என்னில்
பூத்த இந்தப் பூக்களை
இப்போதெல்லாம்
யாரும் பார்ப்பது
எனக்குப்
பிடிக்கவில்லை.
அவர்களின்
மூச்சுப்பட்டு
இவைகள்
சாம்பலாகின்றன.
இந்த
வாசல்களில் நான்
பொறித்திருக்கும்
கோலங்கள்
எனக்காக
மட்டுமே
பிறரின்
கண்பட்டு மாலைக்குள்
இவை
மக்கிப் போவது
சுத்தமாகப்
பிடிக்கவில்லை.
என்னுடைய
பறவைகள்
கூட்டுக்குள்ளேயே
இருக்கட்டும்.
அவை
காற்றுத் தேர் ஏறி
உலகம்
சுற்றும் வானம்பாடியாய்
ஆக வேண்டாம்.
என்
பறவைகளுக்கு
எல்லாவற்றிலும்
பயம்
என்னிடத்தில்
தவிர..
என்னுடைய
நிலா
இந்த
நோட்டு வானில்
மட்டுமே
உலா வரட்டும்
எல்லார்
கண்ணிலும்
கனவு
பொறிக்கும்
இரவுத்
தேவதையாக
ஆக வேண்டாம்.
இந்த
நெருப்புப் பொறிகளில்
குளிர்காய்வது
என்
பிடித்தமான
தினசரி
நிகழ்ச்சி.
இது
ஒன்றும் ஆகுதியாக
ஆகவேண்டாம்,
இந்தச்
சிறையை விட்டாலும்
என்னின்
பறவைகளுக்கு
வேறொரு
பெரிய
அச்சுக்கூண்டுதானே
கிடைக்கப்
போகிறது
இவை
மருதாணிகளாகவே
இருக்கட்டும்.
மெல்லக்
கைபற்றிக்
கிசுகிசுத்து
இரகசியமாய்ச்
சிவந்து
மெல்லப்
படியும் இவை
மருதாணிகளாகவே
இருக்கட்டும்.
மினுக்க
ஆசைப்பட்டு
சிலநேரம்
உதிர்ந்துபோகும்
நெயில்
பாலிஷ்களாய் இல்லாமல்.
இவை
திரைகளுக்குள்ளும்
கதவுகளுக்குள்ளும்
பதுங்கிக்
கிடக்கும்
கம்பிகளாய்
இருக்கட்டும்.
சூரிய
வெளிச்சமும்
காற்றும்
மழையும் பட்டு
ஒரு
அற்புதமும்
நிகழப்
போவதில்லை.
என்னின்
நொண்டிப்பறவைகள்
நடக்க
மட்டுமே தெரிந்தவை
பறப்பதை
அறியாதவை.
அவை
வெளியுலகம் தெரிந்து
வேதனைப்படாமல்
கூட்டுக்குள்ளேயே
சந்தோஷித்திருக்கட்டும்.
டிஸ்கி:- 82 ஆம் வருட டைரி.
3 கருத்துகள்:
என்னுடைய நிலா
இந்த நோட்டு வானில்
மட்டுமே உலா வரட்டும்
அருமை சகோ...
குஷியாக இருக்கு...
கருத்துக்கு நன்றி கில்லர்ஜி சகோ
நன்றி தனபாலன் சகோ :)
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))