எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 30 செப்டம்பர், 2016

ஊவா முள்

தலைப்பிரட்டைகள்
அலையும் குட்டை.
நண்டுக் காலிகள்
நட்டுவாக்கிளிகள்
நடுவில் மாட்டிய
நன்னீர் மீனுக்கு
மேவா சொர்க்கம்
ஊவா முள்.

வியாழன், 29 செப்டம்பர், 2016

யாமத்தின் கானகம்.

மழைப்பொறி பறந்து
வெள்ளத்தீயில்
விட்டில்களாய் மனிதர்கள்.

****************************

முத்தமிடத் துடிக்கிறது கடல்
அலை இதழ்களை மலர்த்தி.
கல்லிலிருந்து வெடித்துத்
துடிக்கிறது தேரை இதயம்.
இரண்டின் நோவும் நொடியும்
வேறு வேறல்ல.
இருந்தும் இரண்டும் ஒன்றல்ல.

********************************

பகலின் அரவங்களுக்குள் 
ஒளிந்த சுயம் 
யாமத்தின் கானகத்தில் 
பேரோலி எழுப்புகிறது.

மதுவரக்கம்.

தித்திக்கின்றன
தவழ்கின்றன
தழுவுகின்றன
திகட்டுகின்றன.
தாப்பூ தாமரைப்பூவென
தாய்ப்பு காட்டி மறைகின்றன
மதுவரக்க வார்த்தைகள்.

புதன், 28 செப்டம்பர், 2016

உள்ளங்கைக்குள் ஓவியம்.

மரக்கிளையிலிருந்து மிதந்து
மடிசேர்ந்த அதைக்
கவனமாகப் பற்றினேன்.
மெத்தென்ற தன்மை
அது இருந்த இடத்தின்
மென்மையைச் சொன்னது.
வெதுவெதுப்பு அதன்
உயிர்த்துடிப்படங்காததை உணர்த்தியது.
கவனமின்மையாலோ
வேண்டாததாலோ வெறுப்பாலோ
காலம் தீர்ந்ததாலோ,
களையப்பட்ட அது
களைத்தும் கிடந்தது.
வடக்கும் கிழக்கும்
மேற்கும் தெற்கும்
மேலும் கீழும் ஒன்றுதான்.
போதும் பறந்தது என்று
பிசிறடித்துக் கிடந்தது
என் உள்ளங்கைக்குள்
ஓவியமாய் ஒரு இறகு.

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

நட்புத் தத்துவம்‬

என்னை உனக்குப் பிடிக்கும்
உன்னை எனக்குப் பிடிக்கும்
நம் இருவரின் ஜாதிக்கும்
நம்மைப் பிடிப்பதில்லை.
ஒருவரை வைத்து
ஒருவரை எய்துகொண்டிருக்கிறது
தன் வெடிப்பொருளாய்.
வெடித்துச் சிதறும்போதும் உணர்கிறோம்
நீ வேறு நான் வேறு 

நட்பு வேறு அல்ல
திருத்தியமைக்கப்படாத 

யதார்த்தமும் எண்ணப்போக்குகளும்தான்.

திங்கள், 26 செப்டம்பர், 2016

இடம்

தங்க நிற வெளிச்சம்
தூவுகிறது சாலை.
சிவப்பில் நிறுத்தப்பட்ட
வாகனம் காத்திருக்கிறது
பச்சையின் ஆமோதிப்புக்காய்.
சீறலாய்ப் பச்சை உமிழ்ந்து
நேர்க்கோடாய்க் காட்டுகிறது
பயணத்தின் பாதையை.
திசை தெரிந்தும்
விசை மீறிப்பறக்கிறது
கைமீறிப்போன வண்டி.
பக்கத்து வண்டிகளைப்
பக்கத்துணையெனக்
கற்பிதம்கொண்டு
ஒளியின் வழிகாட்டலில்
கட கடப்புடன்
ஒவ்வொரு மஞ்சள் வெளியிலும்
காத்திருந்து பெருமூச்சுடன்
அடைகிறது தனக்கான இடத்தை.

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

கிடை.

வெள்ளாட்டுக்குட்டிகளாய்
மேய்கின்றன மேகங்கள்.

துணைக்கு மேய்கிறது
மஞ்சள் வெய்யிலும்.

ஈரவால் குட்டியாய்
கொறிக்கிறது விழுதுகளை ஊதக்காற்றும்.

மழைக்கோல் நனைக்கத்துவங்க
கிடைக்குள் அடங்குகின்றன வானவில்லாய்.


வெள்ளி, 23 செப்டம்பர், 2016

நிலவு மீனும் உயிர்ப்பூவும்.

இருள் நதியில்
நீந்திக்கொண்டிருக்கிறது
நிலவு மீன்..

************************

மழைக்குள் குடை
குடைக்குள் காதல்..

