எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 26 மார்ச், 2015

கண்ணகிகள் நிறமிழந்து போனார்கள்.கண்ணகிகள் நிறமிழந்து போனார்கள்

[வைகறை என்னும் கல்லூரி மாகசீனில் வெளிவந்தது.]

கண்ணகிகள்
நிறமிழந்து போனார்கள்.

கபாலிகர்கள்
காலில் மிதிபடும் மண்டையோடுகளாய்..

என்று அந்தத் துர்க்கை
இடம்மாறிக் கொண்டாள் ?

நிலவு உதிப்பதற்குத்
திசையில்லாமல் போனது.
கண்ணகிகளின் வண்ணச்சீறடிகள்
இரவுவிடுதிகளில்
ஒளிவட்டம் அறிந்தன

ஊரெல்லாம் கறுப்பு நிலா
காய்த்துப் போனது.
இருக்கின்ற சில
புள்ளி நட்சத்திரங்களும்
இடம் மாறிப் போய்
இருட்டுடுத்துக் கொண்டன.

கறுப்புச் சிலந்திகள்
மனம் உழுது
விஷம் விதைத்துப் போகும்
கறுப்புச் சிலந்திகள்.

தாஜ்மகாலின் புனிதத்தின் மேல்
கறுப்புப்படலம் பூத்துப் போனது
சுரண்டச் சுரண்ட
சாம்பல் தெறிக்கும்
கசடுகளாய்

இவர்கள் வாசற்படி தாண்டும்போது
எத்தனை பூனைகள்
குறுக்கே ஓடின ?

சேணம் துறந்த
இந்தக் குழப்பக் குதிரைகள்
ஓடுவது எந்தப் புல்வெளி நோக்கி

எதற்காக யாரோடு
தோற்றுக் கொண்டிருக்கும்
பந்தயக் குதிரைகள் இவர்கள்

எந்த அசட்டுத் தைரியத்தில்
படையெடுத்துப் பின்வாங்கிக்கொண்டு
இருக்கும் கௌரவர்கள் இவர்கள்.

எல்லாப் பாரங்களையும் தூக்கி
முதுகை முறித்துக்கொள்ளும்படி
இந்தக் கழுதைகளுக்கு
யார் சாபமிட்டது?

கண்ணகிகள் நிறமிழந்து
காற்றிலலைந்து காற்றிலலைந்து
காணாமற் போனார்கள்.

எல்லா ஊர்க்கண்ணகிகளும்
எரிந்து பொசுங்கிச்
சாம்பலாகிப் போனார்கள்.

--- 84 ஆம் வருட டைரி. 

4 கருத்துகள்:

சரஸ்வதி ராஜேந்திரன் சொன்னது…

கண்ணகிகள் நிறமிழந்து போனது --காலத்தின் சாபமா?கடவுளுக்கு பாடமா? பாவிகள் பூமி ---மன்னை சதிரா

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இப்படி இருக்கக் கூடாதே...

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் அம்மா பாவிகள் பூமிதான்..

ஆம் தனபாலன் சகோ.. ஹ்ம்ம்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...