எனது பதிமூன்று நூல்கள்

எனது பதிமூன்று நூல்கள்
எனது பதிமூன்று நூல்கள்

வெள்ளி, 23 அக்டோபர், 2020

நீளும் கொடுக்குகள்.

தெரிந்தும் தெரியாததுபோல்
கொட்டிவிட்டு
விலகிச் செல்கிறது தேள்.
அடிக்க விரையுமுன்
பதுங்கிவிடும் அது
அடுத்து எதிர்பாராமல்
கொட்டும்போதுதான்
வெளிநீட்டுகிறது கொடுக்கை
எது தேளென்று 
கொட்டும்வரை தெரிவதில்லை
மறைந்திருக்கும் கொடுக்குகள்
காலம் வந்தால் நீளும்
நியாயத் தராசுகள் என்று
வாழக்கற்பிக்கப்படுகிறோம் நாமும். 
  

வியாழன், 22 அக்டோபர், 2020

பூமிப் பறவை.

சூரியத் தாவரத்தில்
ஒளிக்கிளைகள் நீள்கின்றன.
பூமிப் பறவை இளைப்பாறுகிறது 
அக்கிளைகளில்.
சிலசமயம் வெளிச்சப்பூக்களைப்
பிடித்துண்ணுகிறது.
இருள்கூட்டில் உறங்கி உயிர்த்து
உருண்டோடி உண்ணத் தொடங்குகிறது
மற்றுமொரு புதுப்பூவை. 

  

புதன், 21 அக்டோபர், 2020

பூமியின் இரக்கத்தால்..

பூமியின் இரக்கத்தால்..

நதி ஓட முடிகிறது.
மலை நிற்க முடிகிறது
மரம் வேரோடுகிறது
பறவை பசியாறுகிறது

மீன் துள்ளித் திரிகிறது
இலை அசைந்து களிக்கிறது
பயிர் எழும்பிச் சிரிக்கிறது
நானும் உயிர் வாழ்கிறேன். 

  

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

நதி, மரம், சூரியன்.

ஓடிவரும் நதிநீரை
இலைதூவி வரவேற்கிறது மரம்.

வரவேற்கும் விருட்சங்களின்
வேர்வருடி இதமாக்குகிறது நதி.

நதியின் மேல் குதித்து
ஆனந்த நீராடுகிறது சூரியன்

குளியலாடும் சூரியனைக்
கரம் ஏந்திக் களிக்கிறது நதி.

மின்னும் நதியில் 
முகம் பார்த்துக் களிக்கிறது மரம் 

நதி வழி மரமேறி
ஊஞ்சலாடுகிறது சூரியன். 

கொஞ்சும் சூரியனோடும் கெஞ்சும் மரத்தோடும்
ஒட்டியும் ஒட்டாமலும் ஓடிக்கொண்டிருக்கிறது நதி. 


  

திங்கள், 12 அக்டோபர், 2020

ஞாபகச் சொட்டுகள்

ஒரே இடத்தில் 
உறைந்து கிடக்கும் 
எண்ண நீர்
உருகிக் கரைந்து
ஞாபகச் சொட்டுக்களாய் வடிய
வெகுநேரம் ஆகிறது. 

 

வெள்ளி, 9 அக்டோபர், 2020

ஜலதரங்க மழை

கருத்துத் திரண்டு
வலதும் இடதும் மோதி
மேளம் இசைக்கிறது
மேகம்

ஒன்றிலொன்று உருண்டு
முன்னும் பின்னும் புரண்டு
முரசொலிக்கிறது
இடி

வெளிச்சப் புல்லாங்குழல்களாய்ப்
பின்னிப் பின்னி இறங்கி
சாக்ஸபோனாகின்றன
மின்னல் கம்பிகள்

மரங்களைக் கிண்ணங்களாக்கி
இலைகளைக் கரண்டிகளாக்கி
ஜலதரங்கம் வாசிக்கிறது 
மழை

  

செவ்வாய், 6 அக்டோபர், 2020

சமரசங்களோடு வாழ்வது.

