எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

விடை கிடைக்காத கேள்விகள்:-



விடை கிடைக்காத கேள்விகள்:-

கேள்விகள் கேட்பதிலேயே
என்னுடைய பொழுதுகள்
கழிந்துவிடுகின்றன.
பதிலை உருவாக்க முயன்று
தோற்று கேள்வியையே தரம்பிரித்து
அர்த்தமற்றதாய் ஆக்கி விடுகின்றேன்.
புதிதுபுதிதாய்க் கேள்விக்கணைகள்
ஆத்மாவின் அடிச்சுவட்டில்
கிளர்ந்து எழுகையில்
விடைகாண முடியாமல்
அடிபட்டு வீழ்கிறேன்.
இப்படியும் இருக்கக்கூடும் என்ற
யூகங்களை நம்பமுடியாமல் போகின்றது..
இருக்கலாம் என்பது அறியாமையில் விளைந்து
தலைகுனிய வைக்கின்றது.
இருக்கவேண்டும் என்ற உறுதியான பதில்
இருக்கின்றது என்ற விடை
எப்போது கிடைக்கப் போகின்றது.
தொடுக்கப்பட்ட கேள்விகளையே
புரிந்துகொள்ள முடியவில்லை.
அந்த ஸரஸ்வதி ஏன் இன்னும்
வீணையை வைத்துக்கொண்டிருக்கின்றாள்.
சிந்தனைச் சாட்டைகளுக்கு
உடல் வலித்ததுபோல் அவளுக்கும்
விரல்கள் வலிக்காது?
உணவைக் காணாவிட்டாலும்
மண்ணைக் கிளறிப் பார்க்கும்
கோழியின் தாபம்.
கேள்விகள் கேட்பதையே
அதில் அமிழ்ந்து போவதையே
போதையாகக் கொண்டு
சுகம் கண்டு திரிகின்றேன்.
விடை தேடி அலுக்கும்போது
நமக்கென்ன அதைப்பற்றி
என்றிருக்க முடியாமல்
மீண்டும்
மீண்டும்
அறிவு புடைத்த வக்கிரமாய்த்
தோண்டிக்கொண்டே இருக்கின்றேன்.


குட்டைகளை அடித்தோண்டுவதே
பிழைப்பாய்ப் போய்விட்டது
பூவைக்கண்டு மணம் நுகர்ந்து
கும்மாளமிட்டதெல்லாம்
கலைந்து போய்விட்டது.
அதன் வேரின் அலைச்சல்
எங்குவரை என்பதைக் கண்டுபிடிப்பதே
பரிதவிப்பாய் ஆனது.
மலர்ந்த முகங்களைப்
பார்த்துப் பரவஸிக்க முடியவில்லை.
இதற்குள்ளும் எத்தனை
போலிகள் இருக்குமோ ?
வானில் இந்த நிமிடம்
சாசுவதமாய் இருந்தமேகக்குவியல்கள்
துணுக்குகளாய்ச் சிதறித்
தூரதேசம் பறக்கின்றன.

-- 1985 ஆம் வருட டைரி 

4 கருத்துகள்:

சரஸ்வதி ராஜேந்திரன் சொன்னது…

கேள்விக்கான பதிலை தேடுவதில்தான் தென்படுகிறது கவிதைக்கான கரு ...தேடலுக்கு முடிவில்லை ,,இன்னும் தோண்டுங்க ,,,, நிறைய க
விதை புதையல்கள் கிடைக்கும் நாங்களும் எஞ்சாய் பண்ணுகிறோம்
சரஸ்வதிராசேந்திரன்

Yaathoramani.blogspot.com சொன்னது…

மிக மிக அற்புதம்
கவிதையின் ஜீவனை கடைசி
இரண்டு வரிகளில்
சொல்லிச் சென்றவிதம் மனம் கவர்ந்தது
தொடர் கேள்விகளும் அற்புதக்கவிதைகளும்
தொடர நல்வாழ்த்துக்கள்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சரஸ் மா :)

நன்றி ரமணி சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...