பன்னீர்ப் புஷ்பங்கள் :-
உன் கண் முகில்கள்
என்மேல் பன்னீர்ப் புஷ்பங்களைச்
சிதறட்டும் சொரியட்டும்.
காரிமைகளின் படபடக்கும்
இடிமுழக்கங்கள் தரும் இன்பபூரிப்பு
எத்தனை காலத்தய தவம்
இந்த இதயவறண்டபூமி நனைய. ?
முழுதும் பாலையாய் மாறுவதற்குள்
எங்கிருந்து பூத்தன
இந்த வசந்தங்கள். !
சிப்பியினுள் மாட்டிக்கொண்ட
உன் கண்ணீர்த்துளியின்
முத்துப் பெண்ணை முகம் கொடுத்துப் பாரேன்.
சிலேட்டுக்குச்சி தொலைத்த மாணவனாட்டம்
ஏனிந்த ஊமையழுகை. ?
அறைவாங்கிய சிறுவனாட்டம் ஏனிந்த ஒப்பாரி. ?
தப்புச்செய்த மாணவன் ஆசிரியரிடம்
தலைகுனிந்து மாரி கண்களில்
மாறி மாறிப் பொழிவதுபோல்
யாரிடம் பாவமன்னிப்பு ?
யாருனக்குச் சாபமிட்டது
மண்மகள் பாதம் வணங்கச் சொல்லி. ?
கடலுக்குள் புதைத்துவைத்த செல்வத்தைத்
துழாவி மீட்கவா இப்படித்
தலைதெறிக்க ஓடுகின்றாய். ?
உன் காதலியுடன் ஓடிப்பிடித்து விளையாண்டு
இப்படியா கடலைக்கலக்குவது ?
என்னருமைத் தோழியே !
நீ என்னருகில் இல்லாத நாட்கள்
மலர்ந்து செடியிலேயே
வாடிவிடும் ரோஜாப்பூச்சிதறல்கள்
நீ எதிர்ப்படாத என் பாதைகள்
சுட்டெரிக்கும் இராஜபுதனத்துப்
பாலைவனங்கள்
நீயில்லாத நேரங்கள்
ஆமைக்கும் மண்புழுவுக்கும்
போட்டிவைத்த காலங்கள்.
3 கருத்துகள்:
வேதனை புரிகிறது...
நன்றி டிடி சகோ. நட்பில் கோபமும் சந்தோஷமும் சகஜம்தானே :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))