துளிர்க்கும்போதே ஓணான்களுக்கும்
துளிர்த்தபின் கத்திரிகளுக்கும்
துளிர்க்க ஏங்கி நீருக்கும்
துளிர்க்கரம் பிடித்தெழுப்பும் சூரியனுக்கும்
துளிர்ப்பிடி கருகிச் சருகாகும்போதும்
துளிர்த்த இடத்திலிருந்து ஒட்டறுந்து வீழும்போதும்
நன்றியும் பாசமும் காதலும் கொண்டு
மிதந்தும் பறந்தும் செல்ல வாய்ப்பதுதான்
சமரசங்களோடு வாழ்வது.

  

முள்முடி

கொரோனாவா
கதிர்வீச்சா
மூச்சுத் திணறலா
த்ராம்போஸிஸா
விதம் விதமாய்
முள்முடி மாட்டுவது 
வைரஸ் மட்டுமல்ல
பணவீக்கத்தில்
நசுங்கிக் கிடக்கும்
பொதுஜனமும்தான். 


  

புதன், 30 செப்டம்பர், 2020

நிற்றல்

கிளையாட்டிக் கொண்டிருக்கின்றன
தோட்டத்து மரங்கள்
தலையாட்டிப் பார்க்கிறான்
குட்டித் தம்பு.
கழுத்து நின்றதும்
மரம் பார்ப்பதில்லை அவன்
ஆனாலும் தம்போக்கில்
கிளை ஆட்டிக் கொண்டிருக்கின்றன மரங்கள்.

  

திங்கள், 28 செப்டம்பர், 2020

வெய்யில் வளையங்கள்

வெய்யில் வளையங்கள்
பூமியின் மீது விழுகின்றன.
அவ்வளையத்துள் நழுவி
உருண்டோடும் பந்தாய் பூமி.
  

ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

நிழல் வாழ்வு

நிழல் வார்த்தைகள்
உன் பின்னே 
ஓடி வருகின்றன.
விடியலில் 
உன் மதுக்கோப்பைக்குள்ளும்
இரவில் உன் வாயினுள்ளும் 
குடியிருக்கும் அவை
சாராயம் ஏறுவதுபோல்
சரசரவென ஏறுவதும்
பின் நாற்றத்தோடு வீழ்வதுமாய்
வாழ்கின்றன.
என்னடா இந்த நாறப் பிழைப்பென
அவை நாராசத்திலிருந்து கூவுவதை
ஒருபோதும் சட்டை செய்ததில்லை நீ.
இருந்தும் சொற்கள்
எச்சமாய் விழுந்தும் எழுந்தும்
இருந்தும் இல்லாமலும்
நிழல் வாழ்வில்.


  

வியாழன், 24 செப்டம்பர், 2020

இனிக்கும் வேம்பு

கதவைத் திறந்ததும்
குதூகலிக்கின்றன கிளைகள்
வரவேற்கவும் வழியனுப்பவும்
பூச்சொரிகின்றன
வாலாட்டி அமரும் 
குருவிகளுக்குத் தேனும்
சிலவற்றுக்குக் கொட்டையும்
சிலவற்றுக்குப் பழமும். 
வேம்பும் இனிக்கிறது
எல்லாப் பறவைகளுக்கும். 

  

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

நிரம்புதல்

இரை எடுத்த பெருமகிழ்வில்
தொப்பையை அசைத்து
அமர்கின்றன பறவைகள்
வயிற்றை நிரப்பிய குதூகலத்தில்
வாயாடிக் கொண்டிருக்கின்றன கிளைகள். 

  

திங்கள், 21 செப்டம்பர், 2020

ஆமோதிப்பு

சிச்சிலிப்புக் கொட்டித்
திரிகின்றன பறவைகள்
ஆமோதித்துத் தலையாட்டிக் 
கொண்டிருக்கின்றன இலைகள். 

ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

பறவைப் பார்வை

கடலையும் கட்டிடங்களையும்
அளக்கிறது பறவை
பறவைப் பார்வையால்
அளந்து கொண்டிருக்கிறேன்
இம்மூன்றையும். 

