எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

கொஞ்ச(ம்) மறந்த கதை.

கொஞ்சம் மறந்த கதை.

4. 8. 84.

மனம் குருவித் தாவலாய்த் தாவி ‘விர்’ரிட்டுக் கொண்டிருந்தது. தூரத்து ரெக்கார்டு மச்சானை முந்தானையில் முடிந்து வைக்கச் சொல்லிக் கொண்டிருந்தது. ஜன்னல் வழியே தெரிந்த மரக்கிளையில் அந்தக் குருவி அமர்ந்து ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. மனசு அதனுடன் ஒன்றிப் போனது. கிளை தாழும்போதெல்லாம் குருவி விழுந்துவிடுமோ என்று மனம் பயந்து பயந்து எழுந்தது.


ஒன்றும் வேண்டாம். போ என்று கூறிவிட்டுக் காற்றின் அலைச்சலைப் போலக் காலை வீசிப் போட்டு எங்காவது நடக்கத் தோன்றியது. பெட்டி படுக்கை எல்லாம் கட்டித் திட்டமிட்டு ஊருக்குப் புறப்படுவது என்பது எரிச்சலான நிகழ்ச்சி. அதை எல்லாம் பத்திரமாய்ப் பாதுகாத்துக் கொண்டே இருக்கவேண்டும். அதெல்லாம் இல்லாமல் கட்டிருக்குற துணி போதும் கைில் ஒன்றுமே இருக்கக் கூடாது. அடுத்த வேளைக்குன்னு ஒரு நயாபைசா கூட வேண்டாம். இப்பிடியே கால் போற போக்குல நடந்துண்டு இருக்கணும். களைச்சுப் போனா சாஞ்சுக்க ஒரு வேப்பமரம் கூடவா கிடைக்காமல் போயிரும். குளம் கிணத்துல தண்ணி குடிச்சுக்கலாம். யாராவது கூப்பிட்டுப் போட்டா ஒரு வா சோறு.

கல்யாணமாவது கருமாதியாவது அதுக்காகத்தானே இத்தனை விலகலும். தப்பிச்சு ஓடி வந்துடணும். லட்சக்கணக்காப் பணம் செலவழிச்சு, அதுல குறை வரப்படாது, இதுல குறை வரப்படாதுன்னு கவலைப்பட்டுண்டு இத்தனையை அள்ளிண்டும் வரப்போறவன் வீட்டில அதுல குறை இதுல குறைன்னு நோண்டி, நோண்டிக் கண்டுபிடிச்சு எல்லாம் ஒத்துப் போய் கடைசியாய் ஒரு வழியாய் அத்தனை பேரையும் சமாதானப் படுத்தி ஒரு வழியாய்க் குடும்பத்தை ஆரம்பிக்கிறதுக்குள்ளே.. ச்சேன்னு போயிடும்.

அதிலும் அவனுக்குப் புடிச்சதே நானும் செய்யணும். அவனுக்காக சமைச்சு, காத்திண்டிருந்து சர்வாதிகாரத்துக்குப் பயந்து ஒரு காரியத்தை உரிமையோட செய்ய முடியாம அவன் அனுமதியை எதிர்பார்த்துண்டு ஏதும் நானாப் பண்ணப் போய் தப்பாய் முடிஞ்சுட்டா அவன் போடற கூச்சலுக்கு அடங்கி அப்புறம் நான் நு ஒருத்தி இருக்கேங்கிற சுயமே மறந்து போயிடும்.

அவன் எனக்காகப் பூவோ அல்வாவோ புடவையோ வாங்கிண்டு வந்தால் ஆகா இவனைப் போல ஒருத்தன் உண்டான்னு நெனைச்சு சந்தோஷப்படணும். புலி மானைக் கொழுக்க வைக்கிறது தனக்குத்தான்னு புரிஞ்சுக்காத முட்டாளா.?

