புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

குழப்ப மொட்டு.

தினம் பொழிகிறது மழை
குளிரில் நடுங்குகிறது
பால்கனிச் செடி.

சூரியனின் வெப்பமும்
நிலவின் தட்பமும் கூட
தோராய வீதத்தில்.

மும்மாரி தினமாரியானதில்
அணுங்குவதில்லை என்றாலும்
அணுக்கப் பயத்தில்.

காற்றும் மழையும்
கைகோர்த்துப் பிடித்திருக்கின்றன
பூவாடும் கிளையை.

எத்தனையோ தினம் பூத்திருக்க
குழப்ப மொட்டும் பூவானதை
கிளைவிரித்துப் பார்க்கிறது செடி.
  

திங்கள், 17 செப்டம்பர், 2018

கர்மம் தொலையாமல்..

பசியெடுத்துப் பிய்க்கும்
வல்லூறுகளின் பிடியில்
அங்கம் கிழிந்தபடி
மரணாவஸ்தையில் எலி.

தண்ணீர்த் தொட்டியின்மேல்
தாகவிடாய் தீராமல் குதற
பொங்கி வழியும் தண்ணீரோடு
எலியின் ரத்தமும் சிறுநீரும்.

நீரிருந்தும் கர்மம் தொலையாமல்
புண்ணியாசனமும்
தர்ப்பணமும் ஒருங்கே
செய்து கொண்டிருக்கிறது தொட்டி.

செவ்வாய், 11 செப்டம்பர், 2018

கடந்து செல்லும்..

மைல்கற்களுக்குக்
காவலாய் நின்றிருக்கின்றன
சாலையோர மரங்கள்.

உச்சாணிக் கம்பியில்
உரையாடிக் கொண்டிருக்கின்றன
மஞ்சள் இமை மைனாக்கள்.

கடந்துசெல்லும்
ஒவ்வொரு பாலத்தையும்
கடகடத்து அறிவிக்கிறது ரயில்

இன்று நாளை இன்று நாளை
இருப்பும் மறைவும்
லப்டப்பிட்டு உயிர்க்கிறது இதயம்

இருத்தலின் சுயகம்பீரம்
தானே பெற்றுவிடுகின்றன
தினம் மலரும் பூக்கள்.
  

சிற்றம்பு.

வெய்யில் காய்கிறது
பாறைத் திட்பம்.
சாரலும் தூறலும்
சிற்றம்பு எய்கின்றன.
வழுமையும் கொழுமையும்
வடிந்துகொண்டிருக்க
நீர் உளியிலிருந்து
புறப்படுகிறது புதுச்சிற்பம்.

  

வியாழன், 6 செப்டம்பர், 2018

கரைதல்.

குந்தித் தின்றால்
குன்றும் கரையுமாம்
குந்தித்தான் தின்கின்றன
குருவியும் காக்கையும்
தாங்கள் கரைந்தபடி..
  
Related Posts Plugin for WordPress, Blogger...