  

சனி, 19 செப்டம்பர், 2020

பூத்தல்

மாறும் மாறும் 
எப்போது மாறும்
ராகு கேது
நாகபாதை விரிக்க
பூர்வஜென்ம
மலர்ச்சோலையில் 
காத்திருக்கிறேன்.
நெளிந்து செல்லும்
நாகங்களுக்கிடை
நழுவி ஓடியும்
மேலே பூக்கிறது ஒரு
நாகலிங்கப் பூ. 

  

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

வளையம்

ஏதோ ஒரு பூவின் வாசம்
நிழல் உருவங்கள்
காதுள் கேட்கும் குரல்கள்
கிணற்றுள் மூழ்கும் குடமாய்
நீர் வளைய நினைவுகள்
அடுக்குகளால் ஆனதா உலகம்
அலைந்து அளைந்தும்
நீளும் கைகளைப் பிடிக்கவே முடிவதில்லை
ரீங்காரம் இடுகிறது நீர்
இறங்கிக் கொண்டே இருக்கிறது கயிறு
தட்டுப்படுவதில்லை
தரையும் ஆகாயமும்
தண்ணென்ற குளிர்வில்
பாசம் தின்னும் தலைப்பிரட்டையாய்
நீந்தத் தொடங்குகிறேன். 


  

வியாழன், 17 செப்டம்பர், 2020

உயிருடை

நிலைக்கண்ணாடியில்
அறைக் கதவுகளுக்கிடையில்
வாசல் நடையில்
சாவி துவாரத்தில்
ஆடிச் செல்கிறது ஒரு பிம்பம்
முன்னோர் ஒருவரின்
சாயலும் வாசனையும் கொண்டு
கண்ணோரத்தில் நடமாட்டம்.
விதிர்த்துத் திரும்பும்போதெல்லாம்
விசிறிகள் போல் ஆடுகின்றன
எங்கோ கொடியில் தொங்கும் உடைகள்
உடைகள் கழற்றி உலவும் அவர்களுடன்
உயிருடை கழற்றாமல் உலவுகிறேன் நானும்.
  

வெள்ளி, 11 செப்டம்பர், 2020

உண்மை

எத்தனை முறை
நீ பொய்யுரைத்தாலும்
நம்பிவிடுகிறது உள்ளம்.
நீ எது சொன்னாலும்
அது உண்மையாகத்தான்
இருக்கவேண்டும் என
மனதில் செதுக்கிய
எண்ணத்தை மாற்ற முடியவில்லை.
இருக்கட்டும் போ
அது உண்மையோ பொய்யோ
நான் உண்மை என்றே நம்பிக்கொள்கிறேன்.
உன் மேல் வைத்த நம்பிக்கைக்காக மட்டுமல்ல
என் மன நிம்மதிக்காகவும்தான். 

வியாழன், 10 செப்டம்பர், 2020

ஒரே உலகம்.

எங்கள் உலகத்தில்
நாங்கள் நால்வர் மட்டுமே
நான் அவர்
இரண்டு சேட்டைக்காரப் பயல்கள்
பின்னொருநாள் மாறியது
மொணமொணத்துக் கொண்டிருந்த
நாங்கள் மட்டுமே
எங்கள் உலகத்தில்.
சேட்டைக்காரன்களுக்கென்று
ஒரு தனி உலகம்.
பின்னும் ஒருநாள்
சேட்டைக்காரன்கள் 
தம் பிள்ளைகளோடும்
பார்யாளோடும் அவர்கள் உலகத்தில் 
குடிபுகுந்தார்கள்.
இப்போது
எங்கள் பெற்றோரின் உலகம்
எங்களின் உலகம்
பிள்ளைகளின் உலகம்
பேரப் பிள்ளைகளின் உலகம்
என்று வேறு வேறாய்க்
குட்டி போட்டது ஒரே உலகம்.

  

புதன், 9 செப்டம்பர், 2020

நூல் வெய்யில்.

பால்கனிச் சுவரோரம்
நீர்க்கற்றையென 
குளிர்ச்சியாகக் கசிகிறது வெய்யில்
வண்ணக் காகிதமாய்
மிதக்கும் பட்டாம்பூச்சியொன்று
நூல்களாய்ப் பிரித்துச் செல்கிறது
அவ்வெய்யிலை. 
  

