எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 8 ஜனவரி, 2015

ஒற்றைப் பெண் பிள்ளையும் தாயும்..

ஒற்றைப் பெண்பிள்ளையைக்
கொண்ட தோழிகளை
அவனுக்குப் பிடித்திருந்தது.
அவர்கள் தங்கள் மகள்களின்
கன்னத்தோடு கன்னமிழைப்பதும்
கடிந்து கொள்வதும்
கொஞ்சிக் குலாவுவதும்
கிளர்ச்சியளித்தது.
பூக்களாய்ப் புன்னகைக்கும்
அவர்களைப் பார்த்துப்
பூவாவான்..
குழந்தைகளைக் கடிவதுபோல
தன்னைக் கடிவதையும்
இனிப்பு மிட்டாய் போல ருசிப்பான்.
கொலுசணிந்து ஓடும் குழந்தையின்
புகைப்படத்திலிருக்கும்
கொலுசணியாத அவள் தாயின் காலிலும்
கொலுசுச் சத்தம் தேடிப் பார்ப்பான்.
அவர்களின் உணவுக் குறிப்புக்களும்
அரசியல் அலம்பல்களும்
உறவுகளின் உரசல்களும் அங்கங்கே
சிதறிக்கிடக்கும் புத்தகம் போலத்
தன்னைக் கொடுத்திருப்பான்.
குஞ்சுகள் பெரிதானதும் பறந்துவிடும்
குருவிகளைச் சுமந்த கூடுபோல
அந்த நட்புக்களைச் சுமந்துகொண்டிருந்தான்.
அவர்கள் குழந்தைகளின் பரிட்சைகளுக்காகவும்
குடும்பத்திலுள்ளோர் உடல் நலனுக்காகவும்
பிரார்த்திக்கும் பெருமனம் பெற்றிருந்தான்.
சிலசமயம் வருத்தத்தோடு சுற்றும் அவர்களை
துணைக்கோள் போல் சுற்றி
அவர்கள் சுற்றும் பாதை சலிக்காமல்
சுலபமாக்குவான்.
தனக்கு வருத்தம் நேரும்போதெல்லாம்
வேறொரு விதமாய்க் காண்பித்து
வினோதமாய்த் திரிவான்.
சமயத்தில் ஆதி மூர்க்கம் மேலெழும்ப
காமமும் காதலும் கிளைக்கும்போது
ஒடித்து ஒளித்துப் போடுவான்.
குழந்தைகளோடு குழந்தையாயும்
அவர்களின் அம்மாக்களோடு அம்மாவாயும்
உணரும் அவனுக்கும்
அவனைத் தாயாக்கியும் சேயாக்கியும்
கொஞ்சிக் குலாவிப் புதுப்பிக்கும்
ஒரு பெண் குழந்தையிருந்தது.
எனவே அவனுக்கு
தன் மனைவியைப் போன்றே
ஒற்றைப் பெண்பிள்ளையைக் கொண்ட
தோழிகளைப் பிடித்திருக்கிறது..

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மிகவும் பிடித்திருக்கிறது...

Thenammai Lakshmanan சொன்னது…

அஹா நன்றி தனபாலன் சகோ :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...