அதிலும் அவன் சந்தேகப்படுற கேஸாயிருந்தால் கேட்கவே வேண்டாம். என்னையும் என்னோட இறந்த காலத்தையும் தோண்டுறதுல இறங்கிடுவான். இப்ப நான் எப்பிடி இருக்கேங்குறது அவனுக்குத் தேவையில்லை. அதை விட என் இறந்த காலத்துல நான் சலனப்பட்டிருப்பேனான்னு குதறிப் பார்க்குறதுல ரொம்ப சபல புத்தி உள்ளவன். தன்னைப் போலவே மத்தவங்களையும் நினைக்குற ஜென்மம். தன்னைப் போல இளமைப் பருவத்திலதான இவளும் இருந்திருப்பா அப்பிடின்னு நெனைக்க முடியாதவன். அதுவும் எங்கிட்ட நேரடியாக் கேட்டா பொறுத்துக் கொள்ளலாம். அவன் நேர்மையைப் பாராட்டலாம். மூணாம் பேர் சொன்னாங்க, நாலாம் பேர் சொன்னாங்கன்னு நம்பிக்கிட்டு வந்தோ சந்தேகப்பட்டோ எங்கிட்ட ஏதும் கேட்டான்னா கூறு போட்ருவேன் கூறு.

மேலும் ஒரு காரணம் ( நான் பண்ணிக்கப் போறதில்லைன்னு சொல்றதுக்கு ). இப்ப நானும் அவனும் ஒரே துறையில் சம்பந்தமுள்ளவங்களா, ஆர்வத்தோட முன்னேறிக்கிட்டு இருக்குறப்ப, அவனைவிட நான் முன்னேறிடப்படாதுங்குறதுக்காக என்ன வேணும்னாலும் செய்வான். அவனை விட ஒரு விதத்துல உயர்ந்துட்டேன்னா அவன் என்னையும் என்னோட அன்பையும் நெனைக்காம என்னோட திறமையை அழிச்சுரணும்., என் சக்தியை ஒடுக்கிறணும்னு எறங்கி என் திறமையை அழிச்சு என்னையும் அதோட சேர்த்து அழிச்சிருவான். அமாம் என் ஆற்றல் போய்விட்டால் நான் இருந்தும் என்ன புண்ணியம். ?

அவன் என்னை அட்ஜஸ்ட் பண்ணிக்கிறதெல்லாம் தன்னைத் தன்னக்கட்டிகிறணும்னுதான். கொஞ்சம் வளைஞ்சு குடுத்தாலும் போதும் சுத்தமா ஒண்ணுமில்லாமப் பண்ணிருவான்.

அவனுக்காக வீட்டில் உழைச்சு ஆஃபீஸிலே உழைச்சு சம்பாரிச்சு கதை எழுதி அனுப்பிக் கிடைக்குற பணத்தை அவன்கிட்ட கொடுத்து அவன் சந்ததியைச் சுமந்து அவனுக்காக வாழ்ந்து அவன் உறவினர் நண்பர்களுக்குப் பயந்து அடங்கி கடைசீல எனக்குன்னு நான் ஒண்ணுமே பண்ணிக்கலை.

“ என்ன சசி , இன்னுமா குமுதத்துக்குக் கதை எழுதறே ? சீக்கிரம் வந்து தொலையேன். இந்த பூட்ஸுக்கு இன்னம் பாலீஷ் போடாமக் கிடக்கு. எழுதிக் கிழிக்கிறாளாம். !” அவன் சாரி அவர் கத்திக் கொண்டிருந்தார்.

மணி எட்டே முக்கால். இன்று குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்று நான் ஆஃபீஸுக்கு லீவு. ஒன்பதரைக்கு அமர்க்களமெல்லாம் முடிந்து அவரை அனுப்பி விட்டு ஆயாசத்துடன் மேஜை முன் அமர்ந்தேன். அடியில் வைத்திருந்த முதலில் எழுதின பேப்பர்களைக் கிழித்துவிட்டுப் புதிதாக எழுத ஆரம்பித்தேன். “ ஏழுமணிக்கு ராஜா தன் மனைவி சுகுணாவை ‘ஏண்டா கண்ணம்மா. உன் உடம்பு சரியில்லையாடா கண்ணா “ என்று அவளைப் படுக்கையில் இருந்து கொஞ்சி த்ிட்டஎழுப்பினான்.

---84 ஆம் வருட டைரி.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...