குளிர் :-
தூக்கம் போஸ்டர் ஒட்டும்
சன்னல்கள் அன்பை
அன்னமாய்ப் பிரித்தெடுத்து
மௌனமாய்ப் பனிசிதறும்.
தீபக்கலங்கலாய் நடுங்கும்
குளிரடித்து விறைக்கும்
மனம் பாவாடை அடிப்பக்கம்
காலிழுத்து உள் செருகி முடங்கும்.
நீ அனுப்பும் சன்னமுத்தம்
காற்றில் அழுக்குப்படும்.
கண்கள் பேசிக்கமுடியா
தூரமிருந்தும்
சின்னதாய் நேசச்சிறகு
உதிர்த்து ஒளியும் பறவை நீ.
காற்று வாசக்குளிர் பூசும்.
புளியின் பிஞ்சுக்குள் பொதிந்தும்
மழைச்சொட்டு பொட்டெனத் தெறிக்கும்.
நீர் சாரைச் சுவைத்துப் பார்க்கும்.
மௌனத் தடங்கள் அங்கொன்றும்
இங்கொன்றும் பதியும்.
எங்கெங்கும் நிசப்தம்
சின்னச் சின்ன எரிமலைகள் தவிர்த்து.
தூக்கக் கலக்கத்தில் கால்
போர்வை மீறிக் குளிரில் பயப்படும்.
அலைந்தலைந்து போர்வை தேடி
இறுக்கப் பிடித்துத் தூக்கம் விலக்கி
அழுத்தமூடிச் சுருண்டு கொள்ளும்.
மண்புழுவின் நெளிச்சல்கள்
ஓடி ஓடி மண்ணில்
உடல்நுழைத்துக் குளிர் தவிர்த்து
மெல்ல மெல்ல இடம் நகரும்.
வழு நொழுவென்று
இனம் புரியா உணர்வாய்.
மெல்லப் புரண்டு
மண்போர்வை போர்த்தும்.
கால்கள் தரையை
உதைக்க அஞ்சும்.
செருப்பில் நுழைக்க
வியர்க்கும்.
கைகள் சில்லிடும்
முகத்தருகே கைகொணர
மூக்கு உஷ்ணமாய்ச் சீறும்.
கன்னத்தில் கைபட்டுப்
பல் பட்படுக்கும்.
மனசுக்குக் குளிர்காய்ச்சல்
பிடிக்கும்.
அழுத்தமாய் எலும்பில் புகுந்து
கட்டில் ஊடுருவிக் குளிர்பரவும்.
தூக்கம் ஒடும்
படுக்கையைக் காலிபண்ணி.
3 கருத்துகள்:
அருமையான கவி தை. வாழ்த்துகள் சகோ.
நன்றி கில்லர்ஜி சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))