மௌனமாக இரு :-
இதயத்தின் இருட்டுப் புதையலுக்குள்
இதழின் இனிய மடிப்புக்களில்
மௌனத்தைப் பொதித்து வை.
மூளையை அலைச்சல்படுத்தாதே.
முயங்கி மயங்கிக் கரையாதே.
உயர்ந்த துவஜஸ்தம்பங்களில்
சிநேகப்பூக்கள் மத்தியில்
சொற்களைப் புதைத்துவை.
கேள்விகளைக் கொட்டிவிடாதே
அந்தரங்கத்தை மறைத்துவை
நீ ஒரு ஓட்டைப்பானை
ஒருபுறம் அடைக்க
மறுபுறம் ஊற்றெடுக்கும்.
அடக்கமாயிரு.
முடிந்தவரை அடங்கியிரு
பொங்கியெழுந்து கோபிக்க
நீயென்ன கங்கையா காவிரியா.?
வயலோரக் கால்வாய்.
உன்னை நம்பும் உழவர்களை
வயல்களைக் காயப்படுத்தாதே.
உனக்குக் கோபம் வந்து
பெரிதாக ஒன்றும் சாதித்துவிடப் போவதில்லை.
ஏதோ ஒருமுறை வெற்றி கிடைத்ததென்பதற்காக
ஆறுமுறை தோல்வியைத் தழுவிய
இராபர்ட் புரூசாய் ஆகாதே
மனக்குளத்தில் சலனக்கல்லை
முத்தமிட அனுமதிக்காதே.
தயவுசெய்து சாதாரணமாயிரு.
ஆசைகளை சுமந்து சுமந்து
தள்ளாடிச் சரியாதே
ஒருவேளை நீ என்றாவது
வற்றாத ஜீவநதியாகலாம்.
அதுவரை
வயலோரக் கால்வாய் நீ
மௌனத்தைப் பொதித்து வை.
கால்பட்டுக் கலங்காதே
உன் பாட்டில் பயணத்தை நடத்து
அடக்கமாயிரு அமைதியாயிரு
பிரளயம் வந்து உன்னை
அணைக்கும்போது நீ
பெரீய்ய்ய்ய நதியாகலாம்
நம்பிக்கையுடன் நட.
-- 85 ஆம் வருட டைரி
-- 85 ஆம் வருட டைரி
2 கருத்துகள்:
அதானே...? மௌனமே சிறந்தது...
ஆம் டிடி சகோ
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))