எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 31 ஜனவரி, 2015

சிநேகம் ( சுயம் )



சிநேகம் ( சுயம் )

புல்லே
நிதானமாக வளர்
கிடைத்தவுடன் விழுங்கிவிட்டு
மெல்ல அசைபோட இதென்ன
மாட்டின் இரைப்பையா

கிடைத்த நீரையெல்லாம்
உறிஞ்சி விடலாமெனப்
பேராசைப்படாதே.
அவை கடின நீர்கள்
பாறையில் இருந்து கசிபவை

அவங்காய்ந்ததாய்
அள்ளி அடைந்தால்
அஜீரணம் பிடிக்கும்.

புல்லே
சூரிய மினுமினுப்பில்
மயங்கிப் போய் நிற்காதே
மேனாமினுக்கி அது
மஞ்சள் கள் ஊற்றி
மயக்கத்தான் செய்யும்
கிறங்காதே
கருகிப்போவாய்.

உணர்ச்சியற்ற மண் மீது
கைதட்டி உயிர்த்தெழுப்பப் பார்க்காதே
காற்றின் வருடலுக்கு
ஆசைப்படாதே
சூறை உன்னைச் சிதறடிக்கும்.

மழைத்துளியில் கும்மாளமிட்டு
ஆட்டம் போடாதே
இது பிரியத் தூவலல்ல
உன்னை அழுகவைக்கப்
புறப்பட்ட ஆகுதீ

புல்லே
சந்திரனை நேசி
பனித்துளியுடன் சிநேகமாயிரு
முத்தமிடு
குளிரை உடுத்துக்கொள்.
இருட்டை நம்பு
வெளிச்சங்கள் அனைத்தும்
பகல் பிசாசுகள்
வெம்மைச் சாத்தான்கள்
அணிந்துகொண்ட போலி
வெளிச்ச ஒளிச்சிதறல்கள்
இரவை நம்பு
அதனுள்ளேதான் உன் உலகம்
காத்து இருக்கின்றது
கருமைதான் உண்மை.

-- 82 ஆம் வருட டைரி.

வெள்ளி, 30 ஜனவரி, 2015

நட்பு



ஸ்நேகத்தை உதறிவிட்டு
எங்கே ஓடப் பார்க்கிறாய் நீ ?

இதென்ன லாலா கடை அல்வாவா
திகட்டியதும் முகத்தைச் சுளிக்க

எங்கேபோய்ப் பதுங்கிக் கொள்வாய்
எங்கே புதைந்து கொள்வாய்

எந்தக் கிணற்றின் இருட்டோரங்களில்
சுவரின் கருமைச் சரிவுகளில்
கட்டிடங்களின் ஆணிவேர்களில்
புத்தகங்களின் உடல்களில்
மேகமெத்தைகளில்
கவிதைச் சுரங்கங்களில்
பூப்பள்ளத்தாக்குகளில்
ஆகாச மலை வீடுகளில்
வறுமையின் ஈரங்களில்
கண்ணீர் அடிவாரங்களில்
சமுதாய அழுக்குகளில்
புதைந்து கொள்வாய்
உன்னைப் புதைத்துக் கொள்வாய்

செல்லுபடியான வினாத்தாள்களாய்
ஆனபின்னும் அந்த வினாக்கள்
இன்னும் உன்னுள் பூத்து நிற்பதேன்

இவ்வளவு வந்தபின்னும்
உன்னால் வெறுக்கமுடிந்தது என்றால்
இதென்ன நாயர்கடையின்
பூந்திப் பொட்டலமா
சவுத்துப் போக

இதென்ன ஒரு நாளில்
உயிர்த்துப் பறந்து அலைமோதி
இறக்கும் புற்றீசலின் வாழ்வா.

