எனது நூல்கள்

எனது நூல்கள்
எனது நூல்கள்

சனி, 28 செப்டம்பர், 2013

குறிப்பு.எண்ணக் கோட்டுக்குள்

எழுதமுடியவில்லை நினைப்பவற்றை

அவை மேலெழும்பிப் பறக்கின்றன

குறிப்புக்களாய்.


வியாழன், 26 செப்டம்பர், 2013

நிர்மலம்.

அடித்துப் பொழியும் மழை
அழித்துச் செல்கிறது
அனைத்தையும்.
நிர்மலமான வானத்தின்கீழ்
அழுக்கற்று நிற்கிறது பூமி.
குளிர்கவிதை எழுதிச்செல்கிறது
தத்திச் செல்லும் காற்று.
கதகதப்பாய்க் கசிகிறது
வெட்க அணைப்போடு சூரியன்.
முத்தமிடப் பால் வழியும் வாயோடு
ஓடி வருகிறது நிலா.
நினைவும் மறதியுமாய்
மெய்மறந்து நிற்கிறது சந்தியாகாலம்.

கசப்பு.

மாடிப்படியேறித் திரும்புகிறது
வேப்பங்கிளைக் காற்று.
சாத்திய கதவுக்குள்
திறக்கமனமில்லாமல்
அமர்ந்திருக்கும் மனத்துள்
கசந்த வாசனையோடு
கலந்து கிடக்கிறது காற்று.

திங்கள், 23 செப்டம்பர், 2013

ஆட்டம்.

சூத்திரக் கயிறறுந்தும்
சொல்லப்பட்ட புராணத்துக்காய்
ஆடிக் கொண்டிருக்கிறது பொம்மை.

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

பௌர்ணமிப் புகை

ஓரிரவுப் ப்ரயாணத்தில்
மெல்லத் தேய்ந்த பௌர்ணமி
விடியலில் ஊர் சேர்ந்தது என்னுடன்.
வெள்ளி சுமந்த முகத்தைத்
தங்கமுலாமிடுகிறது வெய்யில்.
யானை நிழல் போர்த்துகிறது
விரிசடை ஆல நிழல்.
நுரையீரலில் நிரம்புகிறது
பனிப்புல் புகைக்கும் குளிர்.
மரக்கிளைக்குள் புதைந்து
உரையாடிக் களிக்கிறது குயில்.
வாய் திறக்கும்போது
வட்டமாய் உருண்டு வெளியேறுகிறது
சுமந்து வந்த நிலவுப் புகை..

சனி, 21 செப்டம்பர், 2013

நம்பிக்கைஉன் ஒற்றை நம்பிக்கையைப் பெறத்

தூக்கிலிட முடியுமா

அனைவரது அந்தரங்கத்தையும்..

சனி, 14 செப்டம்பர், 2013

டூப்ளிகேட்எதைத் தொலைத்தாலும்

டூப்ளிகேட் கிடைத்துவிடும்

அப்பா, அம்மா உட்பட..

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

கற்பனை ஏதோதோ எனக்குள்

கற்பனை செய்து

ஏதேதோ எனக்குள்

ஏமாற்றமுற்றதாய்க்

கோபித்துக் கொள்கிறேன்.

ஒன்றுமறிந்திராத உன்மேல்

பழி போட்டபடி..

வியாழன், 5 செப்டம்பர், 2013

உலகத்தின் அண்ணன்.

போருக்குப்பின் போர்
அமைதிக்குப் பின் அமைதியின்மை
சிலது தெறிக்கத் தெறிக்கக் கழலும்.
சிலது கழண்டபின்னும் சுழலும்.
திரவத் தங்கம்
அமைதி ஆசான்
மரபணு விதைகள்
பஞ்சத்துக்கு உதவி
ஏதோ ஒரு காரணம்
ஏதோ ஒரு முகமூடி
இன்னொன்றை ஆக்கிரமித்து
ஏகாதிபத்தியம் செய்ய..
எத்தனை முகமூடி
எப்படிக் கழட்டினாலும்
உண்மை முகம் தனக்கே தெரிவதில்லை
உலகத்தின் அண்ணனுக்கு.
Related Posts Plugin for WordPress, Blogger...