திங்கள், 7 செப்டம்பர், 2020

உறைவு

புகைப்படத்தில் நாங்கள்
கண்ட அளவிலேயே
உறைந்திருக்கிறது
அந்த நகரமும்.
அதன் பூங்காவும் பூக்களும்
இராட்டினமும் கூட
வாளேந்திய மங்கைகள்
கண்சிமிட்டாமல்
நோக்கியபடியே இருக்கிறார்கள்.
நதியும் படகுகளும்கூட
எங்களுக்காகக் காத்து நிற்கின்றன.
எங்கெங்கிருந்தோ கீறிப் பாயும் 
வெளிச்சமும் கூட
இன்னும் பிரகாசமிழக்கவில்லை.
ஒரு கால் உடைந்த நாற்காலி
அப்படியே நின்றிருக்கிறது.
கண்ணில் காக்கைக் கோடுகளும்
காதோர நரைகளும்
பூக்கத்தொடங்கி இருக்கும்
இந்த இலையுதிர் காலத்தில் 
எங்கள் இளம்பருவமும்
அப்புகைப்படத்தில்
உலைவுறாமல்
உறைந்திருப்பதுதான்
உச்சபட்ச மகிழ்ச்சி.
  

புதன், 2 செப்டம்பர், 2020

சுடர் விடுதல்.

நெடுங்கோட்டைச் சுவரென
நீண்டுகிடக்கிறது
நமக்கிடையான உறவு.
சில முதலைகள் 
உள்நுழைந்து அகழியை
அகழாய்வு செய்கின்றன.
எச்சரிக்கை வீரர்களின்
பாரா ஒலி வேறு அசந்தர்ப்பமாய்.
விடியலுக்குள் நீ வந்து சென்ற கனவை
இருளோடு தேய்த்து
அழித்துவிட நினைக்கிறேன்.
சூரியன் புலரும் பொழுதில்
சுடர்விட்டுத் துலங்கும்
உன் நினைவை என்ன செய்ய. 

  

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

போ நீ போ

சுவாசமே சுவாசமே என்றும்
உன்னைத்தொட்ட காற்று வந்து 
என்னைத் தொட்டதென்றும்
பாடிக் களித்தவர்கள் இன்று
போ நீ போ
தனியாகத் தவிக்கின்றேன்
துணை வேண்டாம் போ நீ போ
எனப் பாடுகிறார்கள்
கொரோனா காலக் கொடுமைகள்
பாடல்களிலும் பல் பதிக்கின்றன. 

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

செம்மாந்தல்.

மஞ்சள் இஞ்சி மிளகு
மாமருந்தாகிவிட்டது
சுக்குமி ளகுதி ப்பிலி என்று
கேலி செய்தவர்கள்
கசாயத்தின் பிடியில் காய்ச்சலைக் 
கரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கபசுரக் குடிநீரும்
நிலவேம்பும் சுவையற்ற நாக்கில்
கசப்புப் பாயாசங்களாக
வழிந்தோடுகின்றன. 
கோள்களும் கிரகங்களும்
நாட்டை சுத்தமாக்கிவிட்ட மகிழ்ச்சியில்
செம்மாந்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.  

  

சனி, 29 ஆகஸ்ட், 2020

நியாயத் தராசு

நியாயத் தராசு ஏறி இறங்குகிறது
மூச்சுக்கு முன்
மூச்சுக்குப் பின் என.

முள்ளில் இல்லை
தட்டிலும் இல்லை
ஊடாடும் காற்றில்தான் இருக்கிறது
நியாயத்தின் உயிர்த்தல். 
  

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

அண்ணாரைப் போல..

இந்தக் காலத்தில்
மறைந்தவர்கள்
மனம் கனக்கச் செய்கிறார்கள்.
பட்டினத்தார் பாடலொன்று
கத்தும் நமைப்பார்த்துக்
கணக்கென்ன என்கிறது. 
இன்னொன்றோ
அண்ணாரைப் போலத் 
திரியச் சொல்கிறது..
இரண்டும் கெட்டானாகி
மூன்றாம் உலகு விரிகிறது.


வியாழன், 27 ஆகஸ்ட், 2020

நிழல் பிரசவம்

விளக்கிலிருந்து பிறக்கும் தீபம்
மாடத்துள் பிரசவிக்கிறது
மூன்று நிழல் விளக்குகளை..

