புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

திங்கள், 26 ஜனவரி, 2015

அந்தி நேரத்து உதயங்கள்.:-FINE ARTS 3 RD DAY COMPETITION:-

அந்தி நேரத்து உதயங்கள்.:-

அந்தி நேரத்து உதயங்கள்
அழன்று கருகும் இதயங்கள்

கோரையாய்த் தன்னை நினைத்துக்
காற்றைக் கிழிக்க முயலும் கூரைகள்.
 தென்றலின் அசைப்பிலே
மெல்லக் கறுத்துக் கிழடாகி
ஒடிந்து விழும்
இதயத்துள் வஸந்தத்தைப் பயிரிட்டு
அவர்கள் ஸ்பரிசிப்பதென்னவோ
முள்குச்சிகள்தான்.
முள்முடிகளைச் சுமந்து சுமந்து
அவர்களுக்குப் பழகி விடுவதால்
அதுவே அவர்களின் சிரசினை
கவுரவுக்கும் கிரீடம் ஆகிறது.

அந்தி நேரத்து உதயங்கள்
அதற்காய் ஏங்கும் இதயங்கள்.

விலைவாசி ஏற்றங்களால்
அவர்கள் பாதிக்கப்படுவதில்லை
தெருவோரக் குழாயின் தண்ணீர் வரும்வரை
இதயத்துள் கோர்த்திருக்கும் பனித்துளிகள் 
எதிர்பார்ப்பு என்ற ரோஜாப்பூவுக்கு 
நம்பிக்கைப் போர்வைகளைப்
போர்த்திக் கொண்டிருப்பதால்
அதன் தண்ணென்ற சுகத்தில்
அவர்கள் காத்திருக்கிறார்கள்
புது நட்சத்திர மண்டலம் காண
அந்தி நேரத்துப் புதுச் சந்திரனைக்காண
சாகரப் பட்சியின் பொறுமையாய்த்
தங்களின் தேவைகள் நிறைவேறும்
வேளையெனும் பனித்துளிக்குக்
கரம்கொடுத்து அழைத்துக்கொள்ளத்
தயாராயிருக்கின்றார்கள்.
ஆனால் மேகங்களோ
மலையினால் தடுக்கப்பட்டால்தான்’
பள்ளத்தாக்குச் சரிவுகளில்
மழை பொழிகின்றன.
ஆகாயப் புல்வெளிகளில் பூத்திருக்கும்
மேக நம்பிக்கைகளும் சிலசமயம்
பொய்த்துவிடுவதும் உண்டு.
ஆனால் அவர்கள் யதார்த்தவாதிகள்
சலன நிழல்களைத் துரத்த விரும்பாதவர்கள்

அந்தி நேரத்து உதயங்கள்
அதனை உருவாக்கும் இதயங்கள்

இளங்கன்று பயமறியாது என்பதாய்ச்
சில துணிச்சல் மொட்டுகள் துளிர்விடும்
இந்தியாவின் அசோகச் சின்னங்கள்
தங்கத்தால் அமைக்கப்படும்போது
அவர்களின் கரங்கள்
சேற்றுக்குள் சோறு தேடும்
சமயச் சடங்குகள் நடத்தப்படுகையில்
அவர்களின் கைகள் மரங்களின் கிளைகளாய்
யாசகம் கேட்கும்.
கலாச்சாரச் சின்னங்கள்
கட்டிடங்களின் வெதுவெதுப்புக்குள்
சுகமாய் உறங்குகையில்
அவர்களின் உடல்கள்
பனிக்காற்றுகளில் மழை வேளைகளில்
சாலையோரங்களில் விறைத்துக்கிடக்கும்.
ஆனாலும் அவர்கள் யதார்த்தவாதிகள்
கல்லுக்குள் நார் உரிக்கக் கற்றுக்கொள்ள
நினைக்கும் புதுயுக யதார்த்தவாதிகள்
இந்தச் சமுதாயம் என்ற ஊசி
எவ்வளவுதான் குத்திக் கிழித்தாலும்
கிழியாத துணியாய்
தான் என்று நிமிர்ந்து நின்று
ஊசியின் முனையொடியச் செய்யும்
வல்லமை படைத்தவர்கள்.

வினாக்குறிகள் வியப்புக்குறிகள் ஆகும்
அப்போது
இவர்களின் மூச்சுக் காற்று
தீமைகளைச் சுடும் நெருப்பலையாய் மாறும்
இவர்களின் கண்வீச்சு
சூரியனையும் சந்திரனையும் துவளச்செய்யும்.
இவர்களின் கரங்களின் அசைப்பு
போரை ஒழித்து சமாதானக் கொடியைப்
பறக்கவைக்கும்
இவர்களின் இதயத் தாபம்
மெல்ல அடங்கித் தன் இலக்கு எட்டும்
அதுவரை இவர்கள் தங்கள்
குறியை அடையச்
சுயகட்டுப்பாடாய்த் தம்மைச்
சேணத்திலுட்படுத்திக்கொண்ட குதிரைகள்

அந்திநேரத்து உதயங்கள்
அதனை உருவாக்கும் இதயங்கள்.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...