நிம்மதியின்மை:-
மஞ்சள் முடியைச் சுமந்து
இளமைக் கனவுகளைப் பொதித்துக்
குச்சியாய்ச் செத்துக்கிடக்கும்
பயிர்ப்பிணங்களைப் பார்க்கையில்
பயிர்த்தாடியை அரையுங்குறையுமாய்ப்
பிடுங்கி எறிந்துவிட்டு
வலிதாளாமல் முகம் விகாரமாய்
படுத்துப் புரளும் வயல்மனிதர்கள்.
ஞாபகம் பிடுங்கப்பட்ட வயோதிகமாய்
சாக்லெட் தின்றுவிட்டுக் கசக்கிப்போட்ட
ஜிகினாக்காகிதமாய்
சுளையெடுக்கப்பட்டுப் பிய்த்துப்
போடப்பட்ட தோலாய்
அரைகுறையாய்ப்
பிரசவித்த தாயாய் இருக்கும்
அந்தக் கட்டம் கட்டிக் கொண்ட
மனிதர்களைப் பார்க்கும்போதெல்லாம்
நிம்மதியின்மை.
ஒரே சமயத்தில் ஓராயிரம் பிள்ளை
பெற்று அத்தனையையும்
அப்படியே அரிவாளுக்கு
வாரிக்கொடுக்கும் தியாகத்தாய்..
அப்போதெல்லாம் பார்வையை
மறைப்பது கண்ணீர்த் திரைகளல்ல
இரத்தக் கலங்கல்கள்.
இந்தத்தாய் கருத்தரித்துப்
பிரஸவிக்கும் குழந்தைகள்
கண் எதிரே பச்சைமண்களாகவே
பிடுங்கி எறியப்பட்டபின்னும்
இவர்கள் கருத்தரிப்பது
எதற்காக இழப்பதற்கா
இன்றைக்கு இந்தப்
பேனா நோயாளிகளுக்கும்
உபாதை பொறுக்கவில்லை.
நிப் முனை வாயால்
இங்க் வாந்தி எடுத்துக்
கொண்டேயிருக்கின்றார்கள்.
இந்த நிம்மதியின்மை
வாந்திகளை எதில் ஏந்தமுடியும்
இந்தப் பேப்பர் பேசின்களில்தானோ
2 கருத்துகள்:
இதுவும் அதுவும் சரியே... (கொஞ்சம் சந்தேகமும்...!)
ஏன் சந்தேகம். டிடி சகோ ??
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))