எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 17 மே, 2015

ப்ரிய மாமா



ப்ரிய மாமா
”மா” ”மா” நீங்கள்.
இந்தக் கவிதை
உங்கள் மனவீட்டுக்குள்
அரிக்காத வண்ணப்புகைப்படமாய்
இருக்க வேண்டாம்
ஒரு சுருண்ட காலண்டராகவாவது
முடங்கிக்கொள்ள அனுமதியுங்களேன்

எப்படி முடிகிறது உங்களால்
மனத்தடி மண்ணில்
கப்பும் கிளையுமாய்ப் பூக்க
வெடிக்க நினைக்கும்
ப்ரிய விதைகளை
ஆழப் புதைக்க

இன்னும் எனக்கு நீங்கள்
ஆச்சர்யம் உண்டுபண்ணும்
மனிதர்தான்

மனிதச் சிலைகளுக்கு
அறிவுப் பட்டை தீட்டிக்கொண்டிருக்கும்
நீங்கள் ஓர்
ஆச்சர்யகரமான சிற்பி

மனித ஊதல்களுக்குள்
தூரமாய் நின்று அடக்கமாய்
சன்னமாய் வாசிக்கும்
அமைதி இசைக்கருவி நீங்கள்

கரைகளுக்கும் அலைகளுக்கும்
தள்ளாடும் படகாய்
நான் இருந்துகொண்டிருக்கும்போது
கலங்கரை விளக்கங்களை
சரியாகத் தேர்ந்தெடுக்கும்
கப்பலாய் நீங்கள்

ஓ.
பிரமித்துப் போகிறேன்
உறவுகள் எனும் கணப்புகளுக்குள்
நாங்கள் குளிர்காய்ந்து கொண்டிருக்கும்போது
எங்கோ தனிமைப் பாலைவனத்தில்
வெறுமைக் குளிரில்..

நினைக்கையில்
என் சுவாசம் தவறுகிறது.

நீங்கள் ஒரு ஒலிக்குறிப்பு
அடங்கிய புத்தகம்
உங்களை என்னால்
உணரத்தான் முடிகிறதே தவிர
பிறருக்கு
உணர்த்த முடிவதில்லை
ஏன் கவிதையிலும் கூடத்தான்.

-- 80 ஆம் வருடம் எழுதியது. 


3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...