ஒரு உன்மத்தம்தான் உன்னைச் செலுத்துகிறது
ஒன்றை உன் உரிமையானதாய்க் காட்ட.
விழுதைப் போலப் பற்றி இருக்கிறாய்
விழுந்துவிடலாம் என்றாலும்.
நீ பூசிக்கொள்ளும் ஒவ்வொரு சிரிப்பிலும்
வாழ்ந்த கணங்களின் கடின நெடி.
கடக்கின்றவர்க்குப் பழைய கள் என்றாலும்
உன் கரங்களில் எப்போதும் புதிய மொந்தை
மனச்சுரப்பில் நீயாய்ச் சுரந்து நீயாய்ச் சேமித்து
நீயே மாந்தி நீயே மயங்கி
காலங்கள் கடக்கட்டும் உன் சிந்தை மயக்கத்தில்
தெளியலாம் என்றேனும் அன்று
உன் முன் பாளைகள் வெடித்திருக்கும்.