ஒரு ஜீவதாரை
உருவாகியிருக்கிறது
முதல் புறப்பாட்டிலேயே
முகம் சுருங்கிப்போன
இலைக்கிழவனாட்டம்
முனகிப் புறப்படுகின்றது.
தலைகுனிந்து தன்பாதம்
பார்த்து அடிகளை எண்ணி
அடக்கமாய் நடக்கிறது.
யாமம் முடிந்து
அடுத்த ஜாமத்தில் ஜனித்த
குட்டிமண் கொப்புளத்தின்
வெளிப்பாடு அது.
மண்ணுக்குச் சமாதியும் கட்டி
மௌனமாய் அஞ்சலி செலுத்தியும்
அசைந்து போகிறது.
இயற்கையைக் குடித்துக்
குடித்து அந்த ஜீவதாரைக்கு
ஜலதோஷம் பிடித்துப்போனது.
மண்சுருட்ட உடல் வலித்து
மண்ணடக்கிச்
செருக்காகச் செல்கின்றது
ஓ! அந்த ஜீவதாரைக்கு
இலக்குப் புரிந்துபோனதோ ?
விமர்சனக் கோரைகளிடம்
உறவாடி நன்றியிறுத்துவிட்டுக்
கண்டனத் தென்னைகளை மடக்கி
முடக்கிப் போடுகின்றது..
மூச்சடக்கை மூச்சடக்கி
முத்துக்குளிப்பவனின் லாவகமாய்
ஒரு நீலப்பரப்பு வலம்புரிக்கு
அலைபாய்கின்றது.
ஓ! அது ஜீவதாரை
ஜலதாரையல்ல
இந்தக் கவிதை யாக குண்டத்துக்கு
நெய்வார்க்கும் அமுதசுரபி.
மனச் செம்பிலிருக்கும்
புனிதக் காவிரியை
வெளியே சிதறவிட்ட
பேனாக்காக்கைகள்.
புனிதம் நீரில் இல்லை
அதைப் பத்திரப்படுத்தியதால்
ஒரு ஜீவதாரை
லாயத்தில் கட்டவிழ்ந்த
இராஜ புரவியாய் சேணம் எரித்துக்
கடிவாளம் அறுத்து மூர்க்கமாய்
சங்கமத்தை நோக்கிப் பாய்கின்றது.
3 கருத்துகள்:
ஜலதோஷம் எனக்கு ரொம்பவே பிடிக்குமாக்கும்...!
அஹா.. கருத்துக்கு நன்றி தனபாலன் சகோ :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))