எனது நூல்கள்

எனது நூல்கள்
எனது நூல்கள்

ஞாயிறு, 27 மே, 2012

நகர்த்தல்கள்

அடுத்த நகர்த்தல்கள்
அறிந்துதான் விளையாடுகிறோம்
பழைய நகர்த்தல்களின்
எதிர்வினைகளோடு.

வெள்ளி, 25 மே, 2012

பூநாகம்.

பூக்காடா தீக்காடா
மயங்கிக் கிடக்கிறது
உயிர்பருகும் ஏக்கத்தில்
ஒளியவந்த பூநாகம்.

வியாழன், 24 மே, 2012

உதிர்தல்

நீ பறவையுமல்ல
நான் இறகுமல்ல
தவழ்ந்து தவழ்ந்து
தேடுகிறேன் என்னை
உதிர்த்துச்சென்ற பறவையை..

புதன், 23 மே, 2012

நானற்றது...

வயல்வெளிகளிலும்
நதியோர நாணல்களிலும்
படிந்து கிடந்தேன் பிடிசாம்பலாய்
என்னுடையதான அஸ்தி
நானற்றதை ஓதியபடி
காற்றில் பரவியிருந்தது.

செவ்வாய், 22 மே, 2012

நட்புச் சீர்..

ஊன்றி ஊன்றிக் கவனித்தும்
வார்த்தைப் பிழைகள்
நட்பின் பக்கங்களில்
சீர் கெடுத்தபடி.

திங்கள், 21 மே, 2012

தேநீர்..

ஆடைகளுடன் காய்ந்து
கொண்டிருந்தது தேநீர்..
அது அவனுக்கானது அல்லவெனப்
புரியவைக்கப்பட்டபின்..

சூல்..

மழை முத்தத்திற்காய்க்
காத்திருக்கிறது
வெய்யிலில் பருவமடைந்த விதை
சூல் கொள்ள..

கவசங்கள்..

கழற்றிப்போட இயலாத அளவு
நம்மை அணிந்து கொண்டிருக்கின்றன
சாதிகள், மதங்கள் , இனங்கள்.

சனி, 19 மே, 2012

இணை

நகர்கிறது கருமேகம்
நிழற்குடை பிடித்து..
குளிர்கிறது நதிக்கு..

வெள்ளி, 18 மே, 2012

விருப்பக் கசப்பு..

மெல்லச் செல்லும் காலம்
எல்லா இழப்புகளையும்
நிம்மதி இன்மையையும்
அதிருப்திகளையும்
மெல்லவே கடந்து செல்கிறது..
தூக்கத்தில் துக்கத்தைத் தொலைத்து
புதுப்பிக்கிறது இரவு
கைகோர்த்தபடி உறங்குகிறது
ஜன்னல் நிலவு..
விசிறியபடி துணை இருக்கிறது
விருப்பக் கசப்போடு வேம்பு,,..

நெருப்புணவு.

தீ மிதித்தலோ
தீச்சட்டி ஏந்துதலோ
சுயவிருப்பம்.
நெருப்பை உண்ணென
யாரோ தொண்டையில் கொட்டுவது
எந்த நியாயம்..

வியாழன், 17 மே, 2012

முள்

யாரையும் காயப்படுத்தாமல்
சுற்றி வருகிறது
சுவர்க்கெடிகாரமுள்.

புதன், 16 மே, 2012

கண்மீன்கள்..

ரயில் ஜன்னல் திட்டில்
கொக்காய் வளைந்த கைகளில்
பயமற்று ஓய்வெடுக்கின்றன
கண்மீன்கள்

இடம்..

ஒரு துண்டு வானம்
ஒரு துண்டு நிலம்
தர மறுப்பதில்லை
ரயிலின் ஜன்னல்..

தன்னைத் தொலைத்தவள்

பால்யத்தோடு
தன்னைத் தொலைத்தவள்
திருமணத்துக்குப் பின்
தன்னைத் தொலைக்காதிருக்க
வேண்டிக் கொண்டது
பொம்மை..

புலம் பெயரும் குழந்தைகள்..

செவ்வண்ணப் பறவைகளாய்
ரயிலுக்குள் புலம் பெயர்கிறார்கள்
கண் சிறகில்
வெய்யில் விசிறும்
கைக்குழந்தைகள்..

மாலைச் சோர்வு.

எங்கு பறப்பது,,
பழகிய மரம்..
பழைய கிளைகள்..
மாலைச் சோர்வு
முகம் புதைக்கச் சொல்கிறது
ஆரவாரத்தோடு அழைக்கும்
பசிய இலைகளில்..

முற்றுதல்

புன்னகை இலைகள்
உதிர்ந்தபின்
சுருக்கச் சுள்ளிகளால்
முதிர்ந்த முகம்,

ஞாயிறு, 13 மே, 2012

பூ முத்தம்

பூ முத்தங்களை
உதிர்க்கிறது மரம்.
சிதறும் தேன்துளிகளால்
நனைந்து கிடக்கிறது மண்.
வெள்ளி, 11 மே, 2012

ஒற்றைச் சிரிப்பு

ஒற்றுப் பார்க்கிறாய்
ஒற்றைச் சிரிப்புதிர்க்கும் போதெல்லாம்..
ஒன்றுமேயில்லை
இது பூவுதிர்காலம்..

வியாழன், 10 மே, 2012

இணைப்பு

இணைப்பதற்குக் குழந்தைகளற்ற போது
துண்டிக்கப்பட வேண்டிய இணைப்புகள்
இணைந்து பிரிக்கின்றன தம்பதிகளை...

செவ்வாய், 8 மே, 2012

கிரண அருவி

கிரண அருவிகளில்
வெப்ப நீருற்றுடன்
பொங்கி வழியும் சூரியன்..
வியர்வை ஊற்றுக்களில்
நீராடியபடி சாலைகளில்
மிதக்கும் மனிதர்கள்.

திங்கள், 7 மே, 2012

மௌனம்..

செயல்களின் சுமையில் மொழியற்றிருந்தேன்.
மௌனம் என மொழி பெயர்த்திருக்கிறாய்.
செயல்களின் கனத்தை விட கொடுமையானது
மௌனமென்பது எனக்கு..
Related Posts Plugin for WordPress, Blogger...