எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 27 ஜூலை, 2015

பையா, நானா ?



வாய்மூடி
மனசடக்கித்
தோளில் தொங்குவது
பையா, நானா ?

பத்து வயதுப் பெண்ணாய்
நீளக் கைகோர்த்துக்
கழுத்தை வளைத்துப் பிடித்து
உப்புமூட்டை ஊர்வலம் போவது
பையா, நானா ?

பல்லில் கடிபடுவது
தாவாங்கட்டையில் அமர்ந்திருப்பது
பையின் கைப்பிடியா
என் மனப் பிடியா ?

உள்ளே அதிர்வு புதைத்து
முதுகுமேல் தொற்றி
வேடிக்கை பார்ப்பது
பையா, நானா ?

கழுத்திலிருந்து
முதுகு வரை
வழிந்துகொண்டிருப்பது
பையா, நானா ?
நானா, பையா ?

விலகிப்போகும் நிழல்கள்.:-



விலகிப்போகும் நிழல்கள்.:-

உருவங்கள் புரிய
நிழல்கள் விலகத்தான் ஆக வேண்டும்
ஆத்மாக்கள் உச்சிப் பொழுதில்
காலடிக்குள் புதைத்துவிட்டு
நிழல்களைத் தேடிக்கொண்டிருக்கின்றன.

விகார நிழல்ப் போலிகளைத்
தேடித் தேடி அலைபாயும்
விட்டில்பூச்சிக் கூட்டங்கள்.

வெள்ளைப் பற்பூச்சுக்களில்
வெகுளிப் பேச்சுக்களில்
நிஜத்தைப் புதைத்து
நிழலை உடுத்துக்கொள்ளும்
ஜடாமுடிக் கும்பல்கள்.

சுயப் பரிமாணங்களை
இழக்க விரும்பாமல்
இழுத்துப் பிடித்துப் பின்னேயே
ஓடும் குழப்பக் கூத்துக்கள்.

ஏதாவது எழுதப்பட வேண்டும்
என விரும்பி சாக்கடையை
அப்பிக்கொண்ட வெள்ளைத்தாள்கள்.

விலங்குகளுக்குள் விரும்பி
விரும்பிப் புதையும் வெண்பாதங்கள்..

கருப்பாய்ப் பூக்க எண்ணி
சோகையாய் நீண்டு பிய்ந்த
வெளுத்த மேகங்கள்.

உருவங்கள் புரிய
உவர்ப்பை உண்ணத்தான் வேண்டும்.

நிழல்கள் விலகினால் என்ன
அவை வந்து நகரும்
சலன மேகங்கள்
வெய்யிலுக்குப் பயந்து
நிழல்களைத் தேடவேண்டிய
அவசியமில்லை.
அதுவாய்க் காலடி வருட வரும்

அதுவரை கானல் நீராய்
விலகும் நிழலை வீண் முயற்சியாய்த்
துரத்தும் வேலை வேண்டாம்
வரும் நிழல்களை
உபயோகப்படுத்தத்
தெரிந்தால் போதும்.

-- 85 ஆம் வருட டைரி


வெள்ளி, 24 ஜூலை, 2015

அதோ ஒரு இலை விழப்போகிறது.



அதோ ஒரு இலை விழப்போகிறது.

அதோ ஒரு இலை விழப்போகிறது
வட்டக்குளத்தில் சலனத்தைப் புதைத்து
சலனத்தை எழுப்ப
அது காத்திருக்கிறது.
காற்றின் பரிதலுக்காய்

வேர்கள் தேடி அலுத்துப்போன நீரைப்
பழுத்த இலை ஸ்பரிசிக்கப்போகிறது.
சல்லிவேர்கள் சள்ளைப்படும்.
இலையோ மரத்தில் தொற்றிகொண்டு
நீரின் முத்தத்துக்காய் ஏங்கும்.

ராமனுக்குக் காத்திருக்கும் அகலிகைக்கல்லாய்
ராமனுக்குத் தவமிருந்த சீதையாய்
பிணைப்புகளில் விடுபட அந்தப்
பழுத்த இலை துடிக்கிறது.

மெல்லிய காற்றுவருடலில்
மூச்சு வாங்கி விட்டுத் தவிக்கிறது.
ஒரு பெரிய அலைக்காற்றை
எதிர்நோக்கி இருக்கிறது
அதோ ஓர் இலை
விழப்போகிறது.

-- 85 ஆம் வருட டைரி

வியாழன், 23 ஜூலை, 2015

செவ்விளநீர்.

