எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 22 ஜூன், 2016

உன்னிடம் ஒரு வார்த்தை. :_



உன்னிடம் ஒரு வார்த்தை. :_

நீயொரு பிடிவாதக்காரி !
உன்னிடம் எனக்குப் பிடித்ததே
உன்னுடைய அந்தப் பிடிவாதம்தான்.
நீயொரு அகம்பாவக்காரி !
உன்னை எனக்குப் பிடிக்க
வைத்ததற்குப் பெருங்காரணம்
அந்த அகம்பாவம்தான்.
உன் பிடிவாதத்தை என்று நீ
விட்டுக் கொடுக்கின்றாயோ
அன்றுதான் நீ நல்லவளாவாய்.
உனக்கு என்னுடைய தூய
அன்பைவிட
உன்னுடைய அந்தப்
பாழாய்ப் போன
பிடிவாதமும்
அகம்பாவமும்தான்
முக்கியம்.
நீ என் கல்லறைக்கு
என்றாவது ஒருநாள்
வர நேர்ந்தால்
அங்கு கொட்டிக் கிடக்கும்
பூக்கள் கூறும் கவிதை,
இங்கும் இன்றும்
நீ வருவாயென
இவள் உன்னை எதிர்பார்த்தே
ஏமாந்தே காத்து இருக்கிறாள்.
இன்னும் காத்திருப்பாள்
என்பதாகத்தானிருக்கும். 

-- 84 ஆம் வருட டைரி. 

ஞாயிறு, 19 ஜூன், 2016

வேஷங்கள் கலையும் நேரம் :-



வேஷங்கள் கலையும் நேரம் :-

வேஷங்கள் கலையும் நேரம்
பாசத்தை அழுத்தும் பாரம்.

நட்புக் காலங்கள்
நழுவி ஓடுகின்றன.
நட்புக்குப் பிரிவேது ?
நேரம் வந்துவிட்டதோ ?
பிரியத்தான் வேண்டுமோ ?
நாடகத்தில் காட்சிகள்
முடிந்துவிட்டன.
ஆனால்
நான் எதிர்ப்பார்த்த முடிவில்
சுபம் இல்லையே !
இந்துக்களின் நம்பிக்கையின்படி
பரமாத்துமாக்கள்
மறு அவதாரம் எடுத்துக்
கொண்டேயிருக்கின்றன.
ஆனால் முடிந்துபோன
அவதாரங்கள் மீண்டும்
உருவெடுக்க முடியாதே !
வேறு அவதாரம்தானே
எடுத்தாக வேண்டும்.
உயிர் ஒன்றானாலும்
எடுக்கும் அவதாரங்கள்
வேறுபட்டதே.
அப்படியானால்
அவற்றிற்குள்ள
தொடர்புப் பிணைப்புகள்
அறுந்துபோக வேண்டியவையோ ?
வேஷங்கள் கலையும் நேரம்
உள்ளத்தில் சுமக்கும் பாரம்.
கோபுரத்தின் மேல்
செதுக்கப்பட்ட பொம்மைகள்
அடிக்கடி மாற்றப்படுகின்றன.
அப்படியும் முடியுமா ?
முடிகின்றதே !
நெஞ்ச ஏட்டில்
பதிந்த நாட்களனைத்தும்
இன்பமயமாய் இருந்துவிட்டால்
எந்த நாளைத்தான்
நினைவில்  இருத்துவது ?
அதில் சோக நினைவும்
சிறிது கலந்துவிட்டால்
பிரிவுச் சுமையும்
சேர்ந்துவிட்டால்தான்
இன்பம் சுவை கூடுமென
நினைத்துவிட்டதோ
இந்தக் குரூர விதி. !
வேஷங்கள் கலையும் நேரம் !
இதயங்கள் பிரியும் தூரம் !!
நெஞ்சத்தை அழுத்தும் சோகம். !!!

