எனது 24 நூல்கள்
சனி, 31 அக்டோபர், 2015
வெள்ளி, 30 அக்டோபர், 2015
சூன்யம்.
16.2.85 பீ. மு . அபிபுல்லா & கவிஞர் அரு. நாகப்பன் கலந்துக்கொண்ட
கல்லூரிக் கவியரங்கின் போது சும்மா எழுதியது. :-
எறும்பு அலைகின்றது.
சூன்யத்தின் சூன்யம் கேட்டு
எறும்பு அலைகின்றது.
சருகு இலைகளைப் புரட்டிப் போட்டு
மண்ணில் குளித்தெழுந்து
குளித்தெழுந்து
சூன்யம் பற்றிக் கொள்ள
எறும்பு பரபரக்கின்றது.
வெளிச்ச அரண்கள்
தாவிக் குதித்து
நிழல் சிம்மாசனங்களில்
ஓடிக்கொண்டே ஓய்வெடுத்து
சுறுசுறுப்பாய் அலைகிறது.
மரங்களில் விறுவிறுப்பாய் ஏறி
பச்சை இலைகளின்
நரம்பு எலும்புகளில்
சூன்ய இரத்தம் உறிஞ்ச திரிகின்றது.
சூரியன்கள் மேற்கில் உதிக்க நேரும்போது
கருமேக நம்பிக்கைகள் பொய்க்கும்போது
உதவியற்ற சூல்களால்
சூன்யத்துள் சூன்யமாய்ச் சுருளும் எறும்பு
சூன்யமே சூன்யமாகிப் போனால் என்னாகுமென
அந்தச் சூன்யமே சூன்யம் தேடுகின்றது.
மரப்பட்டை தேசங்களில்
மனிதமற்ற உடல்களில்
கடித்துக் கடித்துச் சூன்யம் தேடுது
சூன்யத்தைச் சூன்யம் தூக்கிப் போகுமோ
எங்கே சூன்யம் எங்கே சூன்யம்.
எங்கே நான்.. சுருண்டு கொள்ளும்
என் சுகமான அரியாசனம்.
மனசில் சோகம் குவித்துச் சரித்து
அந்த எறும்பு அலைகின்றது.
சூன்யத்தின் சூன்யம் கேட்டு
எறும்பு அலைகின்றது.
{சமர்ப்பணம் இந்த அவைக்கும். பீ. மு. அபிபுல்லாவுக்கும்
}.
வியாழன், 29 அக்டோபர், 2015
ப்ரியம் என்று எதனைச் சொல்ல
புதன், 28 அக்டோபர், 2015
ஊமை மொட்டுகளும் இளம் மொட்டுகளும்.
இப்போது இவர்கள் ஊமை மொட்டுக்களாம்.
இம்மொட்டுக்கள் இதழ் விரிப்பது
இறை பூஜைக்குச் செல்லும் ஆசையில்
ஆனால் இவை அர்ச்சிக்கப்பட்ட இடங்கள்
கல்லறை மேடுகள்.
~~~~~~~~~~~~~
இளம்மொட்டுக்களின் இதயஸ்வரங்கள். :-
பெண்களை எதற்காகப்
புஷ்பங்களோடு ஒப்பிடுகின்றார்களோ ?
அவர்கள் சீக்கிரமே மலர்ந்து
சீக்கிரமே வாடிவிடுவதாலா. ?
இந்த ஊமை மொட்டுக்கள்
இளமைக் கனவுகளுடன்
இதழ்விரிப்பது
இறைபூசைக்குச் செல்லும் ஆசையில்.
ஆனால் இவை அர்ச்சிக்கப்பட்ட இடங்களோ
பிணங்களின் பாதங்களில்
சவங்களில் புதைகுழிகளில்.
இவர்கள் தங்கள் வானில் நிலவு
புன்னகைக்குமென .எதிர்பார்க்கின்றார்கள்.
ஆனால் புன்னகைப் பூப்பொரிக்க வந்தவை
அக்கினி நட்சத்திரங்களே என்றறிந்ததும்
சாம்பற்பூக்களாக சிதறி விடுகின்றார்கள்.
வாசனைப் பூக்களே நீங்கள் வாடாமலிருக்க
காகிதக் குப்பைகளை வைத்திருக்க வேண்டும்.
அல்லது காகிதப் பூக்களாக மாற வேண்டும்.
-- 85 ஆம் வருட டைரி
-- 85 ஆம் வருட டைரி
லேபிள்கள்:
ஊமை மொட்டுகளும் இளம் மொட்டுகளும்
இவள் ஒரு கங்கை:-
இவள் ஒரு கங்கை :-
இவள் எழுதட்டும்.
இவளை எழுத விடுங்கள்.
எழுத்துப் பிரவாகங்கள்
பொங்கிவரும் வலிமைகள்.
இவளே கங்கை
இவளே காவிரி
இவளின் அமைதியில்
ஆழத்தில் ஆவேசத்தில்
அன்பில் மூழ்கி
புதுப்பிறவி எடுக்கவா
இவ்வளவு கூட்டமும். ?
இவள் சமாதி கூட
கவித்துவம் பேசும்.
இவள் பிறப்பிலும் வளர்ப்பிலும்
பாயும் இளமைப்ப்ரளயத்திலும்
திரிவேணி சங்கமத்திலும்
சங்கமத்திற்குப் பின்னும்
எழுத ஆசைப்படுகின்றாள்
இவளின் காவிரி உடல்களை மட்டுமல்ல
பல மனங்களையும் வருடி நெருடி
அழுக்கைச் சுரண்டி
அன்புச்சுரங்கமாய் ஆக்கியிருக்கின்றது.
இவள் எழுதுவது குப்பைக் காகிதங்களில் அல்ல!
மனனத் தீவுகளில்.
இவள் எழுதுவது குபேர சொர்க்கத்தில் அல்ல
குச்சுவீடுகளின் குறுநிழலில்.
இவள் எழுதுவது மையினால் அல்ல
மைவிழிகளின் நீரினால்
இவள் எழுதுவது அக்கரைப் பச்சையையல்ல.
இக்கரை சுடுகாடுகளை.
இவள் எழுதுவது ஆதிக்கக் கற்கள்
தன் பேனா முனையின் கூர்மையில்
உடைய வேண்டியே.
நொந்த உள்ளங்கள் காகிதச் சோலைகளில்
கனவுக் கனிகளை ருசித்துச் செல்ல வேண்டியே
இவள் அடித்துக்கொண்டு வந்த
எண்ணக் குப்பைகள்
அங்கங்கே சிதறவிட்டுச்
சென்றுவிடுகின்றாள்.
இவளின் சமாதி கூட
கவித்தும் பேசும்.
இவள் எழுதட்டும்.
வறண்ட வயல்களே
உங்களை வளப்படுத்த விரும்பும்
இவள் எழுதட்டும்.
இவளை எழுத விடுங்கள்.
தயவுசெய்து இவளை
அணைகட்டி விடாதீர்கள்
இவளுக்குத் தளைகள் பிடிக்காது
நாளையே உடைப்பெடுத்தால்
தாங்கமாட்டீர்கள் ஆதிக்கக்கற்களே.
இவளை எழுதவிடுங்கள்.
-- 85 ஆம் வருட டைரி.
-- 85 ஆம் வருட டைரி.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)