எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 29 டிசம்பர், 2018

அந்தகாரத்தில் சாமி.

இருண்மையான உலகத்துள்
அடைத்து வைத்திருக்கிறோம்
எமது ஈசன்களை.
நாம் தரும் சிறுவெளிச்சமே
போதுமானதென்று நினைக்கிறோம்.
உணவுப் பொருட்களைக் கொட்டி
அபிஷேகமென்கிறோம்.
விட்டுப் போனவற்றை
யாக குண்டத்திலும்.
பூக்கள் மேல் பூக்கள் சாற்றி
மூச்சுத் திணற அடிக்கிறோம்.
களிம்பு பீடம் சுற்றுகின்றன
கரப்பான்கள்.
பணக்காரச் சாமியென்று
வைர க்ரீடம் ஏற்றுகிறோம்.
உண்டியல் கொள்ளாப் பணத்துடன்
மேலெறியப்பட்ட கோரிக்கைகளை
கவனம் கொண்டு மோனத்திலாழ்ந்து
அந்தகாரத்தில் தனித்திருக்கிறார் சாமி.
  

வியாழன், 27 டிசம்பர், 2018

செந்நிறச் சர்ப்பம்.

பசுமை தோய்ந்த மலையில்
ஒரு நீலப்பூ பூத்திருக்கிறது.
மஞ்சள் பறவை ஒன்று
சிகப்பு அலகில்
வெள்ளை மகரந்தம்
தோயப் பறக்கிறது.
அரக்கு மலையில்
சாம்பல் நிறச் சாலைகள்
வழிந்து விழுகின்றன.
வானவில் வண்ணங்களில்
கொழுப்பு சுமந்த இறைச்சிகள்
திமில்களுடனும் குளம்புகளுடனும்
அசைந்தோடுகின்றன.
பருந்துப் பார்வையில்
செந்நிறச் சர்ப்பமொன்றைத்
தேர்ந்தெடுத்திருக்கிறாய்.
சீறித்தப்பிக்க விரும்பா அதுவும்
உன்னைச் சுற்றத் தொடங்குகிறது.
  

தீபாவளி.

எட்டுமணிப் பட்டாசுக் கூச்சலில்
நிரம்பிக் கிடக்கின்றன தெருக்கள்.
பட்சணக் கடைகளைவிட
பிரியாணிக் கடைகள் அதிகம்.
பாப்ளின் பாவாடைகளும்
ஜப்லா ஜாக்கெட்டுகளும்
டார்பாலின் கீழ் உருவமாய் அசைகின்றன.
நகரும் வெளிச்ச முகத்தோடு நடனமாடுகின்றன
அங்காடிகளும் காவல் ஊர்திகளும்.
குஸ்கா தேக்ஸாக்களோடு
குடைக்கம்பி பிடித்துக் காத்திருக்கிறார்கள் வியாபாரிகள்.
நாலு பேருக்கு நல்லது செய்ய
நமனிடம் பிணையாகியிருக்கிறான் நரகாசுரன்.
தெறித்துத் தெறித்துப் பயமுறுத்தும்
மழைக்குமுன் தீபாவளி வந்துவிடுதல் நலம்.

புதன், 19 டிசம்பர், 2018

ஒரு துளிப் புல்.

பாறைகளால் ஆக்கப்பட்டிருக்கிறது
தவழ்ந்து கிடக்கும் அம்மலை.
எங்கும் ஏதும் நிற்கவோ நடக்கவோ
கிடக்கவோ இடமில்லை அதன் மீது.
வழு வழுத் திட்பமாய்
காற்றைக் கூடத் தள்ளி விடுகிறது அது.
வெய்யில் மழை வேண்டா விருந்தாளிகள்.
பனி அணைத்த விடியலில் ஈரம் மினுமினுக்கும்.
எதன்மீதும் அதற்கு வெறுப்பில்லை
எதிர்ப்பில்லை பொருட்டில்லையெனினும்
அதனைப் பொருட்படுத்தி அண்டி
இடுவலான ஈரத்தில்
உயிரைப் பிடித்துப்
பிணைந்தாடிக் கொண்டிருக்கிறது
ஒரு துளிப் புல்.
  

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

நிரம்பித் ததும்பும் கானகம்.

அதிகம் பேசாதேயென்கிறாய்
பேச்சைத் தவிர என்னிடம்
வேறு நூலேணியில்லை.
அதைப் பிடித்து என் உப்பரிகையில்
நுழைந்த ராஜகுமாரன் நீ.
உள் நுழைந்ததும்
சுருட்டி வைத்துவிட்டாய்
எனதான ஏணிகளை.
அந்தப்புரத் திரைச்சீலைகள்
குளிர்ந்து கிடக்கின்றன.
என் மாடமாளிகையும்
கூடகோபுரமும் வெய்யில்படாமல்
இறுகிக் கருகி.
எங்கோ தூரத்து அகழியில்
முதலைச் சத்தம்.
காற்று மரங்கள் வழி
பழ வாசனையைக் கொணர்கிறது.
ஒளித்துவைத்த நூலேணியின்
ஒரு இழையாவது தேடுகிறேன்.
பசி தீர்க்கப் பழமரம் அழைக்கிறது.
பேச்சற்ற போதில் பறக்கவோ
குதிக்கவோ தயாராகிறேன்.
கடும்பசியில் இருக்கும்
முதலைக்கு உணவாகிறேன்
அல்லது கானகம் பார்த்துவருகிறேன்.
சிறிது வெய்யில் வேண்டுமெனக்கு.
தூக்கி வீசிவிடு என்னை நூலேணியோடு.
என் சில்வண்டுக்குரல்களால்
நிரம்பித் ததும்பட்டும் கானகம்.
  
Related Posts Plugin for WordPress, Blogger...