மீண்டும் மீண்டும் நாம் முகத்தில் நீரடித்து விழிப்பு ஏற்படுத்திக்
கொள்வது மீண்டு கனவு காணத்தானே தவிர உணர்வு கொண்டு வீறு நடை போட அல்ல.எல்லாரும் ப்ரேமைச் சிலந்திக்கூடுகளில் சிக்கியிருக்கின்றோம்.
உறிஞ்சப்படுவோம் எனத் தெரிந்தும் நம் கண்ணில் மழையின் உக்கிர
வெள்ளம் படுவதில்லை. சூரியனின் தாகதாண்டவம், பூமி விரிசல் தெரிவதில்லை. காற்றின் சூறையாடல்,
விண்வெளியின் கல்லுத்தனம் உறைப்பதில்லை. புரிபடுவதில்லை.
தினம் உயிர்த்து உண்டு கொழுத்து உறங்குகின்றோம். மீண்டும்
உறங்கவேண்டும் என்பதற்காகவே விழிக்கின்றோம். உறக்கம் நமது உயிர்ச்செல். உறக்கமே நமது
விழிப்பாய் ஆனது.
ஒதுக்கப்படுதல்களில் விழித்துக்கொள்ளும் நாம் புரிந்துகொள்ளப்படும்பொழுது
உறங்குகின்றோம். அன்புப் பிச்சைக்காரர்கள் நம் விழி தடவி எழுவிக்க முயலும்போது அசிங்கமான
நம் குறட்டை அவர்களின் மனம் அறையும் என்பதை உணராமல். ஏனிப்படி ஆனோம்.?
நாமும் அவர்கள் நிலையில் இருந்து இருந்துதான் அசைப்பதற்கு
ஒன்றுமில்லை என்றாகி இப்படி அசையாமல் பாதிப் பிணமாய்க் கிடக்கின்றோமோ?
எந்த மந்திரவாதி இப்படிச் சாபமிட்டான். எந்தத் துர்ப்போதனை
நமக்கு உறக்கத்தாகம் அளித்தது. எந்த முனிவனை அவமதித்தோம் காயசண்டிகைகளாய்க் கண்மூடித்
தூக்கப் பசியெடுத்து அலைய.?
சுஜாதாவின் கதைப்படி இவர்கள் சப்தங்கள் கதையில் வரும் ஆரஞ்சு
மனிதர்களோ? வாய்பேசாமல் விரும்பியபடி உருவெடுத்து நண்டாய்ப் பிடித்து முதலையாய் விழுங்க.?
பெண்புறாவைச் சாகவிட்டுத் தான் தப்பித்துக் கொண்ட ஆண் புறாக்களோ
நாமும். ? இந்தப் பிறவியில் இப்படி அலைகின்றோம். எத்தனை வாசல்கள் ( மனம் ) தட்டித்
தட்டிக் கை சோர்ந்திருப்போம் ? அத்தனையும் தூங்கிப் போன மரக்கதவுகள் எனத் தெரிந்தால்
இழைப்புளியால் செதுக்கப்பட்டுச் சவண்டுபோன உயிரற்ற மரத்துண்டங்கள் எனத் தெரிந்தால்
தொட்டிருக்க மாட்டோமோ, என்னவோ ?
அணைக்கப்படுவதற்கென்றே வைக்கப்படும் அலாரங்கள் நாமென்று அறிந்தால்
குரலை வீணாகக் கட்டிப் போகாமல் மௌனித்துக் குந்தியிருப்போமோ ? என்னவோ ஊதுவது நம் கடமை.
செவிடன் காதாயிருந்தால் என்ன செத்துப் போனதுபோல் தூங்கிக்கொண்டிருப்பவன் காதாயிருந்தால்
என்ன ? கொஞ்சம் கூடவே ஊதி வைப்போம்.
விழித்து நெருப்பில் கருகாமல் தற்காத்துக்கொள்பவர்கள் காத்துக்
கொள்ளட்டும்.
டிஸ்கி :- 82 ஆம் வருட டைரி.
டிஸ்கி :- 82 ஆம் வருட டைரி.
4 கருத்துகள்:
50% பிண வாழ்க்கை தான்...!
உண்மை உண்மை.
ஆம் தனபாலன் சகோ
நன்றி கில்லர்ஜி சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))