் காட்சி சாலைகளையும், பண்ணைகளையும் விரும்பி விரும்பி வளர்ப்பது நகைப்புக்கு இடமூட்டுவதாக உள்ளது.

இயற்கையை அழித்துவிட்டு செயற்கைச் செறிவில் நதிகளையும் மலைகளையும் காட்சி சாலைகளையும் உருவாக்கிக் கொண்டு இருக்கும் மனிதனின் வீண் செயலை என்னவென்று  உரைப்பது ? இது ‘வேலியில் செல்லும் ஓணானைக் காதில் விட்டுக் கொள்ளும் ‘ கதைக்கு ஒப்பாகும்.

பாலைவனங்களைக் கூட விட்டுவைக்கவில்லை மனித இனம். அணுகுண்டுகளை வெடிக்க வைத்துப் பரிசோதித்ததன் மூலம் மனித குலத்தின் நாசத்துக்கே உலைவைத்ததுள்ளதும் மனித இனம்தான். இதனால் அங்கு பிறக்கும் அடுத்த தலைமுறைகள் கைகால் ஊனத்துடன் மற்றும் மூளை வளர்ச்சியற்ற நிலையில் பிறக்க நேர்கிறது. அந்த இடங்களில் தாவரங்கள் ஏன் புல் பூண்டுகள் கூட உயிர்ப்பிப்பதில்லை.

பீடபூமிகளையும் ஆக்ரமித்துக் கொண்டது மனித இனம். கரிசல் மண் வளமுள்ள பகுதிகளில் பருத்தி பயிரிடப்படுகிறது. மண்ணின் வளத்தை எந்தெந்த வகைகளில் உறிஞ்ச முடியுமோ அந்த அளவு அட்டையாய் உறிஞ்சிக் கொண்டு நிலத்தைப் பாழ்படுத்துகிறது மனித இனம்.


ஆலைக்கழிவுகளில் பாதிக்கப்படுவது ஆறுகளும், அது சங்கமிக்கும் கடலும்தான். அந்த ஆற்றின் நீரைப் பயன்படுத்தி உழப்படும் நிலங்களும் கெட்டுப்போகின்றன. இவ்வறெல்லாம் இயற்கையைச் செயற்கை ஆக்கி விடுகிறோம். மண்ணில் பிறந்து மண்ணில் மரிக்கும் நாம் மண்ணைக் கெடுத்துவிட்டே மரிக்கிறோம். இனிமேலாவது சிந்திப்போமாக.
  

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...