புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

சனி, 16 மே, 2015

பகைவனுக்கருள்வாய்பகைவனுக்கருள்வாய்

பகைவனுக்கு அருள்வாய் என்று
பாரதியே, நீ
இப்படியா அறம்பாடிச் செல்வது. ?
நாங்கள் எங்கள் உடல்கள் மட்டுமல்ல
ஆன்மாக்களே எரிந்து பிடி சாம்பல்கூடப்
பார்க்கக் கிட்டாமல் போனபோது
பேச ஆசையிருந்தும் ஊமைக்குயில்களாய்
பேச முடிந்தும் மோனத்துறவிகளாய்
பேசும் துடிப்புடன் மழலைக்குழவிகளாய்
பிதற்றி, அரற்றி, மிழற்றி
முடிவில் மௌனித்துப்
பகைவர்க்கு அல்ல அல்ல
பகைவராய் மாறிவிட்ட நண்பர்க்கு
அருளிக் கொண்டிருக்கிறோம்
சீறிப் பாயும் இந்த வெள்ளத்தை
இன்று அணைகட்டி மடக்கலாம்
நாளையே இது உடைப்பெடுக்காது
என்பதற்கு உத்தரவாதம். ?
பாரதியே ! இன்னும் யாம் பகைவர்க்கு
அருளிக் கொண்டிருக்கிறோம்.
எங்கள் அன்னையின் சுட்டுவிரல் அல்ல அல்ல
சுண்டுவிரல் நகத்திற்கு ஈடாகாத இந்த
சுண்டைக்காய் நாட்டிற்குள் இத்தனை
திமிர்த்தனமா திமிறிக்கொண்டிருந்தது.
பாரதியே.!
இன்னும் யாம் பகைவர்க்கு
அருளிக் கொண்டிருக்கிறோம்
மாராப்புப் போடாத மஞ்சள் முகப் பெண்களே
நீங்கள் மரவள்ளிக்கிழங்கைத்
தணலிலிட்டுப் பொசுக்குகையிலே
எங்கள் உள்ளமும்
பொசுங்கிப் போய்த்துடிக்கிறது.
இப்படித்தானே இலங்கையிலும்
எம் நாட்டின் இளங்குருத்துகள்
சாம்பலாகிக் கிடக்கின்றனவென்று
இதயம் சீழ்ப்பிடித்து
பேப்பர் ஓடைகளில் பேனாப்பூக்கள்
இரத்தப் புன்னகையைக்
கசியவிட்டு மடிகின்றன.
பாரதியே. !
இன்னும் யாம்
அருளிக் கொண்டிருக்கிறோம்
ரோஜா மொட்டுகளை
மலர்ந்த முல்லைகளை
மீண்டும் மலராத
மலரமுடியாத
வஸந்தங்களாக்கி விட எந்த
சாடிஸ்ட்க்குமே மனம் வராதே
ஓ!
ஈழவர்கள் காட்டுமிராண்டிகளோ
மூளைவளராத குழந்தைகளோ
உலகு நினையாத பைத்தியங்களோ
ஆம் அப்படியானால் அவர்கள்
அனுதாபத்துக்கு உரியவர்களே
இந்தச் சிம்னி கூட ஈழத்தில்
இறந்துபட்ட எம் அருமை
இதயங்களுக்குத் துணையாக
இறந்துயிர்த்து இறந்து பட்டதோ
பாரதியே!
நாங்கள் இன்னும் பகைவர்க்கு
அருளிக் கொண்டிருக்கிறோம்
இனியும் அருள்வோம்
ஏனெனில் நாங்கள் அண்ணல் காந்தியின்
அஹிம்சைக் கொள்கையைப் பின்பற்றுகின்ற
சத்யாக்ரஹிகள்.

-- 83 ஆம் வருட டைரி 

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எதுவாக இருந்தாலும் அன்பே அருள்...

Thenammai Lakshmanan சொன்னது…

உண்மைதான் டிடி சகோ :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...