  

புதன், 26 ஆகஸ்ட், 2020

ஆலமும் காலமும்

தலையிலிருந்து வால்வரை
விழுங்கி விழுங்கி
உயிர்க்கின்றன அரவுக் கிரகங்கள்
விழுங்கும் ஒவ்வொருமுறையும்
வாதாபியாய் வெளிப்படுகிறேன்
எப்போது ஜீரணமாவேனென்பதை
தர்மராஜனே அறிவான்
ஆலமும் காலமும்
நுரைத்துப் பொங்கிக் கொண்டிருக்கின்றன. 
  

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

நானென்ற ஒன்றா..

ஆயிரம் நிலவை அழைத்தவர்
மூச்சுள்ளும் 
உன்மத்தம் பிடித்தலைகிறது
கிருமி அலை..
அவ்வலை சிந்தும் துளிகளில்
நான் யார் நீ யார்
என்றொரு ஆராய்ச்சி நடக்கிறது
ஒவ்வொரு அலையாய்ப்
பிடிந்தலைந்தும்
குழப்ப முடிச்சுக்கள்
கரையில் தள்ளுகின்றன
யோசித்தும் சுவாசித்தும்
பிழைத்துக் கிடப்பது யார்
நானா  .. நானென்ற ஒன்றா.. 
  

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

பயன்..

மூச்சுக் குழலுக்குள் 
முக்குளித்து மூச்செடுக்கிறது.
சாதா காய்ச்சலும் காங்கையும்
சள்ளைப் படுத்துகிறது.
கொடுமை கொடுமை என
கோவிலுக்கும் செல்ல விடுவதில்லை. 
என்னே பயன் எனில்
தனித்தனியாய்க் கிடந்தோரை
தனிமையில் தள்ளுவதுபோல்
குடும்பங்களை ஒன்று சேர்க்கிறது 
கொரோனா.
  

புதன், 19 ஆகஸ்ட், 2020

பச்சோந்தி

பச்சோந்திபோல்
உடல்மாறும் கிருமி
மனிதரைத் தாக்க
முள்முடி சுமந்தலைகிறத
கடைசிவிருந்தில்
மூச்சுக் காட்டிக் கொடுக்க 
நுரையீரல்தான்
தீர்ப்புக் கூறும் இடமாகிறது

  

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

இஞ்சியால் ஆனது உலகு

இஞ்சி சட்னி
இஞ்சித் துவையல்
இஞ்சிப் புளி
இஞ்சி மண்டி
இஞ்சி ரசம்
இஞ்சி சூப்
இஞ்சி ஜூஸ்
இஞ்சிக் குழம்பு
இஞ்சி சாதம்
இஞ்சிக் கொழுக்கட்டை
இஞ்சியால் ஆனது உலகு,
கொரோனாவுக்குப் பின். 

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

அலையும் கிருமி

நுரையீரலில் புகும் கிருமி
ஊஞ்சல் கட்டி ஆடுகிறது
உயிருடனும் 
உயிர்வாழ்வதற்கான சேமிப்புடனும்.

சுருங்கும் நுரையீரலாய்ச்
சுருங்குகிறது சேமிப்பு.

சறுக்கிவிழுந்து
குதித்தோடுகிறது உயிர்
போராட முடியாமல்.

இன்னொரு ஊஞ்சல் தேடி
விரிந்த தலையோடு 
அலைந்து கொண்டிருக்கிறது கிருமி. 

  

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

கபசுரம்.

காங்கையா காய்ச்சலா
கழுத்தை வருடிச் செல்கிறது
கபசுரக் குடிநீர்.
  

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

பூக்கும் காதல்.

முற்றிய மரமும்
துளிர்விடுகிறது
வருடந்தோறும் 
பூக்கும் காதலில்.
    

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

உயிரென்பது..

எத்தனை சட்டைகள்
எப்படி உரிந்தன
எங்கே இருக்கிறேன் நான்
உணர்வா சுவாசமா
உயிரென்பது என்ன?
  

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

வாசனைப் பரிசு.

