எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 6 ஜூன், 2016

மௌனமே பார்வையால்..



மௌனமே பார்வையால்..

உன் அன்பில்
காட்டாற்று வேகம் இல்லையென்றாலும்
என்றும் வற்றாத ஜீவநதியின்
ஷாந்தம் உறவாடுகின்றது.
உன் உறவில்
பைத்தியக்காரத்தனமான
ஆவேசம் பீறிடாவிட்டாலும்
பசுவின் ஸ்பரிசம்போல்
சுகமளிக்கின்றது.
மென்மையான உறவின்
பிரிவின்போது உனது
உணர்ச்சிகளில்
சோக வெள்ளம்
முட்டிமோதி அணை உடைத்து
உன் கண் மடையை உடைத்துப்
பொங்கியெழுந்து உன்
மனதின் வேகத்தை
தாபத்தை
என்னை உணரச் செய்திருக்கின்றது.
பிரிவின் முடிவின்போது
என்னைக் கண்ட பரவசத்தில்
என்ன செய்வதென்று
அறியாமல் ஒரு க்ஷணம் நீ
திகைத்துப் பின் மெதுவாக
நடந்துவந்து
நான் உண்மையாகவே
வந்திருக்கின்றேனா என
என் கையை ஸ்பரிசித்து
உண்மைதான் என உணர்ந்தபின்,
உன் முகத்தில் பூத்த புன்னகைப்
பூவைக் கண்டதும்
எனக்கு உன் உள்ளம்
பூரணமாகப் புரிந்து போகின்றது.
தெரிந்தபின் எல்லாம் புரிந்தபின்
என்மேல் ரோஜாப் பூக்களைக்
கூடை கூடையாய் அர்ச்சித்து
அதில் என்னை மூழ்கடித்ததுபோல்
மூச்சுத் திணறுகின்றது.

-- 84 ஆம் வருட டைரி. 

ஞாயிறு, 5 ஜூன், 2016

கானலுக்கும் தாகமுண்டோ ?



கானலுக்கும் தாகமுண்டோ ?

என்னுள்ளே இனம்புரியாக் குழப்பம்.
என்னை எனக்கே தெரியவில்லை.
என் மனதை என்னாலே
அறிந்துகொள்ள முடியவில்லை.
கண்ணெதிரே கல்லுக் குண்டாட்டம்
நீ நிற்கையில்
நீ மனம் பூத்துப்போய்க்
காத்திருக்கையில்
கிணற்று நீரை ஆற்று வெள்ளத்தால்
என்ன செய்துவிட முடியுமென்ற
எண்ணம் தலைவிரித்து
ஆடுகின்றது.
நீ சென்றவுடன்
ஆன்மாவைக் கொன்றுவிட்ட
உயிர்போல்
கிடந்து துடிதுடிக்கின்றது.
ஒருவேளை
நான் ரொம்பச் சின்னப்
பெண் மாதிரி பிஹேவ்
பண்ணுகிறேனோ ?
ஸ்கூல் கேர்ள் மாதிரி
அர்த்தமில்லாமல்
பிடிவாதம் பிடிக்கின்றேனோ ?
நான் அவசரப்படுகின்றேனோ ?
நான் ஒரு பைத்தியக் காரியோ ?
நான் பரபரவென்று உன்னை
ஆக்கிரமிப்பது உனக்குப்
பிடிக்கவில்லையா ?
அளவுக்கு மீறி எதிர்பார்க்கின்றேனோ
என்னுடைய இந்தத் தவிப்பு
உன்னைச் சங்கடப்படுத்துகின்றதா டியர்
நான் ரொம்ப
அலைபாய்கிறேனோ டியர்
இந்த வயதில்
இதெல்லாம் அர்த்தமுள்ளதா ?
அன்பு நட்பு பாசம் எல்லாம் ?
இது சாசுவதமானதா >
இல்லை நாளானபின்பு
சலித்து வெறுத்து விடுமா ?
உன்னுடைய துணை துணிவு
உறுதியானதுதானா
நட்டாற்றில் கைவிட்டுவிட
மாட்டாயே ? சாரி டியர்.
இந்தக் காலத்தில் தண்ணீர்ப்
பஞ்சத்தில் ஆறுகளில் மட்டும்
தண்ணீர் இருக்குமா !
ஆனாலும் நீ என்னைக்
கொடும்பாலையில்
கடும் வெய்யிலில்
தவிக்கவிட்டுவிடாதே 
உன் உறுதிமொழிகள்தான்
எனக்கு உணவாக ஆகின்றன.
விடையை என்னுள்ளே
புதைத்துவிட்டுக்
கேள்விகளை மட்டும்
உன்னிடமே தேடிக்கொண்டு இருக்கின்றேனோ ?
உன் நிலையில் நானிருந்தால்
என்ன செய்திருப்பேன்
என்று விளங்கவில்லை.
இருந்தாலும் உன்னைப் போலக்
கல்லாகிவிடமாட்டேன் டியர்.
உன் கேள்விகள் என்னை
வேதனைக்கு உள்ளாக்குமென வேதனைப்படாதே !
ஏனெனில் நான் எதற்கும்
துணிந்துவிட்டேன்
உன் மௌனத் தவத்தைத்
தகர்த்து எறிந்துவிட்டு
என்னை உரிமையுடன்
இரண்டு வார்த்தையாவது திட்டேன்.

