எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 16 நவம்பர், 2015

நாங்கள் ஜன்னல்கள்



நாங்கள் ஜன்னல்கள்:-

நாங்கள் ஜன்னல்கள்.
எங்களைப் பற்றிக் கொண்ட கொடிகளை
இளைஞர்களே !
நாங்கள் உங்களைப் போலக் கைவிடுவது இல்லை.
மன ஏக்கங்களை மறைத்து ழும்
நிலவு முகங்களைத் தாங்குவதில்
பூரிப்படைகிறோம்.
வரதட்சணை என்ற பாலைவனத்தில்
உங்களை நம்பிப் பற்றிக் கொண்ட கொடிக்கரங்களை
மணலை உதறுவது போல நீங்கள்
எளிதில் உதறலாம்.
எங்களை 
முள்ளில்லாக் கொம்புகளாகிய எங்களைப் 
பற்றிக் கொண்ட கொடி உடல்களை
நாங்கள் வாட விடுவதில்லை.
என் வீட்டுக் கதவுகள் போலே
அவள் இதயத்தின் வாயிற்கதவுகள்
எந்நேரமும் உனக்காக திறந்தபடிதான் இருக்கின்றது.
ஒவ்வொரு முறையும் நீ
அவளை அடைகின்றாய்.
இதயக்கதவைத் தட்டுகின்றாய்
ஆசை வார்த்தைகளைக் கூறி. !
இறுகிவிட்ட அவளிதயம்
இளகிவரும் நேரத்தில்
இதயமில்லாமல்
இடத்தைக் காலிபண்ணி விடுகின்றாய்.
மீண்டும் மீண்டும் ஏன்
கானலாகி விடுகின்றாய். ?
ஏன் இந்தக் கானல் அழைப்பு ?
என் மேனி முழுவதும் சிவப்பாகி விட்டது.
உப்புக் கரிப்பதால் கறுப்பாகி விட்டேன்.
அவளின் கண்ணீரும் செந்நீருமே
என்னைத் தூய்மைப்படுத்துகின்றன.
அவள் இன்னும் உன்னை எதிர்பார்த்து
நம்பிக் கொண்டு இருக்கிறாள்.
நாங்கள்
ஜன்னல்கள்
எங்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு.
எங்கள் இரும்பு உள்ளங்களே
இரும்பு உடல்களே
உருகிக் கனியும்போது
நீ.
நீ மட்டும் எப்படி
இப்படி இரும்பைவிடக்
கொடுமையாகிப் போனாய். !
அவள் ஒவ்வொரு முறையும்
மலர்ந்து சுருங்குகிறாள்
உள்ளக் கூட்டுக்குள் ஒடுங்கும்
நத்தையானாள்.
யாரை நம்ப ?
எதை நம்ப ?
வசந்தங்கள் வருடந்தோறும் வருவதுபோல்
இவள் வாழ்வில் இலையுதிர்காலமும்
வருடந்தோறும் தப்பாமல் வருகின்றது.
அவள் நேற்றும் மலர்ந்து வாடினாள்.
இன்றைய புதுப்பூவாகவும் இருந்து வாடிக் கொண்டிருக்கிறாள்
நாளையும் இது தொடருமோ ?
ஏமாற்றங்களே அவளுக்குப் பரிசாக
ஏமாற்றப்படுவது அவளின் வாழ்க்கையாக
ஏமாறுவதே அவளின் தொழிலாக
ஏமாற்றுவதே உனக்கு வேலையாக
இருக்கும்போது இதற்கு மட்டும்
எப்போது விடியல்..?

-- 85 ஆம் வுடைரி

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்லதொரு ஒப்பீடு...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...