மௌனப் ப்ரவாஹங்கள்:-
உன்னுள் நீ எப்போதும்
அடைகாத்துக் கொண்டிருக்கும்
மௌனத்திற்கு எப்போது
வார்த்தைப் ப்ரஸவம்
நிகழப் போகின்றது
ஸன்னிதானத்தில் என்னுடைய
பேச்சு மட்டுமே சில்வண்டின் ரீங்காரமாய்ப்
புலம்பிக் கொண்டிருக்கிறது.
என் குரலில் ஒரு பகுதியைக் கேட்டே
கல்லறையின் எலும்புக் கூடுகள்
பதிலளிக்கப் புறப்படுகின்றன.
நான் ஒரு கோதுமைக் கிடங்கையே
புதைத்து நீர் வார்த்தேன்.
உன்னில் ஒரு புல் கூட
உயிர்ப்பிக்க மறுக்கின்றது.
இருட்டை நம்பி வெளிச்சத்தைக் கைவிட்ட
ஸாதகப் பட்சியானேன்.
உன்னுள் சிறைப்பட்ட குரலுக்கு
எப்போது விடுதலை
உனக்கு வேண்டுமானால் மௌனம்
சிறந்த பாஷையாயிருக்கலாம்
ஆனால் காகக் கூடத் தன்
கர்ணகடூரம் மறந்து
கெக்கலித்துத் திரிகிறது
சிறந்த கவனிப்பாளன் என்பதில் கூட
உனக்குப் பெருமையில்லை
கழுத்து நெறிக்கப்பட்ட
உன் குரல் வளம் என்றாவது
ப்ரவாஹமாய்ப் பொங்கும்.
அதற்கு யுகம் கழிந்தாலும்
ஸாதகப் பட்சியின் பொறுமையாய்
மழைத்துளியின் பூத்தூவலுக்குக்
காத்திருக்கிறேன்.
என்பதுன் நினைவிலிருக்கட்டும்.
-- 85 ஆம் வருட டைரி
-- 85 ஆம் வருட டைரி
3 கருத்துகள்:
பூத்தூவலை ரசித்தேன்...
நன்றி தனபாலன் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))