எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 2 அக்டோபர், 2024

ராஜாளி


திரும்ப வளருமென்றாலும் 
தேவையில்லையென 
வலியெழ
அலகை உடைக்கவும்
சிறகை முறிக்கவும்
முடிகிறது சில ராஜாளிகளுக்கு

திங்கள், 2 செப்டம்பர், 2024

ஆர்ப்பரிக்கும் அருவி

வீழ்ந்து வணங்கினாலும்
சிறப்பு வருமென 
ஆர்ப்பரிக்கிறது அருவி. 

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

வர்ணக் குழப்பம்

கருமையின் இருண்மையும் 
வெண்மையின் புனிதமும் 
பயமேற்படுத்துகிறது.

அரக்கின் முத்திரையும்
குழந்தைக் குங்குமமும் 
பாதுகாப்பும் பரவசமும்.

செஞ்சாந்தும் 
தங்க மஞ்சளும்
புழங்குகிறேனென்றாலும்
நீர்த்தும் இருக்கிறேன்.

நீலத்தில் மையலுண்டு
ஊதாவில் தூய விருப்பம்
பச்சையம் ரொம்பப் பிடிக்கும். 

பச்சைக்கு என்னைப் பிடிக்குமா
என்பது தெரியாமல்
வர்ணக் குழப்பத்தில் தோய்ந்து நான்

செவ்வாய், 2 ஜூலை, 2024

துண்டுகள்

கம்பிக் கூண்டுகளுக்குள்
வெண்சாக்கில் 
கட்டிக் கிடக்கின்றன
கொள்கைகள்

வெளிப்பட்டால் விரல் துண்டு
வெட்டியவர் குடல் துண்டு
துண்டுகளின் தூண்டுதலில்

எண்ணங்களுக்கு விடுதலை 
என்று மலருமென
ஏங்காமல் நிம்மதியாய்த்
துயிலட்டும் அங்கேயாவது

ஞாயிறு, 2 ஜூன், 2024

ஒளிக்கீற்று

பாதையெங்கும் வெளிச்சம்
கூசும் கண்களோடு பயணிக்கிறேன்.

கொஞ்சம் ஓய்வெடுக்கக் கூட
இருட்டை விரும்புவதில்லை.

வெளிச்சத்தை விட இருளென்றால் 
அதி பயமெனக்கு.

வசப்படா கண்கள் தூக்கத்தில் ஆழும் போதெல்லாம்
கடவுளுக்கு அத்யந்த நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

இந்த இருள் தற்காலிகம்
ஆழ்ந்த நித்திரை ஆட்கொள்ளும் கட்டாயம்

அப்போதும் நம்பிக்கையுண்டு
வழிகாட்டியபடி ஒரு ஒளிக்கீற்று முன்செல்லுமென.

Related Posts Plugin for WordPress, Blogger...