***************************

உயிர்ப்பூ...
தளைகளைத் தகர்த்துத்
துளிர்க்கிறது காதல்.

வியாழன், 22 செப்டம்பர், 2016

பூமிக்காரி.

பெருநெருப்பு வாயோடு பெரியவனும்
பால் சிரிப்பு வாயோடு சின்னவனும்
கொஞ்சிச் செல்கிறார்கள் தினம்.
பசுமையாய் வாயாடித்
தாய்மைக் குதூகலத்தோடு
பூத்துக்கிடக்கிறாள் பூமிக்காரியும்.


புதன், 21 செப்டம்பர், 2016

ச மையல்.

சமையலும் மையலும்
கலந்து தரும் தையலே..
நீ எங்கள் வாழ்வில்
நிறைவான புதையலே..
மன்னன் மனராணியே
மயக்கும் மது தேனீயே.
அன்னமிட்ட தங்ககைக்கு
அடுக்கட்டுமா வளையலே..

செவ்வாய், 20 செப்டம்பர், 2016

புள்ளினம்.

மருளடைந்து இருள்மரத்துள்
ஒடுங்கிக்கிடக்கிறது ஒரு பறவை.
தண்ணிலவில் சுருள்கிறது காற்று.
நனைந்து கிடக்கின்றன மலர்கள்.
மருப்பொசிக்கும் மாதவனும்
மையலுற்றே முயங்குகிறான்.
விருப்புற்றுக் கேட்பதற்கு
வெண்சங்கும் பக்கமில்லை.
நிம்பர்கரின் பேதா அபேதம்
குழல் ஒலிக்கக் காத்திருக்கும்
புள்ளினம் மட்டும் கீசு கீசென்று
தனக்கு மட்டுமாய்த் தன்னகத்துள். 

திங்கள், 19 செப்டம்பர், 2016

தட்ப அறிவிப்பு

தொடுவானம் கானல்நீர்
இருந்தில்லாதிருக்கும்
இரண்டுங்கெட்ட
இளவயதுக் கவர்ச்சி

தனக்காயல்லாமல்
தட்ப அறிவிப்புக்காய்
தன்னை நிரப்பித்
தோகை விரிக்கும் மயில்.

குவளை

அடர் கானகம்
ஈரநிலத்தில்
தேன்கூடுடைய
சிதறிச் சரிகிறது
நதியைப் போல நிலவு

மதங்க நீர் வழிய
களிறின் பிடியில்
குவளை இதழ்களில்
சிக்கித் தவிக்கிறது
ஒரு நெபந்தஸ் முத்தம்.

ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

பேச்சு போதை

நடுயாமம் நீள் இரவு
நெடும்பகல் குளிர்மாலை
இருவராடும் ஊஞ்சலாட்டம்
முன்பின் நகரும்
காற்றாய் கனலாய்
கனிந்து பெருகும்.
எதற்கும் அசையா
நெஞ்சம் நெகிழும்
உருகவைக்கும்
உளறவைக்கும்
பிடித்ததெல்லாம்
பித்தம் பித்தும்
கசப்பும் ருசிக்க
எதையுமருந்தாதிருந்தும்
வார்த்தைகள் சுழலும்
பேச்சுமோர் போதை.

அர்க்க புஷ்பம்.

யாரும் தொடுவதில்லை
தொட்டாலும் முறிக்கிறார்களென
பால் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தது
எருக்கஞ்செடி.

நம்பிக்கை கொடுத்து
மாலையாக்கி மார்பில்
அணிந்து கொண்டது களிறு.

வடக்கின் வேரில்
செதுக்கி வழிபட்டால்
பீடை ஒழியுமென்று
பிள்ளையாரைப் பிடிக்கிறார்கள்.

விக்கினங்கள் தீருமென்று
பூசிப்போரைப் பார்த்து
விநாயகரைப் போலுருவில்
முறுவலித்து கிடக்கிறது
அர்க்க புஷ்பம்.

வெள்ளி, 16 செப்டம்பர், 2016

மழையாடுதல்.

சொல்பேச்சு கேட்காமல்
இழுக்க இழுக்க வராமல்
பால்கனியில் ஒளிந்து
க்ரில் கம்பி பற்றி
துளிர்த் தலை நீட்டி
மழையாடிக் கொண்டிருக்கிறது
தொட்டியிலமர்ந்த
வெற்றிலைக்கொடி ஒன்று

பவளமல்லிக் குழந்தை.

பூம்பொழில்
வெண்முகம்
செஞ்சிவப்புக் கால்
பகல் தந்தை.
இரவுத் தாதி.
பற்றியிருக்கும்
தோளசைத்துக் கீழிறங்கிப்
பச்சைப்புல்லில் தவழும்.
ஒற்றை ஒற்றையாப்
பொறுக்கிப் பார்க்க
உள்ளங்கைக்குள்
நட்சத்திரச் சக்கரம்.
பிரசவித்த தாய் மரமும்
பச்சைக்குழந்தைப் பவளமல்லியும்
அவர்கள் வாசத்தை ஏந்தியபடி நானும்..