-- 85 ஆம் வருட டைரி. 

வெள்ளி, 3 ஜூன், 2016

என் மனம் உனக்குப் புரியாதா ?



என் மனம் உனக்குப் புரியாதா ?

உன்னை நான் சந்தித்த முதல் சந்திப்பு
இதயத்தின் ஊமைப்புலம்பல்கள்
கனவுகள் கதறும் ஓலங்கள்.
உன்னை விட்டுப் பிரிந்துவிட்டதாக
உன்னிடமிருந்து என்னைப்
பிரித்துக் கொண்டதாக
மற்றவர் பொறாமைத்தீயால்
கூறும் கட்டுக் கதைகளை
நீ கூட நம்பத் தயாராகிவிட்டாயா ?
உன்னில் ஒவ்வொரு அங்கத்திலும்
உயிரிலும் ஆன்மாவிலும்
அனைத்திலும் ஆக்ஸிஜன் போலப்
பரந்து கிடக்கின்ற
என்னைப் பிரிப்பது அத்தனை சுலபமா ?
இதை நீ நம்பிவிட்டாயோ என
நினைக்கப் பயமாக இருக்கின்றது.
நம்பிவிடுவாயோவென்ற பதற்றம்
கரையான் போல் மனதை அரிக்கின்றது.
உன்னைவிட்டால் நான் எங்கு போவேன் ?
எனக்கு யாரைத் தெரியும். ?
எனக்கு யாரிருக்கின்றார்கள் ?
உன்னைத் தவிர.
ஆயிரக்கணக்கான பந்தங்கள்
அடுத்தடுத்து வந்தென்ன ?
ஆனால் உன்னைப் போல ஒருவர் எனக்கு எப்படி ?
வரமுடியும் ?
என்னை உன்னிடம் முழுமையாக ஒப்படைத்தும்
நீயே நம்பாதபோது
தோழமைக்குள்ளே
சந்தேக வித்து
முளைத்துப் பயிராகி
விட்டபிறகு
என்னை யார்தான்
நம்புவார்கள் ?
உன் ஒவ்வொரு அணுவிலும்
நான் இரண்டறக் கலந்து
இருப்பது போல்
என்னிலும் நீ
ஒன்றிவிட்டாயே !
உன்னை
என்னிலிருந்து
எப்படிப்
பிரிப்பேன் ?
என்னால் முடியக்கூடிய
விஷயங்களைத்தான்
முயற்சி செய்ய முடியும்.
முடியாத விஷயங்கள் என்றால்
ட்ரை பண்ணவே மாட்டேன்.
உன்னால் என்னை
ஒட்டடையைத் தட்டுவது போல்
தூசியை ஊதி விடுவது போல்
எளிதாக உதற முடியுமா?
ஆனால் எனக்குத் தெரிந்து
நான் உணர்ந்ததிலிருந்து
உன்னிடத்தில் என்னைப் புரிந்த
என் அன்பை உணர்ந்த
மனம் என்ற ஒன்று இருப்பதாக நினைக்கின்றேன்.
உன் அன்பை எண்ணி நான்
இறுமாந்து களிப்புடன் திரியும் வேளையில்
இந்த இடியா ?
நீ எனக்கு நல்ல விதமாய்ப் பதில் கூறுவாய் என்பதால்
கொஞ்சம் அவகாசம் கொடு.
உன் வார்த்தைப் பூக்களைப் பொறுக்குவதற்கு
என் மனக்கூடையைத் தயார்ப்படுத்திக் கொள்கிறேன்.