-- 85 ஆம் வருட டைரி  


சனி, 18 ஜூன், 2016

கண்கள் :-



கண்கள் :-

கண்களே !
ஓ ! கண்களே !
அழகுக் கண்களே !
கவிதைக் கண்களே !
கவர்ச்சிக் கண்களே !
இரு நாட்களாக நீ எங்கு சென்றாய் ?
உன் ஒளி என்னை உற்சாகப்படுத்துகின்றது
முன்னேறத் தூண்டுகின்றது.
உன் பார்வை என்னை
மகிழவைக்கின்றது.
மயங்கவைக்கின்றது.
உன் ஒவ்வொரு அசைவும் என்னை
ஆடவைக்கின்றது
பாடவைக்கின்றது.
உன் கண்ணின் கருமணி என்னைத்
துள்ள வைக்கின்றது
அள்ள வைக்கின்றது.
உன் கள்ளப் பார்வையின்
கருத்தை அறிய
எண்ணித் துடிக்கின்றேன்.!
ஏங்கித் தவிக்கின்றேன். !


  -- 82 ஆம் வருட டைரி.

வெள்ளி, 17 ஜூன், 2016

ஒளிபடைத்த கண்ணினாய் வா ! வா ! வா ! - 2.



ஒளிபடைத்த கண்ணினாய் வா ! வா ! வா !  - 2.

”பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்.”
என் இதயத்தின் இமைக் கதவுகள்
உன் கண்ணழகை எண்ணிஏங்கும். !
கூந்தலில் பதுக்கிய அழகிய முத்துகள்.
காமன் தோட்டத்துள் கருவண்டுத் திராட்சைகள்.
விழிக்குளத்தில் நீந்தும் மீன்கள்.
மருண்டு நோக்கும் சின்ன மான்கள்

“உன் கண்களின் ஓரம்
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான்மாற்றுவேன்.”
கொள்ளையழகுக் கண்களில்
யார் கொள்ளிக் கண்கள் பட்டதோ >
பள்ளியில் ஆராய்ச்சிக் கூடத்தில்
அமிலங்கள் நடத்திய அவசரத் தேர்தலில்
உன் கண்களுக்கு வாக்குப் போட்டுத்
தங்களுக்குத் தலைவர்களாக
ஆக்கிக் கொண்டன.
கவிதைக் கண்களைக் காண
கனவோடு வந்த எனக்குக்
கண்ணீரில் பதில் கிடைத்தது.
யார் முகவரிக்கோ எழுதப்பட்ட
காலனின்கடிதம்
காலம் தவறிக் கடமையும் தவறி என்
கண் முகவரியைச் சந்தித்துவிட்டதே !
கதறித் துடித்தும் கத்திப் புலம்பியும்
என்ன பயன் ?
முன்பு வெல்வெட்டில்
பதித்தெடுத்த வைரக் கற்கள்.
இப்போது வெறிச்சென்று குழி குடியிருக்கும்
பள்ளங்கள்.

“உன் கண்களின் ஓரம்
எதற்காகவோ ஈரம்.
கண்ணீரை நான் மாற்றுவேன்.”
அறுவைச் சிகிச்சைக்கு
ஆறாயிரம் செலவு.
அழகிய கண்கள் இருந்த இடத்தில்
அடுத்தவரின் கண்கள்
வாசம் செய்யப் போகின்றன.
ஒளிபடைத்த கண்ணினாய் வா ! வா ! வா !
உன் வரவுக்காக
உன் திறப்புவிழாவுக்காக
ஒவ்வொரு வினாடியும் என் இதயம்
காத்துக் கொண்டிருக்கின்றது. 

-- 85 ஆம் வருட டைரி

வியாழன், 16 ஜூன், 2016

இராக்கால மேகங்கள் :-



இராக்கால மேகங்கள் :-

கறுப்புக் கடலால்
துண்டாகிப்போன
குட்டித் தீவுகள்.
கடலால் சூழப்பட்ட
தீபகற்பங்கள்.
கட்சிக்குக் கட்சி
தாவும் குட்டி
அரசியல்வாதிகள்.
மழைக்காலத்தில்
அங்கங்கே
தேங்கிக் குழம்பிச்
சேறாய்க் கிடக்கும்
குட்டிக்குட்டைகள்.
நம்பிக்கை விதைகளை
நயவஞ்சகமாகத் தூவும்
ஆண்களின் பேச்சுகள். 

-- 84 ஆம் வருட டைரி. 


Related Posts Plugin for WordPress, Blogger...