இதென்ன துளிர்த்துப் பருவமெய்திக்
கிழடுதட்டிப் பழுத்து
உதிரும் இலையா

இதென்ன நாலாந்தர புத்தகமா
இரண்டு பக்கம் படித்ததும்
பிடிக்காதெனத் தூக்கி எறிய

இதென்ன மரங்களின் பட்டையா
மரம் வளர வளர
உதிர்ந்து கொள்ள

இது அதனுள்ளே
உருகிக் கசிந்து
வடியும் கோந்து

இது மழைக்கால மாலையில்
வர்ணங்கள் நட்புடன்
சேர்த்தமைத்த வானவில்

இது வாலைத் தூக்கிக்
கீச் கீச்சென்று கத்தி
மனதின் மூலையில்
உருட்டி விழித்து அமரும்
அணில் குஞ்சு

இது மாலை நேரத்தில்
அசைபோட்டுக்கொண்டு
வயல் வரப்பில் ஒய்யாரமிடும்
கட்டை வண்டி

இது அரும்பு விட்டு மலர்ந்து
காய்த்துக் கனிந்து
கையில் வரும் பழம்.

இது மத்யான வெய்யிலில்
முழங்கால் தண்ணீரில்
நின்றுகொண்டு நாற்றுநடும்
பெண்களின் குரலுயர்ந்த பாட்டு.

இது முகத்தைத் தடவிக்
குசலம் விசாரிக்கும்
அதிவிடியற்காலத்துப் பனிக்காற்று,

இது மார்கழி மாதத்தில்
காதை வருடம் திருப்பாவை
கண்ணை நிறைக்கும் மாக்கோலம்.

புதைமணலில் சேற்றுக்குள்
விரும்பிப் போய்ப் புதையாதே
உன் புதையலுக்குக் காரணம் நீயே
என்னால் தடுக்க தூக்கிவிட முடியாது.
ஏழுமாதங்களுக்குள்
எவ்வளவுக்கு முடியுமோ
அவ்வளவுக்குக் கோபப்பட்டுவிடு.
பின் கோபிக்க யாரிருக்கப்
போகின்றார்கள்..? ஊம்.!

-- மீனாவுக்காக. :)

-- நவம்பர் 84 ஆம் வருட டைரி :)

வியாழன், 29 ஜனவரி, 2015

பூமாலை



கரங்கள் குடைபிடிக்கப்
பாதங்கள் செருப்பணிந்து
மண் முகம் குதறிப்போடும்
மண் குமரிக்குப்
பூ(மழை)மாலை சூட்டப்படுகின்றபோது

அன்புகள் ஆகர்ஷித்துத்
தழுவ வரும்போது
தலைக்கு மேலே கறுப்புக்
க்ரீடம் அணிந்துகொண்டு
எதிர்ப்புத் தெரிவிக்கும்
முட்டாள் மனிதர்கள்.

அந்த மழை வீணே பொழிகிறது.

மனிதத் தழுவலுக்கு
ஆசையோடு வந்த அது
மண்ணையும் மரத்தையும்
கட்டையையும் கதிரையும்
மலர்களையும் முகம்மறைக்கும்
போலிப் போர்வைகளையும்
சன்ன விரலால் தொட்டுத் தொட்டு
உயிர்ப்பிக்க முயல்கிறது

வேஷம் போடத் தெரியாமல்
வெகுளியாய் வெள்ளந்தியாய்ப்
பொழிந்து கொட்டுகின்றது.

மனிதர்கள் கூட்டின்
மையத்தில் ஒடுங்கும் சிலந்தியாய்
இருளை நோக்கி ஓடிப் பதுங்கி
வெளிச்சத்தைக் கண்டு அலறும் கரப்பாய்
மழைத்துளி பட்டவுடன்
முதுகைக் கட்டட ஓரத்தில்
திணித்து நத்தையாய்
மிருகமாய் ஆகிப்போனார்கள்

கையில் துளிகளைச் சேகரித்துப்
பரவஸப்பட முடியாமல்
ஜன்னல் கதவுகளை
அறைந்து சாத்தித்
திரைகளை இழுத்து மூடி
அதனை அவமானப்படவைக்கும்
உணர்ச்சியற்ற மிருகமாய்

கத்திப் பேசியே பழக்கப்பட்ட
செவிட்டு மனிதர்க்கு அதன்
ஸங்கீத லயம் எங்கே
புரியப்போகின்றது. ?
ஆனாலும் அலுத்துக்கொள்ளாமல்
அந்த மழை பூமாலை
கட்டிக்கொண்டிருக்கும்

புதன், 28 ஜனவரி, 2015

கலைந்து கொண்டிருக்கிறது காற்று:-

கலைந்து கொண்டிருக்கிறது காற்று:-

சீர்கெட்ட மூச்சில்
சிறிதும் பெரிதுமாய்
உவப்பு கசப்பு
உறவு நிறைவு
உற்றம் சுற்றம்
உலைத்தும் கலைத்தும்.

