எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 16 அக்டோபர், 2014

தாம்பத்யம்

அவன் இருதயம் படபடவென்று அடித்ததுக் கொண்டது. அவள் டிஃபன் காரியரை எடுத்தாள். அவன் வேண்டாம் சாப்பாட்டை இங்கேயே சாப்பிட்டுடுறேன். டிஃபனைக் கொண்டு போறேன் என்றான். சரி என்கிறாற் போல புன்னகையை உதிர்த்துவிட்டு அவள் அவனுக்குத் தட்டு எடுத்துப் போட்டு டைனிங்க் டேபிளின் மேல் சாப்பாட்டுக் கிண்ணங்களைப் பரப்பினாள். பூசணிக்காய் சாம்பார், முட்டைப் பொரியல், காலிஃப்ளவ்ர் மசாலா என்று வக்கணையாகத்தான் சமைத்திருந்தாள். அவனுக்குக் காரத்தால் புரையேறியது.

நாக்குக்கு அப்பிடி என்ன வக்கணை வேண்டிக் கிடக்கு என்று அம்மா அப்பாவை மிரட்டினாள். தண்ணீரை நிறையவே குடித்துவிட்டதால் வயிறு ரொம்பி விட்டது. தட்டில் தயிர் சோற்றின் தலையில் கைகழுவித் தண்ணீரைக் கொட்டினான்.தயிர் கரைந்து தண்ணீரை வெள்ளையாக்கியது. சடாரென நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தான். எப்போதும் போல் அதே புன்சிரிப்பு. அழகாய் இதழ் விரித்து என்னால்தான் இவ்வளவு பொறுமையாய் இரசனையுடன் சிரிக்க முடியும் என்று இறுமாந்து இருப்பதுபோல் லேசாய் எரிச்சல் பட்டான்.

பாகீரதி என்னால சாப்பிட முடியல . இத இந்தா வாசல்ல நிக்கிற அந்தப் பிச்சைக்காரக் குழந்தைக்குப் போட்டுறவா. என்று மென்று விழுங்கியபடி கேட்ட அப்பாவை குழம்பை வழித்து வைத்துக்கொண்டிருந்த அம்மா அதே கரண்டியால் அவரை ஒரு போடு போட்டு தானே ஒரு தண்டச்சோறு இதுல தானம் வேறயா என்க மறுபேச்சுப் பேசாமல் திண்ணையிலிருந்த தனது வாசஸ்தலத்துக்கு நொண்டி நொண்டிப் போய் அமர்ந்ததை இரண்டாவது படித்துக்கொண்டிருந்த இவன் அதிசயமாய்ப் பார்த்தான்.

ராம்குமார் வீட்ல அவன் அப்பா சொன்னா சொன்னதுதான் சட்டம். இல்லாட்டினா அவன் அம்மாவை பெல்ட்டால அடிப்பாராம். அவனும் தங்கச்சியும் மெத்தையில் போர்வையைப் போர்த்துக்கொண்டு ஒருவர் கையை ஒருவர் இறுகப்பற்றியபடி படுத்துத் தூங்கிடுவாங்களாம். தன் அப்பா மட்டும் ஏன் அம்மாவை எதிர்த்துக்கூடப்  பேசுவதில்லை என்று யோசிப்பான். பிஞ்சு மூளைக்கு எதுவும் புரியாது. அப்போதெல்லாம் அவன் அம்மா செல்லம்.

விவரம் புரிந்தபின் அவன் அம்மாவை சிறிது சிறிதாக வெறுக்கத்துவங்கினான். அம்மா ரொம்பப் பணக்கார வீட்டுப் பெண். அப்பா வாத்யார் மகனாம். அப்பா அப்பவெல்லாம் ரொம்ப அழகாய் இருப்பாராம். அம்மா கறுப்பு. ஒன்றரைக்கண் வேறு. கத்திரிக்காய்க்குக் கையும் காலும் முளைத்தமாதிரி குட்டை வேறு தன் பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணப் பையன் தேடிய சிவலிங்கத்தின் கையில் வசமாய் அகப்பட்டார் வாத்தியார். சிவலிங்கம் பையனைப் பலமுறை கோவிலிலும் கடைத்தெருவிலும் பார்த்திருப்பதால் அவன் அழகைப்பார்த்து மயங்கி வளமையை ஆதாரமாகக்கொண்டு வாத்யாரை வளைத்துவிட்டார்.

தன் பையனை மிக மோசமான குழியில் தானே தள்ளி அவனை ஓர் பிசாசுக்குத் தாரை வார்க்கப்போகிறோம் என்று தெரிந்திருந்தால் சம்மதித்திருக்க மாட்டாரோ என்னவோ . ஆனால் அந்தச் சூழலில் பணம் கண்ணை முகமூடி போட்டு மறைத்ததென்னவோ உண்மை.


----- இவ்ளோதான் கதை இதுக்கு மேலே ஏனோ எழுதாம வைச்சிருக்கேன்.. :) 1982 ஆம் வருட டைரி. 


3 கருத்துகள்:

Geetha Sambasivam சொன்னது…

ஆரம்பம் நல்லா இருக்கு. இவனுக்கு வாய்த்த மனைவி பொறுமையின் சிகரமோ? :)

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் கீதா மேம் :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...