எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

மனத்தின் மரூக்கள் :-



மனத்தின் மரூக்கள் :-

PIN :- SNEGAM
ப்ரியங்களுடன் மது.

இவை இந்தக் கவியரசனின்
அரண்மனை வாயில்முன்
நடைபாதை விரிப்புகள்.

சில கவிதை யாழ்கள்
மீட்டப்படும்போது
மனிதம் மட்டும் இளகுவதில்லை.
இங்கும் அதுபோல்
யாழே இளகிற்று. இறைஞ்சிற்று.

பிரபஞ்சம் சுற்றிக்கொண்டிருப்பது
நட்சத்திர ஜிகினாக்களை
மட்டும் வைத்தல்ல.
உன் கவிதைகளையும் சேர்த்துத்தான்.

இவை எரிநட்சத்திரங்களாய்
விழவில்லை என் கையில்.
உதிர்த்துவிட்ட பவளங்களாய்,
நிலம் சேகரிக்கும் நீர்ச்சத்தாய்
மனத்தின் மரூக்களாய்

இந்தப் ப்ரவாஹத்தின் சரியல்கள்
என்மீது
ப்ரியச் சரியல்கள்.
இனி
கவிதைகளைத் தனியாய்.

இந்தக் கவிஞர்
நிஜப்பசுமைகளுக்குள்
ஸ்நேகப்பயிர் வளர்க்க
புதிதாய்ப் பூக்கள் கோர்க்க
இலைகளுக்குள் பச்சையம் புகுத்த
சூரியனாய்
ஆனால்
சூரியனே பிரிவு வெம்மையை
நினைத்துருகி மருகி
நினைத்துருகி ‘ஆகுதீயில்’
இந்த வாடுதல்
எனக்கு வேதனை.

தாகவிடாயால் உயிர்த்தல் வேண்டி
நல்மழைதேடி புஷ்பிக்கக் காத்திருக்கும்
மென்பூ என் தோழன்.
இவர் பாறையாய் மாறி
வர்க்கபேதம் கண்டு சீறிய விளைவு
‘வர்க்கப் போராட்டமாய்’
‘எதிர்காலமாய்’
‘கானற்கனவுகளாய்’
உருவம் எடுத்துக்கொள்கையில்
‘ஏக்கமும்’
‘ஒரு சுதந்திர தினநாளிலும்’
நம்முள் விளையும் எண்ணப்பயிருக்கு
நல்லுரமாய் அமைகின்றன.

ஸ்நேகம் பற்றி இவரெழுதிய கவிதைகள்
வெளிவந்திருப்பது வெறும்
பேப்பர்களில் மட்டுமல்ல.
நம் மனதின் சிந்தனைச்சோலைகளிலும்தான்.

மனசோடு சேர்த்து வாயிற்படி சிரிப்பதும்
உதடுகள் புன்னகையை உச்சரிப்பதும்
கண்கள் சோகம் வழியவிடுவதும்
இவரால்தான் உவமைப்படுத்தமுடியும்.

இவை இந்தக் கவியரசனின் இராஜபாட்டையில்
நான் தூவிய மனத்தூவல்கள்
மனத்தின் மரூக்கள்.
மனஸு நிறைந்த ப்ரியங்களுடன் மது.

- 85 ஆம் வருட டைரி.

புதன், 19 ஆகஸ்ட், 2015

சிந்தனை



சிந்தனை

மண்புழு
ஊற்றுத் தோண்டியது
மண் உழுது மண் உழுது
தண்ணீர் பயிராக்கியது.
நீர்க்கோவில்
கட்டங்களுக்குள்
எத்தனை கற்சரிவுகள்
மண்புழுவைச் சிதைத்துப் போட்டன
நசுக்கி உடல் முறித்துப்
போட்ட கற்கள் விலக்கி
மறுபடி விழுந்த கற்கள் தள்ளி
மண்புழு போராடியது.
ஒரு வழியாய்
ஊற்று உருவானது.
நீர் அருந்தப் போகும்வேளை
மிச்சமிருந்த வாயும்
கல் அடித்தலில்
கல் அடித்தலில்
உருத்தெரியாமல்.

--- 85 ஆம் வருட டைரி. 