அண்டம் நிரப்பிய
பிராணக் குழாயிலிருந்து
பிண்டம் நிரப்பி
பின்னொரு உடலாய்
உலவிக் கலவிப்
புதுப்பித்தும் நெகிழ்ப்பித்தும்

புல்தரைப் பனித்துளியிலிருந்து
வெய்யில் கதகதப்போடு
பச்சையம் சுமந்து
உடலுள் சுழன்று
உள்ளும் புறமும்
இனித்தும் தனித்தும்.

செவ்வாய், 27 ஜனவரி, 2015

எனது தாய்மொழி கவிதை ( பேபிலதா மிஸ்ஸுக்காக )



நுதல் பிறையல்ல இது

உன் நெற்றிப்பிரதேசங்களில்
உருவாகியிருக்கும்
வியர்வை மலை முகடுகள்
பாறைகள் சிதறுவதாய்த்
தெறித்து விழும்.

நானொரு ஊமைப் பேச்சாளன்
குருட்டுப் பார்வையொளியாளன்
எனது தாய்மொழி கவிதை

உனது நெற்றிச் சமவெளிகளில்
பாத்தி கட்டியிருக்கும் கவலை முடிச்சுகள்
குங்குமத் தீற்றல்கள்
சிகப்புக் கங்குகளாய்ச் சொலிக்கும்.

நானொரு வாய்திறவாப் பேச்சாளன்
எனது தாய்மொழி கவிதை

எல்லாத் தாள்களும் மையினால்
தீட்டுப்படும்போது
உனது நெற்றியும்
வியர்வையால் தீட்டுப்படுகின்றது.
சிந்தனைக் கோடுகள் கரம் முறிய
முதுமையை எழுதிச் சமர்ப்பித்திருக்கும்
நெற்றி உனது.

உப்புக்கரிக்கும் முத்துக்களைப்
பிரசவிக்கும் மஞ்சள் கடல் உனது நெற்றி
முன் நெற்றியில் விழுந்து புரண்டு
காற்றில் சிலும்பும் சுருள்முடி
கவலைகள் கருத்தரித்து முண்டியடிப்பதைப்
பறையடிக்கும்.

நானொரு ஊமைப்பேச்சாளன்;
எனது தாய்மொழி கவிதை

நெற்றிப் பொட்டுகள்
குழிவிழுந்த கிழவியின் கன்னமாய்
பள்ளத்தாக்குப் பரிதலாய்
சமாதானம் தேடும்
புருவப் பரிவாரங்கள்
அடிக்கடி நெரித்துக்கொள்ளும்.

முரண்டி முரண்டி மேலெழுந்து
வினாக்குறியை உடுத்துக்கொள்ளும்.

இட நெருக்கடியால்
அவதிப்படும் கறுப்புச் சேனைகளாய்
முள்ளம்பன்றியின் முதுகுக் குச்சிகளாய்
ரோமம் சிலிர்க்கும்.
நெற்றிக்குப் பரிவட்டம் கட்டும்
கறுப்பு நர்த்தகிகள்
சிந்தனை மேடைகளில்
சிருங்கார இசையமைக்கும்
முடியரசிகள்

நானொரு ஊமைப்பேச்சாளன்
கண் தெரியாப் பார்வையொளியாளன்
எனது தாய்மொழி கவிதை.

எல்லா நெற்றியும் பவுடர்களால்
க்ரீம்களால் பகட்டுகளால்
போர்வை போர்த்தப்படும்போது
உனது நெற்றிமட்டும்
கவலையால் முணங்கிக்கொண்டு
பக்தியை நிரப்பிக்கொண்டு
அகன்ற ஆழ இருள்வெளிகளில்
அக்கினித் தீற்றல்களில்
உறைபனியில் அடியில்
கடகடத்துக் கொண்டிருக்கும்

நானொரு ஊமைப்பேச்சாளன்
எனது தாய்மொழி கவிதை.


--பேபிலதா மிஸ்ஸுக்காக.

-- 83 ஆம் வருட டைரி.
Related Posts Plugin for WordPress, Blogger...