குலாவிக் குலாவி
மரங்களைக் கொஞ்சிச்
செல்கிறது காற்று.
குலாவலுக்குப் பரிசாய்
வாசனை முத்தங்களைக் 
கொடுக்கின்றன மரங்கள். 
  

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

தாலாட்டு.

தாழ்ந்து தலையாட்டும் கிளையைத்
தாயாகத் தாங்கித்
தாலாட்டிச் செல்கிறது நதி. 
  

செவ்வாய், 28 ஜூலை, 2020

நதிமகள்

பூ மூடிச் செல்லுமவளை
விலக்கி விலக்கிப் பார்க்கிறேன்.
நாணத்தால் இன்னும் 
முகம் மூடி முகம் மூடிச் 
சுழன்றோடிச் செல்கிறாள்
நதிமகள். 

  

ஞாயிறு, 26 ஜூலை, 2020

இனிப்பு நீர்

அனலும் காற்றும்
மூச்சுக் குழலெங்கும்
கனவும் நனவுமாய்
சுற்றிச் சுழல்கிறது.
தடைப்படும் மூச்சினால்
சுருங்கித் திணறும் நுரையீரல் 
என்றோ செய்த சாம்பவிக் கிரியாவை
நெஞ்சம் முழுக்க நிரப்புகிறது
இனிக்கத் துவங்குகிறது
நாவில் படும்போதெல்லாம்
கசந்து கண்ணைப் பிடுங்கிய
கபசுரக் குடிநீர். 
  

திங்கள், 20 ஜூலை, 2020

குட்டிப் பிரச்சனை.

வஞ்சிக்கப்பட்ட குழந்தைகள்
வன்முறையாளராகிறார்கள்.
தூண்டுகருவியாகத் தாயோ தந்தையோ
அவர்களைப் பயன்படுத்தும்போது
எப்போதுமே பிரச்சனைகளின்
மைய அச்சாணியாகிறார்கள்
தாய் தந்தைமேல் சாணியைப் பூசவும்
தயங்குவதில்லை அவர்கள்.
தங்களைப் பயன்படுத்திக் கொண்ட அனைவரையும்
ஒரு கட்டத்தில் விசுவரூபமெடுத்துப்
பயப்படுத்தி விடுகிறார்கள்.
பிரச்சனைக் குழந்தை என்பது
பிரச்சனைப் பெற்றோர் பெற்றெடுத்த
குட்டிப் பிரச்சனையே.
இவர்கள் தங்கள் குழந்தைகளுக்கும்
பிரச்சனைகளைத் தவிர வேறொன்றையும்
உயிலெழுதிவிட்டுப் போவதில்லை.
இதையும் விளம்பரமாக்கிப்
புகழ் வெளிச்சத்தில் மின்னிக்
கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.
நாடே உழன்று கொண்டிருக்கும்
நோய்ப் பிரச்சனையையும் மறந்துவிட்டு
இவர்கள் வாழ்க்கைப் பிரச்சனையில்
சுழன்று கொண்டிருக்கிறது
  

ஞாயிறு, 19 ஜூலை, 2020

கலிகால தெய்வம்.

வீடே கோவில்
வீட்டினரே தெய்வம்
இன்னும் ஒரு வருடத்துக்கு
இதுதான் பாதுகாப்புக் கவசம்
ரணம் ருணம் தவிர்க்கத்
தனிமையைக் கற்பிக்கும்
கொரோனா யட்சிணியோ
ராட்சசனோ பேயோ பூதமோ
பிசாசோ கருப்போ தெரியவில்லை.
ஆனால் நேசம் பாசம் நெருக்கமென
இன்னுமுள்ள ஆயுளை
நெகிழும் உறவுகளோடு
வாழ வாய்ப்பளித்திருக்கும்
கலிகால தெய்வம்.

  

சனி, 18 ஜூலை, 2020

சுய சிறை.