வியாழன், 15 செப்டம்பர், 2016

சூரியத் துளிரும் குப்பைப்பூ நதியும்.

வெளிச்ச இலைகள் உதிர்த்து
இருள் மரத்துள் ஒடுங்கி
விடியல் துளிராய் அரும்புகிறது சூரியன். 



வறண்டிருந்த மணல் மீது
பெய்து தீர்க்கிறது மழை
சுமந்ததை சுமத்தி
சுழற்றிச்சுழற்றி
ஜலபானம், ஜலக்ரீடை.

வண்டல்கள் கலங்க
தன் கரைகளைத் தேடி
குப்பைப் பூக்களோடு
காட்டுவேகத்தில்
அலமலங்கச் செல்லுமது
முன்னொரு காலத்தில்
நதி இருந்த இடமாம்.

புதன், 14 செப்டம்பர், 2016

தனியள்

குத்துவிளக்கொன்று
கைவிளக்கொன்று
நிலவொளித் துண்டு சுற்றி
பின் தொடரும் முன் வீழும்
பிரிந்திணையும் நிழல்களோடு
உலவிக் கொண்டிருக்கின்றாளவள்.
தனியளென்று யார் சொன்னது.. ?

செவ்வாய், 13 செப்டம்பர், 2016

எக்காலம்

வல்லமனம் வெறும்பொய்கள்
வாட்டுவது இக்காலம்.
வஞ்சனைகள் சூழாது
வாழ்ந்திருப்பது எக்காலம்.
வந்தவினை தாக்காமல்
வழி செல்வது எக்காலம்
நல்லமனம் நலியாமல்
நாமிருப்பது எக்காலம்.

திங்கள், 12 செப்டம்பர், 2016

போதை விஷம்

அள்ளிக் கொட்டாதீர்கள் அன்பை. 
மூழ்கிக்கொண்டிப்பவர் 
தப்ப இயலா அளவு.
கிள்ளிப் பார்த்தாலும் வலிப்பதில்லை.. 
ஆழப் பாய்ந்திருக்கிறது 
அன்பெனும் போதை விஷம்.

கண்டநாள் முதலாய் காதல் பெருகுதடி...

கண்டநாள் முதலாய் காதல் பெருகுதடி...

வழியெங்கும் மரக் குழல்கள் அசைய ஜிகு புகு ஜிகு புகு என ஓடத்துவங்கும் ரயிலுடன் எப்போதும் சிறுமியாக்கி ஓடத்துவங்குகிறது மனசு.

எட்டிப் பார்க்கும் நிலா கூட ஓடி வர நதியிலும் கால்வாயிலும் விழுந்து எழுந்து தடுமாறுகிறது.

பன்னீர்ப் பூவோ காட்டு அரளியோ நாசியை நெருட மயக்கத் துவங்கும் இருளில் மேகக் கோலமிடுகிறது வானம்.

கண்ணாடி ஜன்னல்வழி ஒரு துளி பூமியும் ஒரு துளி வானமும் கொடுக்க மறுப்பதில்லை எந்த ரயிலும்.

புகையடிக்க ஓடிவந்த ஆதி ரயில் என்னை மயக்கிய அழகான ராட்சசன். இன்றுவரை அந்த மயக்கம் தீராமல் என்னைத் தாலாட்டித் தூங்கவைக்கிறான். காணும் கணம்தோறும் கண்விரித்து வியக்கவைக்கிறான்.

மீளாக் காதல் ஒரு ஏழு வயதிலிருந்து..

காசியிலிருந்து அப்பத்தாவின் அஸ்தியைக் கரைத்துத் திரும்பிய அம்மா அப்பா எங்களை ஸ்டேஷனில் சந்தித்துவிட்டு ராமேஸ்வரம் கிளம்ப அவர்களைத் திரும்பக் காணும் ஆவலில் காரைக்குடி ரயிலடிக்கு ஓட்டமும் நடையுமாக தனியாய்த் தைரியமாய்ப் போனபோது வழியில் பார்த்த யாரோ ஒரு அண்ணன் சைக்கிளில் சென்று திரும்பச் சந்தித்து திரும்பி ஆயாவீட்டிற்கு வந்து வாங்கிய அன்பு டோஸ் மறக்கமுடியாதது.

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி.. ரயிலே உன்மீது.

ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

கண்டாங்கி

கழுத்திலே கருகமணி
காதோரம் சம்பங்கி,
இடுப்பிலோ கண்டாங்கி,
இதயத்திலே காண்டாமணி
சருகுச் சீலை சரசரக்க
சேவக்கொண்டை அசைந்தாட
கருதறுக்கப் போறவளே
கால்வீசும் வேகத்துல இளந்
தோள் என்னை அழைக்குதடி
துணையாகக் கூட்டிப்போ

வெள்ளி, 9 செப்டம்பர், 2016

உயிர்த்திரவம்

அச்சு வெல்லமே
சர்க்கரைக் கிழங்கே
உன் குரல் கூடப் பாகா வழியுதுடா
உன்னுடன் இருக்கும்போது
ஊரே கண்ணுக்குத் தெரியலடா
உன்னை விட்டுப் பிரிஞ்சால்
உன்மத்தம் பிடிச்சுப் போகுதுடா
ஊனிலும் உயிரிலும் கலந்துவிட்டாய்.
உள்ளிலும் வெளியிலும்
உருகி நின்றேன்
நான் மருகி நின்றேன்
என்ன நிகழ்கிறதெனக்குள் ..?
நினவும் பிசகுகிறது.
உன் குரல் மட்டும்
என்னுள் இறங்குகிறது.
உயிர்தொட்டு உயிர்ப்பிக்கும்
கலை எங்கு கற்றாய்
உன் உயிர்திரவம் சொட்டும்
குரல் மட்டும் அனுப்பு

வியாழன், 8 செப்டம்பர், 2016

கடைசி விருந்து/யூதாஸ் நாக்கு. :-

கடைசி விருந்து/யூதாஸ் நாக்கு. :-

வார்த்தைப் பந்திகளில்
வேண்டாத ரணகளம்.
எப்போதும் முட்களுடன்
ஒருவரை ஒருவர்
நீட்டிக் குத்த வாகாய்.
உறவிருக்கும்போதே
கிளையறுத்துக் கொண்டிருக்க
எப்போது எப்போது எனக்
காத்திருந்தது வாய்த்துவிட
நாசுழட்டி ருசிக்கும்போது
நிணநீர்சூழ தன்னையே
வெட்டாமல் வெட்டியெறிந்த
இரத்த விருந்து.
கண்ணீர் உப்பாலானதல்ல
இரத்தத்தாலும்தான்.

இதயமும் மூளையும்.

இதயம் பேசும் வார்த்தைகள்
மூளைக்குப் புரிவதில்லை
இருந்தும் இரண்டும்
ஒன்றை ஒன்று புரிந்து கொள்கின்றன
மனைவியும் கணவனும்போல.

இதழ்ப் பெட்டகம்.

கொய்யப்பட்ட முத்தப் பூக்களை
பதுக்கி வைத்திருக்கிறது
தடயமற்ற இதழ்ப் பெட்டகம்.

புதன், 7 செப்டம்பர், 2016

ஒப்புக் கொடுத்தல்.

ஒரு மரம் முழுமையாக
ஒப்புக் கொடுக்கிறது
பூமிக்குத் தன்னை
தன் கிளையை, இலையை
காயைக் கனியை.
ஒரு விரக்தியற்றமனம் தன்னை
ஒப்புக்கொடுப்பதைப் போல. 

தாய் நதி.

மேகமெத்தையிலிருந்து
உருண்டு விழுகிறது குட்டி நிலவு
நீர்க்கரங்களில் ஏந்தித் தாலாட்டுகிறது தாய்நதி.


செவ்வாய், 6 செப்டம்பர், 2016

நாடோடியும் மலையும்.

நகரும் இரும்புக் கூடாரங்களுக்குள் 
நான் ஒரு சந்தோஷ நாடோடி.

காற்று அசைக்கிறது.
மரங்கள் ஆட்டம் போடுகின்றன.
மௌனமாய் நிலை கொள்கிறது மலை.

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

மைனாவின் தூதும் பயணத்தின் வாசனையும்.

தூரமாய் நிற்கும்
தென்னைகளுக்கிடையில்
தூதுபோய்க்கொண்டிருக்கிறது
ஒரு மைனா. 



சில அலுமினியப் பறவைகள், 
சில இரும்புப் புரவிகள், 
சிலதுருப்பிடித்த ட்ராகன்கள் 
எப்போதும் காத்திருக்கின்றன . 
தேகமெங்கும் ஆரோகணித்திருக்கிறது 
பயணத்தின் வாசனையும் 
இரும்பின் ருசியும்.

வியாழன், 1 செப்டம்பர், 2016

துளி.

துளி மல்லிகை சுமந்தவள்
கடந்துபோகிறாள்.
கோடையை
நினைவுகூர்கிறது ஞாபகம்.
புழுக்கத்தை
நினைவுகூர்கிறது தேகம்
வியர்வையை
நினைவுகூர்கிறது நாசி.
பூவிதழ்களை
நினைவுகூர்கிறது நெற்றி

Related Posts Plugin for WordPress, Blogger...