எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

வசந்தங்கள் பிறக்கின்றன வருடந்தோறும். :_



வசந்தங்கள் பிறக்கின்றன வருடந்தோறும். :_

மரத்தின் கிழவாய்கள்
என்னை மென்று துப்ப
தளிர்நடை பயின்றேன்.
சலனம் அடங்கிட்ட
மனக்குளத்தில்
ஆசைக்கல்லெறிந்து
ஆட்டம் பார்க்காதே !
அது அசிங்கம். !
வெளியே கூறிவிட்டால்
வெறுமையாகிவிடுமோவென
உள்ளத்துப் பேழையில் பதுக்கியுள்ளேன்.
அடக்கமுடியாமல்
திணறும்போது
கொட்டிவிடலாம் வெளியில்
எனத் தோன்றும்.
பின்பு இரகசியங்கள்
பெட்டகத்தில் உறங்க வேண்டும்.
பிறர் வாய்களால்
உசுப்பப்படக்கூடாது எனத்
தோன்றும்.
இருதலைக் கொள்ளி
எறும்பாய்
உற்சாக வெள்ளம்
பொங்கு நுரையுடன்
குமிழுடன் வெடிக்கும்.
அன்பு செய்வதை
நண்பர்களிடம் கூடக்
கூறக் கூடாது.
ஏனெனில்
அவர்களும்
ஒருநாள் என்னை
எள்ளி நகையாடலாம்.
நான் அன்பு செய்வது
உனக்குக்கூடத் தெரியக்கூடாது.
ஏனெனில்
நீ கூட மாறலாம்.
நான் விரும்புவது
எனக்கு மட்டுமே
தெரிந்ததாக
புரிந்ததாக
உடையதாக
எனக்கு மட்டுமே உரியதாக
இருக்க வேண்டும்.
நான் சிரித்தால் சிரித்து
நான் அழுதால் அழுது
என்னோடு மகிழ்ந்து
துன்ப வெள்ளத்தில்
இருந்து கரையேற்றி
என்னுடன் இருந்து
நான் சொல்வதற்கெல்லாம்
தலையாட்டி
இவ்வளவு தேவையில்லை.
நீ உன் அன்பைப் புலப்படுத்த. !

அந்த அளவு புரிந்துகொள்ளாத
முட்டாள் நானல்ல. !
அடிபட்டவனுக்குத்தானே
அடுத்தவன் வலி புரியும்.
நான் அவர்களைப் போல
உன்னை ஏமாற்ற முடிவு
செய்யவில்லை.
உன் காயத்திற்கு அன்போடு
மருந்து போட முன்வருகின்றேன்.
தயவுசெய்து என்னைத்
தெய்வமாக்காதே !
ஏனெனில் தெய்வங்கள்
கல்லால் செய்யப்படுவது
அவை கல்லாகவே
இருக்க வேண்டுமென்பதற்குத்தான்.
எனக்காக எனக்கும் சேர்த்து
என்னைக் காண நீ
துடிப்பதையும்
யுகக்கணக்காய்ப்
பகீரத்தவம் செய்வதையும்
கண்டு சந்தோஷிக்கிறேன்.
என் முகத்தைக் காண நீ துடிப்பது
புரிந்து ரொம்பவும் இன்பத்தில்
அதிர்கின்றேன்.
என் காத்திருத்தல் முடிந்துவிட்டது.
எனக்காக நீ என்னை
எதிர்பார்த்துக் காத்திருக்கத்
தொடங்கி விட்டாய்.
நான் எதிர்பார்த்ததுதானே இது. !
பிறர்போல் நானுன்னை ரொம்பக்
காக்க வைக்க மாட்டேன்.
எனக்காக நீ அழுவதையும்
என் மௌனம் கண்டு
அரற்றுவதையும்
என்னைக் கண்டு 
புன்னகை பூப்பூப்பதையும்
என் புன்சிரிப்பைக் கண்டு
துள்ளுவதையும்
எனக்காக
எனக்காகவே
எனக்காக மட்டுமே
நீ ஆடுவதையும்
பாடுவதையும்
காணக்காண
நான் உன்னை
மீண்டும் மீண்டும்
விரும்புகின்றேன்
உனக்காகவே. !
உன் இந்த
வெறித்தனமான
பைத்தியம் பிடித்த
இதயப்பூர்வமான
காட்டுத்தனமான
உன் அன்புக்காகவே. !

-- 84 ஆம் வருட டைரி. 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...