நீர் தேங்கிக்கிடக்கிறது
வாய்க்காலின் மையத்தில்
இலைச்சருகுகளால்
வஸந்தகாலப் பூக்களால்
அர்ச்சிக்கப்பட்டுத்
தென்றலில் குளித்துக்
குளிர்ந்துபோன
நீர் தேங்கிக்கிடக்கிறது.
வழிப்போக்கருக்கென்ன தெரியும்
வேர்களுக்குத்தான் தெரியும்
வாய்க்கால் சுனையென்று.
சுரந்து சுரந்து சுமந்து
சலித்துப் போய்
வாய்மூடிக்கொண்ட
நீர் தேங்கிக்கிடக்கிறது.
அட அள்ளிப்பருகத்தான் வேண்டாம்
கொஞ்சம் கால நனைத்தாவது
கலக்கிச் சென்றாலென்ன
சருகுகளின் தடவல்களின்
பூக்களின் முத்தங்களில்
சமனப்பட்டுக்கிடந்த அது
சத்தங்களை விரும்புகிறது.
நீர் தேங்கிக்கிடக்கிறது
வாய்க்காலின் மையத்தில்
குதிரைகளின் குளம்படிகளுக்கு
மாடுகளின் கூர்வார்களுக்கு
மான்களின் முகங்களுக்கு
முயல்களின் உறிஞ்சல்களுக்கு
ஏங்கிக்கொண்டே அந்த
நீர் தேங்கிக்கிடக்கிறது
வாய்க்காலின் மையத்தில்
வேர்களின் விசாரிப்புகளுக்கு
மானுடத்தின் இறைச்சலுக்கு
ஏங்கிப்போய்க் கிடக்கிறது
கரங்களின் வருடலுக்காய்க்
காத்து பசலை பூத்துபோய்க்கிடக்கிறது.
மயில்தோகையாய் விரிந்து
ஒரு தொடுதலுக்குக் காத்திருக்கிறது.
அந்த நீர் இன்னும் தேங்கிப் போய்க்கிடக்கிறது
வாய்க்காலின் மையத்தில்
செத்த இலைகளுடனும் பூக்களுடனும்
பாசிகளுடனும் உறவாடிக்கொண்டு.
-- 1984 ஆம் வருட டைரி
3 கருத்துகள்:
அழகு... ரசித்தேன்...
நன்றி டிடிசகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))