கூட்டமாய்க் கடந்தார்கள்..
கூட்ட மனநிலைக் கசப்பு.
எங்கே இருக்கிறாயெனக்
கேட்டபோது
கல்லறையில் என்றான்.
அப்போது அவன் முகத்தில்
ஒரு நூல்கயிறுப் புன்னகை
அவதரித்திருக்கக்கூடும்.
தற்கொலை பிடிக்காதென்றாலும்
ஆத்மாநாமும்
ஸ்டெல்லாபுரூசும் பிடிக்கும்.
பாறைகள் காய்ச்சிய வெக்கையில்
பனம்பழங்கள்
உருண்டு கிடந்தன.
ஒரு மழையற்ற மலையில்
காற்றற்று நடந்தபோது
வெடித்த மரவேர்கள்
இடறிக் கொண்டிருந்தன.
இறங்கியதும்
ஒரு கணம்
மலை பார்க்க
மேகங்கள் சூழத்துவங்கியிருந்தன.
புழுக்கத்தால் அவை
கண்ணீர் வடிக்கக்கூடும்
விட்டுவிடுதலையாகும்
எண்ணம் துரத்துவதாகக் கூறிய
அவன்சொல்லை
ஆமோதித்துக் கொண்டிருந்தது மனம்.
கடைகடந்த போது
சீவப்பட்டுக் கொண்டிருந்தது
ஒரு செவ்விளநீர்.

புதன், 22 ஜூலை, 2015

நெல்லையில் ஒரு நாள்.



20.1.85 அன்று பாளையங்கோட்டையில் செயிண்ட் சேவியர் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரிகளுக்கிடையேயான போட்டியில் கலந்துகொள்ள 10 பேர் சென்றிருந்தோம்.

1.பத்மா – 1 ஹோம் சயின்ஸ் – ஃபேப்ரிக் பெயிண்டிங் – கூண்டில் மிருகம் ( புலி)

2. வித்யா – 3 ஃபிசிக்ஸ் – கார்ட்டூன் – தேர்தல் களம் & தமிழ் கட்டுரை – வாழ்வே மாயம்.

3. சி. கீதா – 3 ஆங்கிலம் – ஆங்கிலக் கட்டுரை – எலக்ஷன் ப்ராமிஸஸ்.

4. கேஆர்கே கீதா – 3 ஆங்கிலம் – கவிதை – கம்யூனிக்கல் ஹார்மனி & சிறுகதை. ஸ்மைல் ஸ்மைல் & பீ எ வில்லன்.

5. எஸ். தேனம்மை – 3 கெமிஸ்ட்ரி – தமிழ் சிறுகதை. – அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ?

6. டி. மீனாக்ஷி – 3 ஆங்கிலம் – கவிதை. மனிதன் மாறவில்லை.

7. காளீஸ்வரி – 2 ஹோம்சயின்ஸ் – வாட்டர்கலர் பெயிண்டிங்க்

8. சிஸ்டர் கித்தேரி – 3 தமிழ் – இந்தியன் இங்க். – ஆக்ஸிடெண்ட். ( ரயில் விபத்து ).  & பென்சில் ட்ராயிங் – ஆணும் பெண்ணும்.

ஸ்டாஃப்ஸ் இன்சார்ஜ்.

9. மிஸ். சரஸ்வதி, தமிழ்த்துறைப் பேராசிரியர்.

10. மிஸ் ஹனீஃபா ஜோஷி, இங்கிலீஷ் டிபார்ட்மெண்ட்

மதுரை – திருநெல்வேலி ட்ரெயினில் போனோம். திருநெல்வேலியிலிருந்து பாளையங்கோட்டைக்கு பஸ்ஸில் போனோம். வஸந்த பவனில் காலை உணவு. ஆயிரத்தம்மா கோவில் போனோம். லஞ்ச் காண்டீனில் , மாலையும் இரவும் அங்கேதான் உணவு.  ( தொண்டையடைச்சான் உருண்டை, நெஞ்சடைச்சான் பக்கோடா அந்த ஊரு ஸ்பெஷல்னு சொன்னாங்க.. ஆனா சாப்பிடல )

அப்புறம் 8 மணிக்கு நெல்லை ஜங்ஷன் வந்தோம். அங்கே மிஸ் சரஸ்வதி பால்கோவா வாங்கி கொடுத்தாங்க. சூடான அல்வா வாழையிலையில் வாங்கி சாப்பிட்டோம்.

-- 85 ஆம் வருட டைரியிலிருந்து :)  

///சூடான அல்வா வாழையிலையில் வாங்கி சாப்பிட்டோம்./// திருத்தத்துக்கு நன்றி துபாய் ராஜா :)

Related Posts Plugin for WordPress, Blogger...