எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 20 ஜனவரி, 2024

நிலாவின் ரேகைகள்

சூரிய நெசவில்
வெளிச்சக் கோலங்கள்

பிரதிபலிக்கும் நீரில்
கண்ணாடிக் கோலங்கள்

மாலை நீல ஆகாயத்தில்
செம்மண் கரை கட்டல்

பால் ஒளிக் கோலமிடும்
நிலாவின் ரேகைகள்

பச்சையங்கள் முகத்திலோ
விடியலின் பனித்துளிக் கோலங்கள்



சனி, 2 டிசம்பர், 2023

ஆசுவாசம்.

கற்களின் வெடிப்பிலிருந்து
பச்சை இரத்தநாளமாய்க் 
கிளைத்தெழுகின்றன தாவரங்கள்.
கரியமிலம் உண்டு
பிராணவாயு விடுத்து
ஆசுவாசமாய் மூச்சு விடுகிறது பூமி.

திங்கள், 23 அக்டோபர், 2023

அம்மாவான அம்மு

பிரியா விடைகொடுத்து
வீடெங்கும் பொம்மைகளோடு
விளையாட விட்டுவிட்டு
வேலைக்குச் சென்றுவிடுகிறாள் அம்மா.


உணவூட்டித் தாலாட்டி
ஒவ்வொரு பொம்மையையும்
உச்சிமுகர்கிறாள்
அம்மாவான அம்மு. 

வியாழன், 28 செப்டம்பர், 2023

உச்சிக்கும் பூமிக்கும்..

சூரியக் கனலிலிலிருந்து
பிரிந்து பறக்கின்றன
சாம்பல் மேகங்கள்.

பறவைகள் இங்குமங்குமாய்
விசிறிக் கொண்டிருக்கின்றன 
வெளிறிய வானத்தை

மரக்கிளைகளை முட்டி 
மறைந்துவிடுகிறது 
ஆகாய விமானம்

கழுத்திலும் கண்ணோரத்திலும்
கோடிடும் முதுமைச் சாலையாய்ப்
பாதைகளும் பயணங்களும் நீள்கின்றன.

பருவத்தின் எழுச்சியையும் வீழ்ச்சியையும்
காகபுஜண்டராய்க் கண்காணித்து அலுக்கிறது
உச்சிக்கும் பூமிக்குமாய்ப் புதையும் மனது. 


செவ்வாய், 13 ஜூன், 2023

கடின நெடி

ஒரு உன்மத்தம்தான் உன்னைச் செலுத்துகிறது
ஒன்றை உன் உரிமையானதாய்க் காட்ட.
விழுதைப் போலப் பற்றி இருக்கிறாய்
விழுந்துவிடலாம் என்றாலும்.
நீ பூசிக்கொள்ளும் ஒவ்வொரு சிரிப்பிலும்
வாழ்ந்த கணங்களின் கடின நெடி.
கடக்கின்றவர்க்குப் பழைய கள் என்றாலும்
உன் கரங்களில் எப்போதும் புதிய மொந்தை
மனச்சுரப்பில் நீயாய்ச் சுரந்து நீயாய்ச் சேமித்து
நீயே மாந்தி நீயே மயங்கி
காலங்கள் கடக்கட்டும் உன் சிந்தை மயக்கத்தில்
தெளியலாம் என்றேனும் அன்று 
உன் முன் பாளைகள் வெடித்திருக்கும்.
Related Posts Plugin for WordPress, Blogger...