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

விடை கிடைக்காத கேள்விகள்:-



விடை கிடைக்காத கேள்விகள்:-

கேள்விகள் கேட்பதிலேயே
என்னுடைய பொழுதுகள்
கழிந்துவிடுகின்றன.
பதிலை உருவாக்க முயன்று
தோற்று கேள்வியையே தரம்பிரித்து
அர்த்தமற்றதாய் ஆக்கி விடுகின்றேன்.
புதிதுபுதிதாய்க் கேள்விக்கணைகள்
ஆத்மாவின் அடிச்சுவட்டில்
கிளர்ந்து எழுகையில்
விடைகாண முடியாமல்
அடிபட்டு வீழ்கிறேன்.
இப்படியும் இருக்கக்கூடும் என்ற
யூகங்களை நம்பமுடியாமல் போகின்றது..
இருக்கலாம் என்பது அறியாமையில் விளைந்து
தலைகுனிய வைக்கின்றது.
இருக்கவேண்டும் என்ற உறுதியான பதில்
இருக்கின்றது என்ற விடை
எப்போது கிடைக்கப் போகின்றது.
தொடுக்கப்பட்ட கேள்விகளையே
புரிந்துகொள்ள முடியவில்லை.
அந்த ஸரஸ்வதி ஏன் இன்னும்
வீணையை வைத்துக்கொண்டிருக்கின்றாள்.
சிந்தனைச் சாட்டைகளுக்கு
உடல் வலித்ததுபோல் அவளுக்கும்
விரல்கள் வலிக்காது?
உணவைக் காணாவிட்டாலும்
மண்ணைக் கிளறிப் பார்க்கும்
கோழியின் தாபம்.
கேள்விகள் கேட்பதையே
அதில் அமிழ்ந்து போவதையே
போதையாகக் கொண்டு
சுகம் கண்டு திரிகின்றேன்.
விடை தேடி அலுக்கும்போது
நமக்கென்ன அதைப்பற்றி
என்றிருக்க முடியாமல்
மீண்டும்
மீண்டும்
அறிவு புடைத்த வக்கிரமாய்த்
தோண்டிக்கொண்டே இருக்கின்றேன்.


குட்டைகளை அடித்தோண்டுவதே
பிழைப்பாய்ப் போய்விட்டது
பூவைக்கண்டு மணம் நுகர்ந்து
கும்மாளமிட்டதெல்லாம்
கலைந்து போய்விட்டது.
அதன் வேரின் அலைச்சல்
எங்குவரை என்பதைக் கண்டுபிடிப்பதே
பரிதவிப்பாய் ஆனது.
மலர்ந்த முகங்களைப்
பார்த்துப் பரவஸிக்க முடியவில்லை.
இதற்குள்ளும் எத்தனை
போலிகள் இருக்குமோ ?
வானில் இந்த நிமிடம்
சாசுவதமாய் இருந்தமேகக்குவியல்கள்
துணுக்குகளாய்ச் சிதறித்
தூரதேசம் பறக்கின்றன.

-- 1985 ஆம் வருட டைரி 

திங்கள், 17 ஆகஸ்ட், 2015

நெற்றிக்கண்.

நெற்றிக்கண் நெருப்பு
சுமக்க இயலா உமை தவிக்க
பொறி தோய்ந்து விழுந்தது
பொற்றாமரைக் குளமா
சரவணப் பொய்கையா
ஜடைநாகப் பில்லைகள் குலுங்க
ஒரு பாகமானவளின்
கௌரிதாண்டவம்..
ரிஷி கேசமானவனின்
நாகாபஸர்ப்பிதம்
கூந்தல் பாடிய தருமி
நக்கீரனாய் மாறுகிறான்..
முப்புரம் எரித்தவன்
உட்புறம் எரிப்பதில்லை.

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

வேர்களைக் காணவில்லை :-



வேர்களைக் காணவில்லை :-

வேர்களைக் காணவில்லை
என்னின் வேர்களைக்காணவில்லை.
ஊற்றுப் பெருக்காய்
என்னுள் கலையெனும் கிளைபரப்பி
இலைகளால் இதமாய்ப் போர்த்திப்
பூக்களை வெளிச்சிதறவைத்த
வேர்களைக் காணவில்லை.
என்னின் வேர்களைக் காணவில்லை.

அடிமன ஆழத்தில்
ஆசையாய்த் துளைவிட்டு
விருட்சமாய்ப் படர்ந்து
கிளைவெடித்துப் பயணம் செய்து
தூரதேசம் சென்று போச்சோ
துரத்தியும் காணல்லையே

அறிவெனும் இராஜாங்கத்தில்
அட்டனக்காலிட்டமர்ந்து
அதிகார ஆலோசனைகள்
சொல்லிக்கொடுத்துவிட்டு
செயலாற்றும் வேளைப்போது
சொல்லாமல் கொள்ளாமல்
பூமியின் ஆழம் அதனின்
தன்னைப்புதைத்துப் பதித்துக் கொண்டதோ

மனசுள்ளே தேடுகின்றேன்.
மதி மயக்கத்தால் வாடுகின்றேன்.

மரங்களின் கறுப்பு உடைகளில் புகுந்து
செடிகளின் பச்சை ஆபரணங்களைக் களைந்து
மனதுள்ளே குடைந்து குடைந்து
வேர்களைக் காணும் ஆசையில்
துளையிட்டுக்கொண்டே போறேன்.
என்னுள்ளே காணமல் போச்சோ
என்னைவிட்டுப்
புழுங்கிப் பதுங்கும் என்னைவிட்டு
காலார நடந்துபோய் கொஞ்சம்
காற்று வாங்கி வரப்போச்சோ
சொல்லிட்டுப் போனால் என்ன
இதயத்துள் சிணுங்கும் குரல்கள்
வேர்களே கேட்கலையோ நீங்கள்.

ஜிர் ஜிர் என்று உள்ளத்தின்
ரீங்கரிப்புக்கள் மரங்கொத்திப்பிடுங்கலாய்
நிம்மதியை விழுங்கும் வேளையில்
காணாமல் போன வேர்களே நீங்கள்
சீக்கிரம் வழி விசாரித்து என்
மனவீடு வந்து சேருங்களேன்.


-- 85 ஆம் வருட டைரி 

Related Posts Plugin for WordPress, Blogger...