உறங்கட்டும் உள்ளக் கேவல்கள், அவலங்கள்.
சொற் சுவாலைகளுக்குப் பயந்து
போர்த்திக் கொண்ட மௌனப் போர்வையின்
வெம்மையைப் பிரிய இஷ்டமில்லை.
காட்டாற்று வெள்ளத்தின் நடுவில்
திட்டுத் திட்டாய்ப் பூத்திருக்கும்
மொட்டைத் திடல்களில்
மாட்டிக்கொண்டுவிட்ட நிலை.
நட்டாற்றில் கைவிடுப்பு
மூழ்குவதுபோல் தவிப்பு
கல்லடிபட்டும் எனக்கு
உறைக்கவில்லை
ஏனெனில் உன் சொல்லடிகள்
என்னை உறைபோட்டு இருந்தன.
எவ்வளவோ ஜாக்கிரதையாக இருந்தும்
எலிப்பொறியில் மாட்டிக்கொண்ட எலியின் நிலை.
தடுமாற்றங்கள்.
இப்போது உண்மையாகவே உதவ யாருமில்லை.
இது
உண்மையின் தடுமாறல்களினாலா
உறவுகளின் தடம்மாறல்களினாலா.
எனக்கே புரியவில்லை
அழுகைச்சொத்து
பத்திரம் எழுதியதில்
அது ஒன்றுதான் மிச்சம்.
இது
சுய இரக்கத்தின் விளைவா
மகிழ்ச்சித் தடுமாற்றத்திலா
மனம் கண்ட வாட்டத்திலா
சுய ரூபத்தின்
நிர்வாணக் கோலமா
சாயம்போன கனவுக் கலங்கல்களா
இருளில் கிடந்த உண்மையின் மேல்
வெளிச்சம் பட்டதால் கூசிச் சிலிர்த்த
கண்ணின் அசைவுகளோ?
எதைச் சொல்ல ?
எப்படிச் சொல்ல ?
சொன்னால்
வெளியே கூறிவிட்டால்
தீருமா இந்த அவலம்.
அளவுக்கு மீறிய சந்தோஷத்தையும்
அளவுக்கு மீறிய துக்கத்தையும்
அடக்கி வைப்பது தவறாமே.
போகட்டும் எதையும் நான் சொல்வதற்கில்லை.
என் அவலம் என்னுள்ளே
புதைந்து புதைந்து மடிந்து போகட்டும்.
-- 85 ஆம் வருட டைரி.
-- 85 ஆம் வருட டைரி.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))