மிக நீண்ட வேனிலைப் போல
நகர்ந்து கொண்டிருக்கிறது கொரோனா
ஒவ்வொரு வீட்டின் வாசலிலும்
விடியற்காலைக் குடுகுடுப்பைக்காரனைப்போல
உலவி நிமித்தம் சொல்கிறது.
ஒதுங்கி ஒளிந்திருந்து அனைவரும்
ஒட்டுக்கேட்டபடி பதுங்கி இருக்கிறார்கள்.
நல்லகாலம் பொறக்குதோ இல்லையோ
கெட்டகாலம் ஒழியட்டுமென
வீட்டுக்குள்ளேயே பித்துப் பிடித்தவர்கள்போல
புதைகுழிப் பேய்களாய்
விழிவிரித்துக் கிடக்கிறார்கள் மனிதர்கள்.
குடுகுடுப்பைச் சத்தம் தேய்ந்து ஓய்ந்தபின்னும்
வாசல்படிகள் திறக்கப்படுவதேயில்லை.
சுயசிறைக்குள் ஒருவரை ஒருவர் பார்த்து மிரண்டு
அவநம்பிக்கையோடு தள்ளியே நிற்கிறார்கள்.
  

திங்கள், 15 ஜூன், 2020

நட்சத்திர மீன்கள்.

இரவுத்தட்டில்
நிலவுமீனைக் கொத்தும்
நட்சத்திரமீன்கள்.
  

புதன், 10 ஜூன், 2020

நிலவுச்சுறா

இரவு நதிக்குள் நிலவுச்சுறா
சுற்றிலும் நீந்தும்
நட்சத்திரமீன்கள்

  

திங்கள், 1 ஜூன், 2020

கனிவு

பகல்தோல் உரிந்துகொள்ள
கனிந்து உருள்கிறது
நிலவுப்பழம்
  

சனி, 30 மே, 2020

நிலவுப்பழம்.

இரவுப்பாலில்
கரைந்து கொண்டிருக்கிறது
நிலவுப்பழம்.
  

புதன், 27 மே, 2020

உயிர்ப்பு.

சாமி பக்தையாகிவிட்டாள் செல்லி.
வீடே கோவிலாகிவிட்டது
தீப எண்ணெயும் தீப்பெட்டியும்
ஊதுபத்தியும் சாம்பிராணியும்
அவள் மளிகைக்கடை லிஸ்டில்
முதலிடம் பிடிக்கின்றன.
சமைத்து பாத்திரம்தேய்த்து
சமைத்து பாத்திரம்தேய்த்து
குணச்சித்திரப் பாத்திரமாகிவிட்டாளவள்.
உடுப்பது நைட்டியென்றாலும்
ஊர்ப்பட்ட துணிகள் தினம் துவைக்க.
காயைக் கழுவிக் கையைக் கழுவி
கழுவில் நிற்கிறது அவள் நேரம்.
முகத்தையே தொடாமல்
முகமறைந்து
முகமறந்து கிடக்கிறாள் செல்லி.
முகமறியா பலர்
கிருமிகளுக்குப் பலியாக
கையறுநிலையில்
குற்றவுணர்ச்சியோடு
குதறிப்போட்ட குடலாய்
சிதறிக் கிடக்கின்றன
அங்கங்கே அவள் எழுத்துக்கள்.
ஒருவழியாய்
ஊரைச் சுற்றும் கொள்ளைநோய்
ஒழியும்போதுதான்
ஒளிந்திருக்கும் அவள்
உயிர்ப்போடு எழமுடியும்.

வெள்ளி, 15 மே, 2020

தற்காலம்

பசித்திரு
தனித்திரு
விழித்திரு
என்றதொரு காலம்

வீட்டிலிரு
விழிப்புடனிரு
விலகியிரு
என்கிறது தற்காலம்.
  

செவ்வாய், 12 மே, 2020

வெறியின் கோட்பாடு.

புறாக்களின் மாம்சத்தில்
கண்ணாயிருக்கின்றன வல்லூறுகள்
சிபிகளின் தராசுகளில்
நிறைவடைவதில்லை அவை.
கண்ணுக்குக் கண்
பல்லுக்குப் பல்
மாம்சத்துக்கு மாம்சம்
ரத்தத்துக்கு ரத்தம்
இவையே வெறியின் கோட்பாடு.
விசிறும் இறக்கைகளில்
வழியும் ரத்தத்தில் தமக்குத்தாமே
சாமரம் வீசி நிறைவடைகின்றன அவை.
 
Related Posts Plugin for WordPress, Blogger...