எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

குதிரைகள்:-



குதிரைகள்:-

இவைகள் இலக்கை நோக்கி
எறியப்பட்ட அம்புகள்.

குறியை அடைய
சுயகட்டுப்பாடாய்
கண்களைச் சேணத்தில்
உட்படுத்திகொண்ட குதிரைகள்

ஆவேசக் கனைப்புகள்
இதழ்க்கடை நுரைதள்ள
முட்டாள்தனமாய்
முட்டி பெயர்த்துத்
தட்டிவிழும் குதிரைகள்.

காற்றின் நர்த்தனமாய்
நளினமாய்ப் பாயும் குதிரைகள்.

சுய லயிப்புடன்
சேணம்துறந்து
கடமை மறந்து
பச்சைப் புல்லை
இச்சித்துத் தின்னும்
சோம்பேறிக் குதிரைகள்.

கிட்ட நெருங்கவிடாமல்
மூச்சை இறைத்து
முகத்தைச் சுருக்கி
வெறுப்பால் உறுமும் குதிரைகள்.

அலையின் அலைச்சலாய்
அலைந்துகொண்டே இருக்கும்
உழைப்புக் குதிரைகள்.

கானலைப் பிடிக்கத்
துரத்திக்கொண்டே இருக்கும்
ஏமாற்றக் குதிரைகள்

துக்க உருக்கல்களிலும்
இன்ப வெளிச்சத்தைப்
பார்க்கும் ( பிடிக்கும் )
சந்தோஷக் குதிரைகள்.

பிடரி சிலிர்த்து
முன்கால் தூக்கி
முகத்தை மிதிக்க வரும்
அதிமேதாவிக் குதிரைகள்.

சின்ன இலக்குகளை
எட்டிவிட்ட சந்தோஷங்களில்
கனைத்து அழைக்கும்
அப்பாவிக் குதிரைகள்.

கண்ணைச்சிமிட்டி
மெதுவாய் அழைத்து
இன்பத்தைப் பகிர்ந்தளிக்கும்
சினேகக் குதிரைகள்.

தொட்டதெற்கெல்லாம்
மெல்லச் சிணுங்கும்
பிள்ளைக்குழந்தையாய்
சிட்டுக் குதிரைகள்.

தட்டிக் கொடுத்து
ஏறி அமர்ந்தால்
பாய்ச்சலாய்ச் சென்று
இலக்கில் இறங்கும்
வழிகாட்டிக் குதிரைகள்.

நடுவழியில் குப்புறத்தள்ளி
குழியைத் தோண்டி
மூடிப் புதைத்து
மௌனமாய் இருக்கும்
மோசக்கார நயவஞ்சகக் குதிரைகள்.

குதிரைகள் குதிரைகள்
குதிரைகள்
காற்றிலலைந்து
ஓடுவதற்கென்றே
சபிக்கப்பட்ட
ஏமாளி ராஜாக்கள். .


1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...