- 85 ஆம் வருட டைரி.

வியாழன், 2 ஜூன், 2016

ஒளி படைத்த கண்ணினாய் வா ! வா ! வா! – 1



ஒளி படைத்த கண்ணினாய் வா ! வா ! வா! – 1

கண் வானத்தில்
நீர் மேகங்களின் உலாவல்கள்.
வெள்ளத் தேங்கல்கள்
துன்பச் சுடரின் பிம்பங்கள் ஆயிரம்.
கண்ணீரைக் கொட்டிக் கொட்டியே
காய்ந்துபோன கன்னியரின்
கண் எரிச்சல்கள்.
தண்ணீரில் மூழ்கி
அதுவே வாழ்வென
எண்ணி ஏமாந்துவாழும்
காளையர் கும்பல்கள்.
மண்மாதா தன் மடிபாரம்
தாங்கமல் விழுங்கிய
பட்டினிச் சாவுகள்.
சவ ஊர்வலத் தொகுதியில்
குடிவெறியர்களின் வாக்குறுதிகள்.
குடிகாரன் பேச்சு
விடிஞ்சாப் போச்சு
அவமானத்தையே தன்
ஏகபோக சொத்தாகப்
பிள்ளைகளுக்குப் பிரித்துப்
பத்திரம் எழுதி
வைத்துவிட்டுப் போகும்
அஸ்தமனச் சூரியன்கள்.
நாடு எங்கே செல்கின்றது ?
இங்கே கண் கெட்ட பிறகுகூட
சூரிய நமஸ்காரம் இல்லை.
இத்தகைய சிப்பியில் முத்தும் பிறக்குமோ ?
இந்தச் சேற்றில் செந்தாமரையும் மலருமோ ?
நாட்டை நல்ல நிலைமைக்கு
இட்டுச் செல்லும்
நல்ல கனவுகள் கூட வருவதில்லை
இந்தக் கண்களில். !
ஒரு கனவை விலைக்கு
வாங்கினேன்.
அந்த ஊமை நாடகத்தில்
இந்தப் பட்டுக் கனவுதன்
சிட்டுச் சிறகை
விரித்துப் பறக்கின்றது
ஓர் உதயத்தை நோக்கி. !
அந்த உதயத்தில்
நம்பிக்கையூட்டும்
இரு ஒளிபடைத்த
அழகிய முத்துகள்
இமைக் கதவுகளுக்குள்
விரிகின்றன.
அவற்றின் மேல் எனக்கொரு
நம்பிக்கை. !
ஒரு நல்ல எதிர்காலத்தை
அமைக்க அவற்றிற்கு
வல்லமை உண்டு.
ஒளிபடைத்த கண்ணினாய்! வா ! வா! வா!.
உன் வரவால் இந்தக் குருட்டு நாடு
ஒளிபெற்றுக் களிப்படையும்.
சிறப்படையும். !

-- 85 ஆம் வருட டைரி.

Related Posts Plugin for WordPress, Blogger...