வானம் தேடும் பௌர்ணமி:-
கூடுவாஞ்சேரியின்
குடிசையோரத்து மூலையில்
முனகிக்கொண்டே கிடக்கும்
மூக்கப்பன் சொல்லுவான்,
என்னைப் போலத்தானே
இந்தக் குருட்டு இருட்டு வானமும்.
முட்டாப்பயல் பெத்த மவன்.
பௌர்ணமியைத் தொலைச்சிட்டுத்தேடறானே.
இந்தப் புத்தி முன்னே இருந்தால் இப்போ
அலையவேண்டிய அவசியமென்னன்னு.
நட்சத்திரக் காவலர்களுக்கு
எவ்வளவு தொல்லைன்னு
வெளிக்குச் சிரித்தாலும்
அவன் உள்ளுள் அழுதுகொண்டிருக்கும்
கேள்விக்குப் பதில் கிடைக்காமல்
மனம் அலையும், அழும்.
இருளோடு இருளாய்
காரிருளாய் இருளே அலறும் வண்ணம்
கருமையாய் இருந்த அவனின்
நிறம்தான் காரணம்.
நீலவண்ண வானம்போலத்தான் அவனும்.
கார்மேகத்துக்குக் கைகால் முளைத்ததைப் போல.
அவனின் மனைவி நிறத்துக்குப் பயந்துதான்
தாய்வீடு ஓடிப் பதுங்கிக் கொண்டாள்.
அவளுக்கு மாநிறமென்றாலே குமட்டும்.
கறுப்பென்றால். ?
இவனின் வாழ்க்கை
அச்சாணி முறிந்த வண்டியாய்த் தடம்மாறிய
இரயில் பெட்டியாய் ஆனது.
எத்தனை தேடுதல்கள் வேண்டுதல்கள்
அவமானத் தாக்குதல்கள்
இவன் சுருண்டு போனான்
அந்த வானத்திற்கு என்றேனும் ஒருநாள்
பௌர்ணமி கிடைத்துவிடுவாள்.
இந்த வானத்திற்கு. ?
அன்பென்ற பௌர்ணமி கிடைக்குமா
வானத்து நட்சத்திரங்கள் இவனுள்
நம்பிக்கை விதையை ஊன்றிக் கொண்டிருந்தன.
-- 85 ஆம் வருட டைரி
-- 85 ஆம் வருட டைரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))