யார்கூடயும் பேசுறதுக்கும் இந்த உலகத்துல விஷயமே இல்லாத மாதிரி
இருக்கு. எந்த விஷயத்தையும் ரசிக்க மட்டுமே முடியும். யாரிடமாவது அதைப் பகிர்ந்து கொண்டால்
(பேச்சு வார்த்தையாய்ப்) அதனுடைய CHARM ஏ போய்விடும். யார்கூடவும் பேசத்தோணலை. அர்த்தமில்லாம
அத்தனைபேரும் பிதற்றுகிறமாதிரி இருக்கு. இப்பிடி ஊமைச்சாமியாராட்டம் உட்கார்ந்துகொண்டு
ஒவ்வொருத்தருடைய பிஹேவியரையும் நோட் பண்றது சுவாரசியமான பொழுது போக்கு.
நான் எப்போதிலிருந்து இப்படி அந்தரத் தியானமானேன். கல்லாய்,
மண்ணாய், ( உள்ளே உணர்ச்சியிருந்தும் வெளிப்படுத்தினால் ப்ரயோசனமில்லை எனத் தெரிந்துகொண்ட)
மரமாய் ஆனேன். ஆனால் இப்படி இருப்பது ரொம்ப அடிபட்டப்புறம்தான் வரும்போலத் தோன்றுகிறது.
ஒவ்வொருதரமும் அடிபட்டால் மரத்துப் போய் மரக்கட்டையாகிவிடும் என்றேன். அதற்குப் பதில்
” ஒவ்வொருதரமும் சீழ்ப்பிடித்த புண்ணில் குத்தினால் வலிக்காதா ? அல்லது காய்ந்த வடுவாய்
இருந்தாலும் ஒவ்வொரு முறையும் மனசுள் ரத்தம் உன்னையறிந்தும் அறியாமலும் கொட்டத்தானே
செய்யும். “ என்று பதில் வந்தது.
கொஞ்சகாலம் அவகாசம்தான். என் மாற்றத்துக்குக்குத் தேவை. அப்புறம்
ஏற்றுக் கொண்டு விடும் துன்பங்களை சகஜமாய்.
நான் எனக்கு எனக்காக மட்டுமே எழுதுவதாகக் கூறினாலும் அதை
ரசிக்க, விமர்சிக்க ஒரு உயிர் வேண்டும் என்ற எண்ணம் ஒரு மூலையில் ஒட்டிக்கொண்டிருக்கின்றது
போலிருக்கிறது.
நான் இப்படியெல்லாம் எழுதுவதன் மூலம் எனக்கு நானே நம்பிக்கையூட்டிக்
கொள்கிறேன். முக்கால் மரக்கட்டையாய் ( என் கோபம், ஆக்ரோஷம், படபடப்பு, இவையே என் உயிர்த்துடிப்புள்ள
குணங்கள் என்றும் என்னை இன்னும் உணர்ச்சியுள்ள பெண்ணாக ஆக்கியதாக ஒரு காலத்தில் நினைத்துப்
பெருமைப்பட்டவை எல்லாம் இப்போது இல்லை. ) ஆகிவிட்ட என்னிடம் கனிவை ஆதரவை எதிர்பார்ப்பது
முட்டாள்தனம்.
நான் இன்னும் சமனப்படவேண்டும். கல்லுத்தனமாய், இயற்கையின்
மௌனசாட்சியாய், உறை பனிக்கட்டியாய் ஆக வேண்டும். என்னை உடைத்தால் உடைத்துவிட்டுப் போ.
நான் கவலைப்படமாட்டேன் என்று நிற்கின்ற பாறாங்கல்லாய், பனிமலையாய், இப்போதே உள்ளுள்
வெறுமை சூடிக்கொண்டு நிற்கின்றது. நிரந்தர சூன்யம் எப்போது கிடைக்கும் இன்னும் சில
உயிர்ச்செல்கள் என்னுள் உயிர்ப்பிக்கின்றன. அவை முதிர்ந்து பக்குவப்பட வேண்டும்.
-- 85 ஆம் வருட டைரி.
3 கருத்துகள்:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
நீங்கள் உங்களைப் பற்றி எழுதி இருக்கிறீர்களா? அல்லது நான் நினைப்பதை உங்கள் குரலாக பதிவு செய்திருக்கிறீர்களா?
இரண்டும்தான் சகோதரி. :)
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))